இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, April 20, 2011

பெண்ணில்லா உலகம்:

பெண்ணில்லா உலகத்தை கற்பனை செய்ய முடிந்தால்....?!!! கற்பனை கூட செய்யமுடியாத ஒரு விஷயத்தை நாம் படிப்படியாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இன்றைய ஆணுக்கு பெண் விகிதம் 100 வருடங்களுக்கு முன்பை விட மிக குறைவாகவே உள்ளது. பெண்சிசு கொலை, வரதட்சணை கொலை, காதல் தோல்வி தற்கொலை, நகைக்காக கொலை என்று ஒவ்வொரு நாளும் பெண்ணினம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் மட்டுமே இருந்தால் இயற்கை சமநிலை என்னவாகும். இனப்பெருக்கம் இல்லாமல் மனித இனமே அழிந்து போய்விடாதா?

 

இன்று பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 793 பெண்களே உள்ளனர். மற்ற மாநிலங்களில் சராசரியாக 800 முதல் 900 வரையே. சீனாவில் 944 மற்றும் U.S.A வில் 1029 (2001 கணக்குப்படி). ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நமது கலாச்சாரம். பின்னாளில் அது சாத்தியமே இல்லாத வெறும் கூற்றாகவே இருக்கும்.

 

சமுதாயத்தில் பெண்ணுக்கு சம உரிமை இல்லாமையும் ஒரு மிகப்பெரிய காரணம். சம உரிமை என்பது யாரோ தரவேண்டிய ஒன்றல்ல. அவர்களிடம் பறிக்கப்படும் ஒன்று. அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும். அவர்களின் சுமரியாதையை மதித்தாலே போதும்.

 

டி‌வி தொடர் பார்த்தே காலத்தை கழிக்கும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. உள்ளேயே முடங்கி கிடக்க துடிக்கும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. மாமியார் என்று போர்வையில் கொடுமைகள் பல புரியும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. பெற்றோரை தவிக்க விட்டு காதலனுடன் ஓடிபோய் ஏமாறும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. தனிக்குடித்தனம் என்ற பெயரில் கணவனின் பெற்றோரை "முதியோர் இல்லத்தில்" விடும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது.

 

நாம் பேசுவது முன்னேறவேண்டும் என்ற லட்சிய வெறி கொண்டு வாய்ப்புகளை தேடியலையும் பெண்களை பற்றி. நாம் பேசுவது படிக்கு ஆர்வம் இருந்தும் கூட்டிலேயே அடைக்கப்படும் பெண்களை பற்றி. தன்னபிக்கையோடு தன் சொந்தக்காலில் நிற்க துடிக்கும் பெண்களை பற்றி. நாட்டின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட நினைக்கும் பெண்களை பற்றி.

 

பெண்ணுக்கு வேலைவாய்ப்பு இருந்தால் வரதட்சணை தரத் தேவையில்லை. பெண்ணுக்கு வரதட்சணை இல்லாயெனில் பென்சிசுக்கொலை இல்லை. இதற்கு பெண்ணுக்கு உரிய உரிமை வழங்கப்படல் வேண்டும். அவர்கள் திறமையை வளர்க்க உதவ வேண்டும். மாற்று திரனாளிகளுக்கு மனமிரங்கி சலுகைகள் பல வழங்கும் அரசு பெண்களுக்கும் உதவ வேண்டும். ஒதுக்கீடு மட்டுமே தீர்வல்ல. "ஊக்கம்" அதுதான் தேவை. பெற்றோர், உடன்பிறந்தோர், நட்பு வட்டம் அனைவரும் தோள் கொடுக்கவேண்டும். அனைத்து இடங்களிலும் (வீட்டிலும்)  பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

பெண்ணே ! "என் மகனுக்கு ஒருபோதும் வரதட்சணை கேட்கமாட்டேன்" என்று உறுதி எடு. அழிவது பெண்ணினம் தான். பெண்ணினம் காக்க தோள் கொடு. வரதட்சணை கேட்டு பெண் கொடுமை செய்யாதே. நீ பெற்றெடுத்த பெண்ணை படிக்கவிடு. சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தை உருவாக்கிக்கொடு. வரதட்சணை கொடுக்காமல் ஒருவனுக்கு மணமுடித்து கொடு.

 

பெண்ணினம் அழிய பெண்ணே துணை நிற்பது எந்த விதத்தில் நியாயம். பெண்குழந்தை பெற்றெடுத்த மருமகளை வாழாவெட்டியாக்கி பார்க்கும் சமுதாய சீர்கேடு ஒழிய வேண்டும். பெண் குழந்தை பிறக்க ஆணும் காரணம் என்பதை உணர்ந்து, திருந்த வேண்டும். பென்சிசுக்கொலை முழுவதும் ஒழிய வேண்டும்.

 

ஆண்களுக்கு ஒரு செய்தி. இந்நிலை நீடித்தால் வரதட்சணை கொடுத்தாலும் பெண் கிடைக்காத நிலை ஏற்படும். உன் பேரனுக்கு இந்த நிலை தேவையா? யோசி. ஆண் மட்டுமே வாழும் ஒரு சமுதாயத்தை கற்பனை செய்து பார். கற்பனை கூட செய்யமுடியாத ஒரு விஷயத்தை நாம் படிப்படியாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம். ஆம். இன்னும் 500 வருடங்களில் பெண்ணினம் முற்றிலும் அழிந்து.. படிப்படியாக ஆணினமும் அழிந்து விடப்போகிறது.

 

மீண்டும் சொல்கிறேன்.

 

பெண்ணில்லா உலகத்தை கற்பனை செய்ய முடிந்தால்....?!!! கற்பனை கூட செய்யமுடியாத ஒரு விஷயத்தை நாம் படிப்படியாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.