இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, August 8, 2011

காஞ்சனா - திரை விமர்சனம்:

"கொலையுண்டவன் கொலையாளிகளை ஆவியாய் வந்து பழிவாங்கும்" பேய் கதை. அதை சிறிது மசாலா தூவி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் லாரன்ஸ். மாலை 6 மணிக்குமேல் 'பேய்' பயம், இரவு சிறுநீர் கழிக்கவும் தாயின் துணை, பகலில் அதிபயங்கர வீரன் என்று பல காட்சியமைப்புகள் முனி முதல் பாகத்தை அடிக்கடி நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
 
வெறும் பாடலுக்காக மட்டும் வந்து போகும் கதையின் நாயகி லஷ்மி ராய், ஒரே ஒரு காட்சியில் வரும் வீட்டு வேலைக்காரி, கதாநாயகன் அதிரடி அறிமுகத்திற்காக வரும் கிரிக்கெட் போட்டி என்று படத்தில் ஒட்டாத பல அம்சங்கள் நிறைந்துள்ளன. காதலியை வெறுப்பேற்ற வரும் பாடல் காட்சி 'வாழ்வே மாய'த்தை நினைவுபடுத்துகிறது.
 
சுப்ரீம் ஸ்டார் 'சரத்குமார்' திருநங்கையாய் அசத்தியுள்ளார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அழுத்தமாக, விருவிருப்புடன் உள்ளன. படத்தின் சில பல குறைகளை சமன் செய்கிறது அவரின் பள்ளி மேடை பேச்சு.
 
லாரான்சின் 'ஜவுளிக்கடை' நடிப்பு பிரமாதம். வீட்டில் குளிக்கும் போது மஞ்சளை பார்க்கும் பார்வையிலேயே 'அனைத்தையும்' புரியவைத்துவிடுகிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. திருநங்கைகளின் பிரச்சனைகளை கையில் எடுத்தது பலம். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இருந்தாலும் அவரின் முயற்சிக்காக ஒரு 'சபாஷ்'.
 
நில அபகரிப்பு வில்லனாக வரும் நபருக்கு திரைக்கதையில் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. சர்வ சாதாரணமாக செத்துப்போகிறார். காணாமல் போன தன் கோஷ்டியினரை பற்றி 'சாமியாரிடம்' முறையிடுகிறார். சாமியாரும் 'நீ கொலை செய்து புதைத்த சடலங்களை....' ரீதியில் பேசுகிறார். போலீஸ் எங்கே? திரைக்கதையில் ஏன் இல்லை?
 
வழக்கமான கிளைமாக்ஸ் தான் என்றாலும் ஸ்பெஷல் ஏபெக்ட்ஸ் பின்னிஎடுக்கிறது. தேவதர்ஷணி, கோவை சரளா வயிறு புண்ணாகும் அளவிற்கு காமெடியில் மிகவும் இயல்பாக கலக்கியுள்ளனர்.
 
திருநங்கைகளும் இறைவனின் படைப்புகள் தான் என்ற நல்லதொரு செய்தியை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல நினைத்த லாரான்சுக்கு எனது மனமார பாராட்டுக்கள்.