இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, June 21, 2011

ஓவியம் (கவிதை) :

பெண்ணென்னும்

ஓவியம் பார்த்து

கவிதை ஒன்று

எழுதினேன்.

 

காப்புரிமை

வழக்கு போட்டான்

பிரம்மன்...

 

அவன் படைப்பை

நான்

காப்பி அடித்து

விட்டேன் என்று !!!

 

ஹைக்கூ :

கடந்து சென்றது

ரோஜாக்கள் ஒட்டிய கார்

என் கைகளில்

மல்லிகை பூ !

============================

மேகம் கறுத்தது

முகம் இருண்டது

சலவை தொழிலாளி !

============================

கோடை முடிகிறது

வருத்தப்பட்டான்

குச்சி ஐஸ் கடைக்காரன் !

============================

சிரிக்கும் பேரக்குழந்தையை

தொட்டு கொஞ்ச முடியவில்லை

வீடியோ சாட்டில்

தாத்தா, பாட்டி

============================

ஆசிரியர் என்னும் 'ஏணி' :

சமீபத்தில் கலெக்டர் ஒருவர் தனது பெண் குழந்தையை அரசினர் பள்ளியில் சேர்த்ததை செய்தித்தாளில் படித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவர் மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொண்டது அவருடைய மன முதிர்ச்சியை காட்டுகிறது. அரசு பள்ளிகள் ஏழைகளுக்கு மட்டும் தான் என்பதை உடைத்தெறிந்து, நல்லதொரு விஷயத்திற்கு வித்திட்டுள்ளார். அவருடைய குழந்தையும் அதை ஏற்று மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சத்துணவு சாப்பிட்டதையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
 
ஒரு வேதனைக்குரிய செய்தி என்னவென்றால் ஒரு தமிழன், ஒரு தமிழ் பள்ளியில் தன் குழந்தையை சேர்ப்பத்தை ஏதோ உலக அதிசயம் போல ஊடகங்கள் பறைசாற்றியதை 'நம் தமிழ் மண்ணின் பெருமை இப்படியா சிறுத்து போய்விட்டது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயமல்லவா இது' என்று நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. எப்படியோ ஒரு அரசு பதவியில் இருக்கும் ஒருவருக்கு, தன் பிள்ளையை 'அரசினர் பள்ளி'யில் சேர்க்கும் எண்ணம் வந்ததே அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் மற்றும் ஒரு சிறிய பூச்செண்டும் கொடுக்கலாம். இதில் யோசிக்க வைத்த விஷயம் என்னவென்றால் அரசு அலுவலர்களே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்பதே.
 
எனது ஐயம் : ஒரு அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் / ஆசிரியை / இதர அலுவலர் யாருமே தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்ப்பதில்லை ( எங்கேயாவது ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம் ). தான் பயிற்றுவிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்காத ஆசிரியர்கள், மற்ற பிள்ளைகளுக்கு எப்படி மிக சிறந்த 'ஏணி' யாக இருக்க முடியும்? சிந்திப்பார்களா இனியாவது?

Saturday, June 18, 2011

புதிய பாடத் திட்டம் :

கல்வி வியாபாரம் மும்முரமாக நடக்கும் தமிழகத்தில், சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கும்போது அப்படியே மெய் சிலிர்க்கிறது. என்ன கொடுமை 'சரஸ்வதி'? தனியார் பள்ளியில் பிள்ளையை சேர்க்க துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று மொத்தமாக சுரண்ட நினைக்கும் பள்ளி நிர்வாகம் ஒருபுறம், இதில் பிள்ளைகளின் பாடுதான் திண்டாட்டமாகிறது. பாவம் பெற்றோரையும் குற்றம் கூற முடியாது. வேலைப்பளு அவர்களை அவ்வாறு கட்டாயப்படுத்துகிறது. தான் கவனிக்காவிட்டாலும் பள்ளியும், ஆசிரியரும் கவனிப்பார்கள் என்று எண்ணி நல்ல தரமான பள்ளியை நோக்கி படை எடுக்கிறார்கள். இதுதான் சமயம் என்று பள்ளி நிர்வாகமும் தனி கட்டணம், சிறப்பு கட்டணம், கட்டட மேம்பாடு கட்டணம், பேருந்து கட்டணம், புத்தக கட்டணம் மற்றும் இன்ன பிற கட்டணங்களை விதித்து பெற்றோரை விழி பிதுங்க வைக்கிறார்கள்.
 
தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலையா? இல்லை இந்தியா முழுவதுமே இந்த நிலை தானா? கடவுளுக்கு தான் வெளிச்சம். புற்றீசல் போல இன்று எங்கு நோக்கினும் பள்ளி, கல்லூரி என்று இருந்தாலும் இந்த கட்டண முறை அனைத்தையும் பாழ் படுத்திவிடுகிறது. இன்றைய எல்.கே.ஜி யின் விலை 20 ஆயிரம். நாளைய கல்லூரி கட்டணத்தை நினைக்கும் பொது இதயம் நின்று விடும் போலிருக்கிறது.
 
இவ்வளவு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் இருந்தும் மக்கள் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கல்'ஐ எதிர்க்கும் இந்நாட்டு குடிமக்கள் பள்ளிகள் தனியார் மயமாக்கல்'ஐ வரவேற்றது ஏன்? நல்ல தரமான கல்வியை தர அரசு பள்ளிகள் முன்வந்தாலும், தனியாருக்கு இருக்கும் மவுசு இவற்றுக்கு இல்லை என்றே சொல்லலாம். இதற்கு 'பாட திட்டமும்' ஒரு காரணம். உலக அளவில் ஒருவன் உயர தாய்மொழி வழி கல்வி உதவாது என்ற நல்லெண்ணம் (!) தான் காரணம். இதற்கு பாட திட்டத்தில் நல்ல மாற்றம் தேவை. மெட்ரிக், CBSE க்கு இணையானதொரு பட திட்டம் தேவை.
 
பெற்றோர்களே! தனியார் பள்ளிகளை ஒதுக்கி, அரசு பள்ளிகளின் தரம் உயர அரசுக்கு தோள் கொடுங்கள். இந்த கல்வி கட்டண பூதத்தை நாட்டை விட்டே விரட்டுங்கள்.

தப்பும் தவறும் :

நாம் தெரிந்தே செய்யும் தப்புகளும் தெரியாமல்(!) செய்யும் தவறுகளும்...
 
1. தன் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'புகை' பிடிப்பது
2. தன் குடும்பத்தின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'மது' அருந்துவது
3. பிறரின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'சாலை விதி'யை மதிக்காதது
4. தன் மற்றும் உடன் வருபவரின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'தலை கவசம்' அணியாதது
5. மக்களின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'லஞ்சம்' வாங்குவது
6. நாட்டின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'ஊழல்' செய்வது
7. உலகத்தின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'பூமி வெப்பமயமாதலுக்கு' துணை போவது
8. நாளைய தலைமுறைக்கு தேவையில்லை என்று, இருக்கும் வளங்களை தின்று தீர்ப்பது
9. BLOG ஒன்றை நிறுவி இப்படி அடுத்தவங்களை குறை சொல்வது (சத்தியமா இது எனக்கு மட்டும் பொருந்தும்)
10. ......
11. .......
 
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
இவற்றுள் தப்பு எவை, தவறு எவை என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

காதலும் நாமும் :

சில நாட்கள் முன்பு மின்தொடர் வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. அதில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு வயதான ஜோடி, பயணிகள் ஏறுமிடத்தில் அமர்திருந்தது. அதில் அந்த பெண்மணிக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். பெரியவருக்கு சுமார் 85 வயதிற்கு மேலிருக்கும். அந்த தள்ளாத நிலையிலும் தான் மனைவியை மடிமேல் படுக்க சொல்லி, ஆதரவாய் அவர்களின் தலையை வருடியவாறு வந்தார். வண்டியில் அதிக கூட்டமில்லை என்பதால் அவர்களுக்கு தொந்திரவு ஏதும் ஏற்படவில்லை.
 
மெதுவாக பேச்சு கொடுத்ததில், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதாகவும், தங்களுக்கு தாங்கள் மட்டுமே துணை என்றும், அதில் ஒருவருக்கு எதேனும் ஆகிவிட்டால் உலகில் உயிர் வாழ மற்றவருக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் பெரியார் புன்னகை பூத்த முகத்துடனே சொன்னார். ஆனால் முடிக்கும் பொது அவரால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கணவன் கண் கலங்குவதை கண்ட அப்பெண்மணி அவருக்கு ஆறுதல் சொல்லி, அவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டார். அருகில் இருந்த அனைவரும் சிறிது நேரம் செய்வதரியாது நின்று இருந்தோம்.
 
இறங்க வேண்டிய இடம் வந்தது. அந்த பெண்மணியால் நடக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத வயதிலும் தன் மனைவியை தூக்கிக்கொண்டு இறங்கிய அந்தப்பெரியவரின் மன உறுதியை பார்த்து வாயடைத்து போனேன். நிச்சயம் 'கடவுள்' துணை இருப்பார் என்று தன் மனைவியை தேற்றிக்கொண்டே அவர் சென்றதை பார்த்துக்கொண்டே என் பயணத்தை ஒருவித மனபாரத்துடன் தொடர்ந்தேன்.
 
திருமணம் முடிந்து மறுநாளே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இன்றைய தலைமுறைக்கு, காதல் என்றால் என்னவென்று எப்படி சொல்லி புரியவைப்பது?
 
நீங்களாவது சொல்லுங்களேன் 'காதல்' என்றால் என்னவென்று?

Friday, June 17, 2011

லஞ்சம் & ஊழல் :

எனது பெற்றோர் இதுவரையில் லஞ்சம், ஊழல், பிறர் பொருள் அபகரிப்பு, அரசுடமை ஆக்ரமிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடவில்லை. நானும் இதுநாள் வரை இதுபோன்ற இழி செயல்களை செய்ததில்லை. எனது குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன். நான் அவர்களுடன் இருந்து கவனிக்க முடியாவிட்டாலும், நான் இட்ட விதை அவர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. அவர்களுக்கு பின் வருபவர்களும் அவ்வாறே இருக்க இன்றிலிருந்தே 'ஒழுக்க' கட்டுப்பாடு மனதளவில் விதிக்கப்பட்டு விட்டது.
 
இதன் மூலம் என்னால் மற்றும் எனது சந்ததியினரால் 'லஞ்சம், ஊழல், பிறர் பொருள் அபகரிப்பு, அரசுடமை ஆக்ரமிப்பு' போன்றவை வளராது என்பதை உறுதியுடன் கூறலாம். அதுபோல் தோழர்களே நீங்களும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். இளைய தலைமுறையை லஞ்சம் & ஊழல் போன்ற கொடிய நோய்க்கு மருந்தாய் வளர்ப்போம். லஞ்சம் & ஊழல் இல்லாமல் இந்தியாவை உருவாக்குவோம்.
 
நமது அப்துல் காலம் அவர்கள் சொன்னது போல வீட்டுக்கு வீடு நல்ல மனிதர்களை வளர்ப்போம். இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்.

Wednesday, June 15, 2011

காணாமல் போனவை:

உலகில் காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களினால் பலவித உயிரினங்கள் அழிந்தும் மற்றும் சில உயிரினங்கள் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டும் உள்ளன. அதே போல் நாகரீக வளர்ச்சியினால் நாம் பல பொருட்களை உபயோக படுத்தாமல் விட்டு, காலப்போக்கில் அவை நமது உபயோகத்தில் இருந்து மறைந்து இன்று அழிந்தும் போய்விட்டன.

 

அவற்றுள் நமது பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் சில, (எங்கேயாவது கண்ணுக்கு புலப்பட்டால் எடுத்து பாத்திரப்படுத்தி கொள்ளுங்கள்)

 

1. கேசட் (பாட்டு)

2. கேசட் (படம்)

3. வாக்மேன்

4. ஃபிளாப்பி டிஸ்க்

5. ஃபிலிம் காமிரா

6. அஞ்சல் அட்டை

 

இதே போல் இன்று அடுத்த வரிசையில் நிற்கும் சில பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்று,

 

1. அஞ்சலகம் – இ-மெயில்

2. காசோலை – இ-வர்த்தகம்

3. செய்தித்தாள் – இ-பேப்பர்

4. புத்தகம் – இ-புக்

 

இதுபோல் நாளுக்கு நாள் நம்மிடையே காணாமல் போகும் விஷயங்கள் பல. அவற்றுள் சிலதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

 

1. தொலைபேசி (Landline Phone)

2. மேசை கணினி (Desktop)

3. தொலைகாட்சி பெட்டி (Like CRT Monitor)

4. சி‌டி மற்றும் டி‌வி‌டி

 

அறிவியல் வளர்ச்சியால் இவைகளை இழந்தாலும், புதிய ஒன்றை நாம் வரவேற்க தவறுவதில்லை.

Monday, June 13, 2011

ஷேர் ஆட்டோ :

சென்னையில் ஷேர் ஆட்டோ பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இருப்பினும் எனது சில அபிப்ராயங்களை சொல்ல நினைக்கிறேன். ஒருநாள் எனது இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சாலை ஓரம் நின்றிருந்த ஒரு பெண்மணி திடீரென கை காட்ட, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சட்டென்று இடது பக்கம் ஒதுங்கிய வண்டி நான் எதிர்பாராத நேரத்தில் ஏன் வண்டியை குறுக்கிட்டு நின்றது. மோதாமல் தவிர்க்க நான் எனது வண்டியை திருப்ப, பின்னால் வந்த தோழர் என்னை வசை பாடி செல்ல, அன்று ஏதோ என் நல்ல நேரம் நான் தப்பித்தேன்.

 

       பேருந்து நிற்பதற்கு 'பேருந்து நிறுத்தம்' என்று உள்ளது. சாலையில் நாம் பயணிக்கும் பொது கவனமுடன் செயல்படலாம். ஆனால் இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் திருப்பலாம், எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம், யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம். இப்பிரச்சினைக்கு வழி இல்லையா?

 

       ஏன் இல்லை.

      

       மனமிருந்தால் அனைத்தையும் நடத்தி காட்டலாம் ஏன் இந்த கவனக்குறைவு? இரண்டு பக்கமும் தவறு நடக்கிறது. பொது மக்களாகிய நாமும் சிறிது தூரம் நடக்க பயந்து நின்ற இடத்தில் ஆட்டோவை கூப்பிடுகிறோம். ஏன்? அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு சென்று அங்கு ஆட்டோவை அழைக்கலாமே. போக்குவரத்து துறை சில வரைமுறைகளை விதிக்கலாமே? அல்லது 'பேருந்து நிறுத்தம்' போல் 'ஷேர் ஆட்டோ நிறுத்தம்' ஒன்றை நடைமுறை படுத்தலாமே? நனவாகுமா?

Wednesday, June 1, 2011

ஐம்பூதங்கள் (கவிதை) :

அவள்

பார்வை மழை

 

அவள்

பேச்சு தென்றல்

 

அவள்

கூந்தல் கார்மேகம்

 

அவள்

தீண்டல் உஷ்ணம்

 

அவள்

அன்பெனும் ஊற்றெடுக்கும்

நல்ல நிலம்

 

ஐம்பூதங்கள்

அவளில் கண்டேன்

 

மெய் மறந்து

ரசித்து நின்றேன்.

 

சிறு கைகள் நீட்டி

பிள்ளை மொழியால்

எனை அழைத்தாள்

 

கை இரண்டில்

வாரிக்கொண்டேன்

 

என் மகளே

என்று அணைத்துக்கொண்டேன்

Friday, May 27, 2011

மெயிலில் வந்தவை :

சில உன்னத தத்துவங்கள்....(பொது)

 

       பணம்தான் எல்லாம் – தவறான கூற்று.

       இப்போ ATM CARD, DEBIT CARD வந்தாச்சு....

 

       விலங்குகளை நேசியுங்கள்...

       ஆகா என்ன ருசி.

 

       தண்ணீரை சேமிப்பீர்

       பீர் அருந்துவீர் !

 

       பக்கத்து வீட்டில் உள்ளோரை நேசியுங்கள்

       மாட்டிக்கொள்ளாமல்.....

 

 

மாணவர்களுக்கு : -

 

       படிப்பு ஆரோக்கியமானது... அதனால்

       அதை நோயாளிகளுக்கு விட்டுக்கொடுத்துவிடலாம்,

 

       புத்தகங்கள் புனிதமானவை...

       எனவே அவைகளை தொடக்கூடாது

 

       வகுப்பறையில் சத்தம் போடக்கூடாது...

       தூங்குபவருக்கு தொல்லை ஏன்?

Wednesday, May 18, 2011

கிரிக்கெட் (சிறுகதை):

ராமு உள்ளே நுழையும்போதே அப்பாவின் அதட்டல் தடுத்து நிறுத்தியது. விடுமுறையன்று நண்பர்களுடன் விளையாட சென்றதன் விளைவு. அதுவும் கிரிக்கெட் என்றால் சோம்பேறிகளின் விளையாட்டு என்று இன்னுமும் கொஞ்சம் அனல் அதிகம் பறக்கும். வழக்கம் போல் அல்லாமல் இன்று தண்டனை வேறு விதமாய் வந்தது பள்ளிக்கு செல்ல கூடாது என்று. சைக்கிள் சாவியும் பறிக்கப்பட்டது. இது என்ன புதுக்கதை என்று கேட்ட அம்மாவின் வார்த்தைகளும் காற்றில் கரைந்து போயின.

ஒன்று, இரண்டு என்று நாட்கள் நகர்ந்தன, ஆனாலும் அப்பாவின் கோபம் தணிந்தபாடில்லை. இன்று நடந்தாவது பள்ளிக்கு சென்று விடலாம் என்று புத்தக பையை எடுத்தவன் அப்பாவின் உருட்டு கண்களை பார்த்து மிரண்டு போய் அப்படியே வைத்துவிட்டு திண்ணையிலேயே அமர்ந்து போனான். மறுநாள் அப்பா இல்லாத நேரம் பார்த்து நடந்தே போய்விடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டான். நாட்கள் நகர நகர அப்பாவின் கோபமும் தணிந்தது. இப்பொழுது ராமு திரும்பவும் சைக்கிள் எடுத்து பள்ளிக்கு சென்று வருகிறான். கிரிக்கெட் என்றால் காத தூரம் ஓடி விடுவான். சும்மாவா, ஒரு மாதம் வெய்யிலில் 15 கி.மி. நடந்து பள்ளிக்கு சென்றவனாயிற்றே.

"மீ.. நான் வெளியில் போறேன்" கிறீச்சீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் பறக்கும் இரண்டாவது பேரனின் குரல்கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டார் ராமு. என்ன மாமா வாக்கிங் போகாலயா? அன்புடன் கேட்ட மருமகளிடம் "இதோ கிளம்பிட்டேன்மா" என்றவாறு பக்கத்து பூங்கா நோக்கி நடக்க ஆரம்பித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் மாதவனின் தாத்தா ராமு.

Thursday, May 12, 2011

கனவு காண்கிறேன் – பலிக்குமா ?

    இந்தியா – வளம் கொழிக்கும் தேசம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் முன்னிலை வகிக்கும் நாடு நாம் இந்தியா. இப்படியெல்லாம் மார்தட்டிக்கொள்ள ஆசைதான். ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லையே (!). என்ன செய்ய ? ஊழல் பெருச்சாளிகள் இங்கிருந்த வளங்களை எல்லாம் சுரண்டி ஸ்விஸ் வங்கியில் அல்லவா சேர்த்திருக்கின்றன. அவற்றை மீட்க முடியுமா? நமது நாடு வளம் பொருந்திய நாடாக, பலம் பொருந்திய நாடாக மாறுமா ? இல்லை இவை அனைத்தும் வெறும் கனவாகவே போய்விடுமா? எல்லாம் 'ஆண்டவனுக்கு' தான் வெளிச்சம்.

 

       அன்று வெள்ளையனை வெளியேற்றி அனுப்பிவிட்டு சந்தோசமாய் கூத்தாடினோம் – இனிமேல் நம் வீட்டை நாமே சுரண்டலாம் என்று. சுரண்டியதை வீட்டு மூலையில் வைத்திருந்தாலும் பரவாயில்லை. யாரை வெளியேற்ற அன்று போராட்டம் நடத்தினோமோ அந்த அன்னியரிடமே கொடுத்து வைத்துள்ளோம். சுதந்திரத்தின் பயனை நன்றாக அனுபவிக்கிறோம்.

 

       வருமான வரி ஏய்ப்பு என்று ஒரு பூதம் இன்று நம் நாட்டில் உலா வந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.. ஊழல் பெருச்சாளிகள் ஒரு வகை என்றால், இவர்கள் இன்னொரு வகை. நேர்மையாக வாங்கும் சம்பளத்திற்க்கு வரி கட்ட என் தயங்குகிறோம். வரும் வருமானத்தை மறைத்து ஏன் நாட்டின் வளர்ச்சியை குலைக்கிறோம். இது நம் தேசமல்லவா. நாளை ஒரு பிரச்சனை என்றால் அது நமக்கும் சேர்த்துதானே வரும். பிரச்சினை என்று வந்தால் வெளிநாட்டில் வேலை செய்யும் தன் சொந்தங்களோடு சென்று தங்கிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு சந்தோசமாய் சுற்றி திரியும் இது போன்ற தேச துரோகிகளை என்னவென்று சொல்வது.

 

       உலக வங்கியில் கடன். சகோதர நாடுகளிடம் கடன். நட்புறவு நாடுகளிடம் கடன். இப்படி கடன் மேல் கடன் வாங்கி சுவிஸ் வங்கியை நிரப்புவது எதற்காக? நாடு கடனாளியாய் இருக்க நாம் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் ஏன்? கடனை அடைக்க தலையை கொடுக்க சொல்லவில்லை. இனியும் நம் நாடு கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் வேண்டுகிறோம்.

 

       போனது போகட்டும், இனிமேலாவது

 

1.   லஞ்சம் கொடுக்காதே / வாங்காதே.

2.   ஊழல் செய்யாதே / துணை போகாதே

3.   வரி ஏய்ப்பு பசெய்யாதே

4.   வளங்களை கருப்பு பணமாய் பதுக்காதே

5.   நாட்டை சுரண்ட நினைக்காதே

 

என்று உங்கள் பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுங்கள். தேசிய கீதமாய், தாய் மொழி வாழ்த்தாய், ஒரு நல்ல குடிமகனின் உறுதிமொழியாய் எண்ணி இதனை பின் வரும் சந்ததிகளாவது பின்பற்றட்டும். இன்று இல்லை என்றாலும் நாளை நம் இந்தியா வளம் பொருந்திய நாடாகவும், பலம் பொருந்திய நாடாகவும் திகழட்டும்.   

 

       கனவு காண்கிறேன் – பலிக்குமா ?

Thursday, May 5, 2011

மின்வெட்டு :

மின்வெட்டு – இன்று தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது. கோடை காலங்களில் மனம் நோக்கடிக்கும் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது. நமது மின்தேவை என்பது வருடம் முழுவதும் சீராக இருப்பதில்லை. குளிர் மற்றும் மழை காலங்களில் குறைந்தும் கோடை காலங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. நமது நாட்டில் மின் உற்பத்தியில் அதிக மாற்றங்கள் இருப்பதில்லை. எனவே தான் கோடைகாலங்களில் மின்வெட்டால் அவஸ்தைப்படுகிறோம்.

 

       இவ்வாறு மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் தொழிற்சாலைகள், தொடர்வண்டிகள், மற்றும் முக்கியமானவற்றுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு மற்றைய வீடுகள், பள்ளிகள், இதர பல இடங்களுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக நகரங்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு கிராமங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. நாட்டின் முதுகெலும்பாம் "விவசாய" த்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.

 

       நல்ல குடிமக்களாகிய நாம் என்னவெல்லாம் செய்யலாம், இந்த மின் வெட்டை குறைப்பதிற்கு. அரசையே குறை கூறாமல் நாமும் நமது கடமையை செய்வோம்.

 

1.   தேவை இல்லாத நேரங்களில் FAN, AC, TV, COMPUTER போன்றவற்றை அணைத்து வைக்கலாம். (STANDBY ம் மின்சாரம் எடுக்கும் – எனவே அதையும் தவிர்க்கலாம் )

2.   முடிந்தவரை வீட்டில் இயற்கை காற்றோட்டமுள்ளதாக அமைத்தால் மின்விசிறியின் தேவை அதிகம் இருக்காது.

3.   AC உபயோகிப்போர் பலர் "அண்டார்டிகா" போல் வேண்டும் என்று 16 DEG இல் வைக்கின்றனர். உடல் ஏற்றுக்கொள்ளும் வெப்பநிலையில் வைத்தாலே போதும். மனித உடலுக்கு 22 முதல் 26 வரை வைக்கலாம் (வெளிப்புற வெப்பநிலையை பொறுத்து). இதனால் பூமி வெப்பமாதலையும் தவிர்க்கலாம். மின்வெட்டையும் குறைக்கலாம்.

4.   இன்று கணினி உபயோகிப்போர் அதிகம். உபயோக நேரம் போக மற்றைய நேரங்களில் அணைத்து வைப்பதால் கணிசமான மின்சாரத்தை சேமிக்கலாம்.

5.   மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை தேவை இருந்தால் மட்டும் உபயோகப்படுத்தலாம் அல்லது மாற்று வழி இருந்தால் செயல்படுத்தலாம். உதாரணமாக, வெண்ணீருக்கு சூரிய அடுப்பு உபயோகிக்கலாம். INDUCTION STOVE க்கு பதிலாக GAS STOVE / OIL STOVE பயன்படுத்தலாம்.

6.   இன்று TV தவிர்க்க முடியாத நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால் கோடைகாலங்களில் TV தவிர்த்து சுற்றுலா , விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

 

       இவையெல்லாம் மின்வெட்டு வராமல் தடுக்க வழிகள். வருகின்ற மின்வெட்டை சமாளிப்பது எப்படி?

 

1.   வீட்டில் INVERTER உபயோகிக்கலாம்.

2.   மின்சாரத்தையே நம்பி இல்லாமல் ALTERNATE POWER SOURCE ஐ பயன்படுத்தலாம். உ.தா. சூரிய அடுப்பு, சூரிய சக்தி விளக்கு, சூரிய சக்தி விசிறி, சூரியசக்தியில் இயங்கும் இன்னபிற உபயோக பொருட்கள்.

3.   முடிந்தால் சிறிய அளவுள்ள GENERATOR ஒன்று வாங்கி வைக்கலாம்.

 

       இவை எல்லாம் பணம் படைத்தவர்களுக்கு. சாதாரண மக்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களுக்கு இருக்கவே இருக்கு பனையோலை விசிறி, மண்குடம் நீர் மற்றும் குளிர்ந்த மோர்.

 

       சாமானிய மக்கள் வேறு என்னதான் செய்யமுடியும் ???!

Monday, May 2, 2011

குழந்தை மொழி மழலை ( கவிதை ) :

பல் இல்லா

சிறு வாயாலே

மழலை மொழியால் பேசி

தலையை

இப்படியும் அப்படியும்

அசைத்து

இன்னிசையாய் பாடி

 

கவிதைகள்

பல எழுதியதைப்

போல்

காகிதத்தை

கிழித்த பின்பு

தன் பிள்ளை மொழியாலே

என் உள்ளமதில்

எழுதுகின்றாள் !

என் செல்லமகள் !

 

அவள் அழகு

புன்னகையில்

உலகத்தை

மறந்துவிட்டேன்!

அவள் பிஞ்சு விரல்

தீண்டலில்

என்னையே

மறந்துவிட்டேன் !!!

 

மனதையும்

மதியையும்

மயக்கி

எனை அடிமை

செய்திட்டாள்

என் செல்லமகள் !

இவள்

என் செல்வமகள்!