இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 29, 2011

ஓட்டு போட்டால் மட்டும் போதுமா?

சமீப 'தானே' புயல் ஒரு கலக்கு கலக்கிவிட்டு போயிருக்கிறது. எங்கு நோக்கினும் தண்ணீர். சாலை, வீதி, வீடு என்று அனைத்து இடங்களிலும் மழை நீர் நிரம்பி வழிகிறது. சாக்கடை நீர் மேலெழும்பி மழை நீருடன் கலந்து 'நோய்' பரப்பிக்கொண்டிருக்கிறது. சற்றே தொலைக்காட்சியை உயிரூட்டி செய்தி அலைவரிசையை நாடினேன். அவர்கள் சாதாரணமாகவே அனைத்தையும் மிகைப்படுத்துவார்கள். இப்பொழுது கேட்கவே வேண்டாம். பிரச்சனைகளை உடனுக்குடன் வெளி சொல்வதற்கு மட்டும் இன்றைய ஊடகங்கள்.
 
செய்திகளுக்கிடையே நேரடி அறிக்கை அளித்த அனைத்து நிருபர்களும் ஏனோ மக்களின் பிரச்சனைகளை காட்ட மறுத்தனர். 'நைட்டி' அணிந்த பெண்கள் தங்களின் வாக்குமூலத்தில் 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' என்ற ஒரே முறையீட்டை வைத்தனர். யாரோ சொல்லி கொடுத்து பேசியதை போன்றதொரு உணர்வு. அது ஒருபுறமிருக்க, காமிரா கையால்பவர் வெறுமனே அலைகளையும், கடலையுமே காண்பித்து பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். நம் மேல் அவருக்கு என்ன 'கொலவெறியோ'.
 
ஊடகங்கள் தங்களின் கடமையை மறக்கின்றன. ஓட்டு போடுவதோடு நமது கடமை முடிந்துவிடுகிறது. யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப்போக்கு ஏன்? 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' - என்று வெறுமனே அடுத்தவர் மேல் பழி போட்டு நம் 'கடமையை' சரிவர செய்த திருப்தியை அடைகிறோம். அந்த 'யாரும்' என்பது யார் என்று குறை கூறுபவர்களுக்கும் தெரியாது, அதனை படம் பிடிப்பவர்களுக்கும் தெரியாது. ஏதோ செய்தி, ஒளிபரப்பினால் லாபம் வரும் என்று வெறும் வியாபார நோக்கே இங்கு தலை தூக்கி நிற்கிறது.
 
ஊடகங்கள் அந்த 'யாரும்' என்பதை வெளிக்கொணர வேண்டாமா? மக்களின் குறையை காண்பிக்கும் இவர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களை சந்தித்து 'என்ன செய்யப்போகிறீர்கள்?' என்ற கேள்வியெழுப்பி, காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வழி காட்டவேண்டாமா? அதை விடுத்து 'வீடுகளில் கடல் நீர் புகுந்தது', 'மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்' என்று பிளாஷ் செய்தி போட்டு தங்களின் வியாபார லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
 
'யாரும்' வந்து பார்த்துவிட்டால் மட்டும் நம் குறை தீர்ந்து விடுமா? ஏன் நமக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. நமக்கு நாமே ஏன் தோள் கொடுத்துக்கொள்வதில்லை. யாரோ ஒருவரின் 'பார்வை' மட்டும் நமது பிரச்சனைக்கு தீர்வல்ல. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, இருப்பதை பகிர்ந்து ஏன் வாழக்கூடாது. ஒற்றுமையாக சென்று தேவைகளை அரசிடம் (ஆகிம்ஸா வழியில்) ஏன் முறையிடக்கூடாது. கடந்த மூன்று நாட்களாக ஒரே செய்தி, ஒரே பிரச்சனை, ஒரே குமுறல். விடியல் தான் வந்தபாடில்லை.
 
ஊடகங்களே மக்களின் பிரச்சனையை வெளியுலகுக்கு காட்டுவது மட்டும் உங்கள் கடமை அல்ல. அதற்கான தீர்வை எடுத்துக்காட்ட வேண்டியதும் உங்கள் கடமை தான்.

Wednesday, December 28, 2011

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்:

இனிய நண்பர்களே!
 
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2012 - ஏ வருக! வளம் தருக!

லோக்பால் :

அம்புலி காட்டி
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
அமுதூட்டும் தாய்!
அங்கே அது பாசம்!
 
லோக்பால் என்று சொல்லி
ஏதோ ஒரு பாலை
நமக்கூட்டும் அரசு!
இங்கே அது வேஷம்!
 
லஞ்சத்திற்கு இங்கே
அன்பளிப்பு என்று பெயர்,
வஞ்சதிற்கு இங்கே
அன்பு-அழிப்பு என்று பெயர்
 
விழித்துக்கொள் தோழனே
இது பருவமழை அல்ல
இவருடம் பொய்த்தால்
அடுத்த வருடம் மகசூல் பெற!
 
ஊழலுக்கு எதிர்க்குரல்
கொடுத்து உறங்கும்
சத்தியத்தை விழித்தெழ செய்வோம்!
நம் நாட்டிலிருந்து
லஞ்சத்தை விழுந்தோட செய்வோம்!

Monday, December 26, 2011

தமிழல்லா தமிழ் வார்த்தைகள்:

நமது அன்றாட வாழ்க்கையில் தமிழ் போர்வையில் உலா வரும் பிறமொழி வார்த்தைகள் தமிழின் தன்மையை மாற்றி விடுகின்றன. அவை பெரும்பாலும் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சி செய்திகள் வழியே பரவுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. பிற மொழி சொற்கள் பரவாயில்லை, சில சமயங்களில் ஆண்பால் பெண்பால் பிரச்சனைகள் வரும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். உதாரணமாக குங்குமம் இதழில் வெளிவரும் கைத்தொழில் சார்ந்த கட்டுரையில் 'இதில் இவர் நிபுணி' எழுதுவார்கள். நிபுணர் என்பது ஆண்பால் என்பது எனக்கு இதுவரை தெரியாது. நண்பருக்கு பெண்பால் நண்பி மற்றும் வில்லனுக்கு பெண்பால் வில்லி என்றும் பிறகே என் சிறுமூளையால் புரிந்துகொள்ள முடிந்தது.
 
தலைப்பில் எதுகை, மோனை வேண்டுமென்று பிறமொழி கலப்பில் ஈடுபடும் எழுத்தாளர்கள் பலர். 'இன்று ஸ்டிரைக் வாபஸ்' இது முதலிடமென்று மார்தட்டிக்கொள்ளும் தினசரி செய்திதாள் தலைப்பு. அழகிய தமிழை வளர்க்கிறோம் என்று மிக அருமையாக 'கெடுக்கும்' செயல் கண்டிக்கப்படவேண்டியது. பத்திரிக்கை சுதந்திரம் என்று ஒரு மொழியை சிறுக சிறுக கொல்வது எந்த விதத்தில் நியாயம். சமானியனை அணுக அவன் மொழியில் செய்தியை தருவதே சிறந்தது என்று வாதிடும் மனிதர்களும் உண்டு. அவர்களை போலவே நீங்களும் தவறாகவே சொன்னால் அவர்களுக்கு தன்னுடைய தவறு எப்பொழுது புரிவது?
 
மொக்கை, களாசல், ஃபிகர், இவை இன்றைய இளைய தலைமுறையின் புதுத்தமிழ். 'அந்த ஃபிகர் மொக்கை மச்சான்', 'ஃபிலிம் மொக்கைடா', 'உடம்பு ரொம்ப பேஜார் பண்ணுது' இவை படித்த அனைவரும் பேசும் செந்தமிழ். சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் தமிழ் செத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயன் அவன் மொழிக்கு இடையில் தமிழ் கலப்பதில்லை. ஏன்? தமிழனாய் பிறந்து 'ஆங்கிலம்' சரளமாக பேசுபவர்கள் மறந்தும் இடைச்செருகலாக தமிழை பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் பேசும் பொழுது மட்டும் பல மொழிகளின் கலப்பு ஏன்?
 
தமிழுடன் கலந்துவிட்ட சமஸ்கிருத வார்த்தைகளை பற்றி பேசவில்லை தோழர்களே. அது முடிவில்லா பிரச்சனை. என்னுடைய இந்த பதிவில் எத்தனையோ சமஸ்கிருத வார்த்தைகள் எனக்கு தெரியாமலேயே நுழைந்துள்ளன. நமது அடிப்படை கல்வி அப்படி. எடுத்துக்காட்டு: ஆரோக்கியம், தினம், பத்திரிக்கை, வார்த்தை - இப்படி பல.
 
அர்த்தமில்லா வார்த்தைகள் பற்றிய எனது குமுறல் எரிமலை போல் ஒவ்வொரு நாளும் என்னுள் கொதித்துக்கொண்டே இருக்கிறது.
 
(பி.கு. ஆரோக்கியம் - நலம், தினம் - நாள், பத்திரிக்கை - செய்தித்தாள், வார்த்தை - சொல். இதன் மூலம் 4 தமிழல்லா வார்த்தைகளை அடையாளம் காட்டிய திருப்தி)

Thursday, December 22, 2011

நாணயம்:

 செயல் - 1 : பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன். என் பைக்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடச்சொன்னேன். அவரும் பம்பை இயக்கி நிரப்ப துவங்கினார். ரூ.99.52 வந்தவுடன் நிறுத்திவிட்டு, அடுத்த வண்டியை அழைத்தார். நான் அவரிடம் மெதுவாக 'நான் 100 ரூபாய்க்கு போடச்சொன்னேன்' என்றேன். அவரும் 100 க்கு தான் போட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, இன்னும் கொஞ்சம் விட்டால் 100.22 ஆகிவிடும், முதலாளி திட்டுவார் என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். நுகர்வோருக்கு 50 பைசா நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. தன்னுடைய 20 பைசா தான் முக்கியம் என்று நினைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.
 
செயல் - 2 : மொபைல் டாபப் செய்ய சென்றிருந்தேன். ரூ.99 க்கு ரேட் கட்டர் போடச்சொல்லி ரூ.100 கொடுத்தேன். அவரும் பெற்றுக்கொண்டு டாபப் செய்தார். மீதி ரூ.1 ஐ தரவேயில்லை. இதோ தருகிறேன் பொறுங்கள் என்று சொல்லி 15 நிமிடம் காக்கவைத்து என்னை அலைக்கழித்ததுதான் மிச்சம். கடைசிவரை தரவேயில்லை.
 
பெரும்பாலும் நமக்கெல்லாம் பேருந்து பயணத்தின் போது நடத்துனரிடம் சண்டை போட்ட அனுபவம் இருக்கும். ஆனால் இவை தவிர்க்கபடவேண்டியவை. இத்தகு செயல்கள் நிச்சயம் ஆரோக்கியம் அல்ல. இவற்றுக்கு தீர்வே இல்லயா? ஏன் இல்லை. E-Money. ATM, DEBIT கார்ட் வகைகளில் சில்லறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதுபோல் பணத்திற்கு பதில் SMART card வழங்கி இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Tuesday, December 13, 2011

உழைப்பை திருடாதே!

கனவுக்கன்னியென்று கோயில் கட்டி
ரசிக்கும் என் இனிய ரசிகனே!
திரையில் என் அழகு கண்டு
மனமேங்கும் அருமை ரசிகனே!
 
என் இதழ் புன்னகையில் மயங்கி
மனைவி இவள்போல்
வேண்டுமென்று கிறங்கும் ரசிகனே!
நான் படும் வேதனைகள் விருதுக்காக
அல்ல உன் ரசனைக்காக!
 
நாற்று நடும் பெண்களுக்கு
சுட்டெரிக்க ஒரு சூரியன்!
திரையில் நான் அழகாய் மின்ன
படபிடிப்பில் எனை சுற்றி
பல சூரியன்கள்!
 
ஓவனுக்குள் சிக்கனை போல்
தினம் தினம் வேகிறேன் - நான்,
கோழிக்கு ஒருநாள் வேதனை
எனக்கோ தினம் தினம்!!
 
ஆனால் நீயோ,
என் உழைப்பிற்கு விலை தராமல்
என் நடிப்பை
ஆன்லைனில் இலவசமாய்
டவுண்லோட் செய்து பார்க்கிறாய்!
 
என் இனிய ரசிகனே என் வேதனையை
ஒருமுறை நினைத்து பார்
டவுண்லோட் பட்டனை
கிளிக் செய்யும் முன்பு!

Tuesday, December 6, 2011

வொய் திஸ் கொலவெறி டி!

       சமீப நாட்களாக இந்தியாவையே குலுக்கி கொண்டிருந்த விஷயம் தனுஷின் ' ஏன் இந்த கொலவெறிடி ' என்ற பாடல் (பாடல் என்றே வைத்துக்கொள்வோம்). சிறியவர்கள், இளைஞர்கள் என்று அனைவரின் வாயிலும் 'கொலவெறி' தான். அப்படி என்னதான் இருக்கிறது என்று யூட்யூப் - இல் தட்டினால் பாடல் வீடியோவுடன் பார்க்கமுடிந்தது. தங்லீஷ் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏதோ ஒரு இங்கிலீஷ் உபயோக பட்டிருக்கிறது. பக்கத்திலேயே ஒரு குழந்தை பாடிய ' கொலவெறி' யையும் வெளியிட்டிருந்தனர். ஏதோ 'rhyms' போல குழந்தை என்ன அழகாக பாடுகிறது. பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
 
      மெட்டுக்காக அமைக்கபெற்ற போலி பாடல் வரிகள் தான் என்றாலும், இளைஞர்களை மையப்படுத்தி வருவதால் கொஞ்சம் ரசிக்கும் படி உள்ளது. ராகம், தாளம், அது இதுவென்று அலைபவர்களுக்கு நிச்சயம் இந்த பாட்டு பிடிக்க வாய்ப்பில்லை. குளியலறையில் பாடும் பாடலாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சில சமூகவலைதளங்கள் மூலமாக தான் இத்தனை 'அக்கபோரும்' என்று புலம்புபவர்களும் உண்டு.
 
       இவ்வளவு நடந்தாலும் தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கும் 'தனுஷை' பாராட்டலாம். தொடரட்டும் தமிழ் மேல், தமிழ் இசை மேல்  அவருக்கு இருக்கும் 'கொலவெறி'.