இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Saturday, January 21, 2012

சொர்க்கமும் நரகமும்:

         நமது புராண கதைகளிலும் வேதங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்கள் சொர்க்கமும் நரகமும். இன்றும் நமது மூளையில் இருக்கும் ஒரு நெருடல், இவை இருக்கின்றனவா? இல்லையா? அப்படி இருக்கிறதென்றால் எங்கே இருக்கிறது? சரிதானே. முதலில் அவற்றின் விளக்கங்களை பார்ப்போம். சொர்க்கம் என்றால் சுகபோகம், சந்தோஷம், பசிதெரியாமை, மகிழ்ச்சி. நரகமென்றால் கஷ்டம், தூக்கம், வேதனை, பசி, பட்டினி, வலி. இதனை நான் கூறவில்லை. நமது வேதங்களும், இதிகாசங்களும் பறைசாற்றுவது இவையே. சொர்க்கமும் நரகமும் புண்ணியமும் பாவமும். அவ்வளவே.
 
        சுகபோகமாய் சந்தோஷமாய் பசி தெரியாமல் வாழும் மக்கள் இருக்கும் இடங்கள் சொர்க்கம். பசி பட்டினியோடு வாழும் மக்கள் இருக்குமிடம் நரகம். ஒரே ஊரில் ஒருவர் சொர்க்கம் பகுதியிலும், மற்றொருவர் நரகப்பகுதிகளிலும் வசிக்கலாம். நகரங்கள் சில நேரங்களில் சொர்க்கமாகவும் பல நேரங்களில் நரகமாகவும் ஆகின்றன. கிராமங்கள் எப்போதும் சொர்க்கமாகவே இருக்கின்றன.
 
          இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொர்க்கமும், நரகமும் வெளி கிரகங்களோ / உலகமோ இல்லை. நம் மனமும், நம் மனம் சார்ந்த செயல்களும், அதனால் விளையும் விளைவுகளும் / மாற்றங்களும் / ஏமாற்றங்களும் தான் நம் மகிழ்ச்சியை நிர்ணயிக்கின்றன. நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், இல்லாதோருக்கு உதவுவோம், ஏழைக்கு எழுத்தறிவிப்போம் அதன் மூலம் 'நமக்கு சொர்க்கம் நிச்சயம்' - அதாவது இப்புவியில் சந்தோஷமாக வாழலாம். இல்லையேல் இருக்கும் பணத்தையும், இல்லாத அன்பையும் கட்டிக்கொண்டு அழுது புலம்ப வேண்டியதுதான் நரக வேதனையுடன்.

காதலியே! மீட்டெடு என்னை! (கவிதை)

மனவலி ஏற்படுத்தும்

மன வலி காதலுக்குண்டு,

 

அடிபட்டால் வெறும்

தேகவலி அது கணநேரம்

உன் கண்ணடி பட்ட

மனவலியோ ஆண்டுக்கும் !

 

அன்பே, பிரிவென்பது

உடலுக்கு மட்டும்தான்

உயிருக்கல்ல,

நம் உள்ளத்துக்குமல்ல !

 

ஆருயிரே, உன் நினைவால்

நான் தீட்டிய கவிதை ஓவியம்

என்னமாய் மின்னுகிறது பார் !

 

தூரிகை கொண்டு எழுதவில்லை!

இனிக்கும் வார்த்தைகள்

கொண்டும் எழுதவில்லை !

 

கரிக்கும் என் கண்ணீர்

கொண்டே எழுதினேன் !

மின்னுவது உலர்ந்துபோன

உப்புதான் !

 

பிரிவொன்று வேண்டாம் நம்

வாழ்நாளில் இனிஒருதரம் !

 

உன் மடியில்

சிறு தூக்கம் போட நேரமில்லை !

 

உனை கொஞ்ச

நேரமேதும் ஒதுக்கவில்லை !

 

நல்ல சீலையில்லை

பொழுதுப்போக்கு ஷோக்கு இல்லை

திரையரங்கம் செல்வதில்லை !

 

உனக்கான என் நேரம்

தூக்கத்தினால்

துக்கமாகிறது !

 

இது அறியா பிழையே அன்றி

நானாக விதைத்தது இல்லை,

நீயேனும் புரிந்துகொள்வாய் !

உன் சந்தேகம் கொல்வாய் !

 

வேறு யாருக்கும் புரியாது

நான் படும் வேதனைகள்,

 

என் இதயத்தில் குடியிருப்பதால்

உனக்காவது புரியும்

உனக்காக நான் துடிப்பது!

புரியாமல் ஏன்

ஒரு மௌனம் ?

 

வெறும் சீலையும்

பொழுபோக்கு ஷோக்கும்

நகையும் நட்டும் காதலல்ல !

 

உன் கழுத்துவழியே

பின் கூந்தல் வருடி

சிலிர்ப்பதும் காதல்தான் !

 

பிறை நெற்றி தடவி

இதழ் முத்தம் பதிப்பதும் காதல்தான் !

 

கடற்கரை சந்திப்பும்

திரையரங்க சில்மிஷங்களும்

காதலென்று சொன்னது யார்?

 

பரிசலிப்பதும்

பின்பு பல்லிளிப்பதும்

எனக்கு வராத பொய் வேஷங்கள் !

 

சுத்த தங்கம் போன்ற

தூய அன்பு என்னுடையது,

அதனாலேயே அணிகலன்

ஆகாமல் துருப்பிடித்த

உன் ஜன்னல் கம்பியாய் !

 

காற்றில் உள்ள ஆக்ஸிஜன்

நமக்கு உயிர் கொடுக்கும்

அதுவே

இரும்பின் உயிர் எடுக்கும் !

 

உன் மௌனம் பலமுறை

எனக்கு உயிர் கொடுத்தது

அதுவே இப்போது

என் உயிர் குடிக்கிறது.

 

தொடரும் உன் மௌனம்

என்னை சிறுக சிறுக

காணாமல் போக செய்கிறது

 

முழுவதுமாய் கரைவதற்குள்

உன் இதழ் திறந்து

எனை மீட்டெடு!

Friday, January 13, 2012

பொங்கல் திருநாள் !

        பொங்கல் பொதுவான ஒரு பண்டிகையாக இருந்தாலும் மற்ற பண்டிகையை போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி கொண்டாடப்படுவதில்லை. இந்தத் திருநாள் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் ஒருமாதிரியும், நகரங்களில் ஒருமாதிரியும் கொண்டாடப்பட்டாலும் 'பொங்கல்' என்னவோ ஒன்றுதான். கிராமங்களில் பொங்கலானது 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது. நகரங்களில் ஒன்று அல்லது இரண்டுநாட்கள் மட்டுமே.
 
         கிராமங்களின் பெருமையை இந்த பொங்கல் திருநாளில் நாம் தெளிவாக காணலாம். போகியன்று 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று வீடு மற்றும் மனதில் உள்ள பழைய, உபயோகமில்லாதவற்றை சுத்தம் செய்து, வெள்ளையடித்து மகிழ்வது வழக்கம். மறுநாள் பெரிய பானையில் வெண்பொங்கலும், கொஞ்சம் சிறிய பானையில் சர்க்கரை பொங்கலும் செய்து சூரியனுக்கு படைத்து, தாமும் உண்டு மற்றவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வர். மூன்றாம் நாள் உழவுக்கு துணைபுரியும் ஆடு, மாடு போன்றவற்றை அலங்கரித்து, பூஜித்து பொங்கல் வைத்து 'மாட்டுப்பொங்கலாக' கொண்டாடி களிப்பர். அடுத்தநாள் பொங்கல் உண்ட களைப்பு போக வீரவிளையாட்டுகளும், அதற்கடுத்த நாள் திருவிழாவும் கொண்டாடுவார். இன்னும் சில ஊர்களில் போகிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பொங்கல் ஆரம்பித்துவிடும்.
 
       நகரங்களில் பொங்கல் கொண்டாட நிச்சயம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.போகியன்று லாரி டயர், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், மறுநாள் ஸ்டவ் இல் பொங்கல், நாள் முழுவதும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், மாட்டுப்பொங்கல் கிடையாது. காணும் பொங்கல் என்று ஒன்றை வைத்துக்கொண்டு கடற்கரையை குப்பையாக்குவது அல்லது திரையரங்கை குப்பையாக்குவது. பின்பு மறுநாட்களில் எப்போதும் போல் 'எந்திர' வாழ்க்கை. இவர்கள் போடும் குப்பைகளாலும், எரிக்கும் டயரினாலும் சுற்றுசூழல் பாதிப்படைவதோடு மக்களின் சுகாதாரத்தையும் கெடுக்கிறது. நகரங்களில் 'பொங்கல்' கொண்டாடுவதை தடை செய்தால் தேவலை.
 
         ஆயினும், பொங்கல் தமிழர் திருநாள் என்பதால் 'பொங்கலோ பொங்கல்' , 'பொங்கலோ பொங்கல்', 'பொங்கலோ பொங்கல்'.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

இனிய  தமிழ் நண்பர்களே! அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, January 10, 2012

தமிழ்த்தாய் வணக்கம்!

தமிழ்த் தாயே போற்றி!
திருக்குறள் அணிந்த அழகே போற்றி!
அகத்தியர் அருளிய இலக்கணமே போற்றி!
தொல்காப்பியம் புனைந்தாய் போற்றி!
இலக்கியம் பல படைத்தாய் போற்றி!
வாழும் வழி காட்டிய சக்தியே போற்றி!
எங்களை வாழவைக்கும் மூச்சே போற்றி!
உலகமெலாம் உள்ளோய் போற்றி!
எமை காக்கும் அன்னையே போற்றி!
உனை என்றும் மறவா வரம் வேண்டும்!
அன்னையே! போற்றி!போற்றி!

Thursday, January 5, 2012

வியப்பு (கவிதை) :

காலை பனிக்குள் சூரியன்!
சிறிய விதைக்குள் ஆலமரம்!
சின்னஞ்சிறு கருவில் திமிங்கலம்!
அணுவின் உட்கருக்குள் சக்தி!
என்று படைத்தாய்!
 
இத்தனை பெரிய
மனித மூளைக்குள்
சாதி, மதம், மொழி
வைத்த நீ
அறிவை வைக்க
மறந்தாய்!
 
நித்தம் புது புது பிரச்சினையை
கிளப்பிவிட்டே வீண் -
வம்புவளர்க்கும் அறிவு மட்டும்
எப்படி வந்தது
உன் படைப்பையும் மீறி!
 

உலக அழகிகளும் அறிவும்:

            உலக அழகிப்போட்டி என்றில்லை. எந்த ஒரு அழகி போட்டியானாலும் நிச்சயம் வெறும் அழகுக்கு மட்டும் பரிசு கிடைத்துவிடுவதில்லை. அழகுடன் அறிவும் இருந்தால் மட்டுமே பரிசும் புகழும். ஆனால் எனக்கு தெரிந்து ஐஸ்வர்யா ராய் தொடங்கி நம்மூர் லோக்கல் அழகிகள் வரை போட்டியில் வென்றபின்பு தங்கள் 'புற அழகையும்' 'புகழையும்' மட்டுமே முதலீடு செய்கின்றனர். இதுவே வெளிநாட்டில் 'பொதுசேவை' என்பதை கூட சேர்த்துக்கொள்வார்கள். அவ்வளவே.
 
          இதுவரை எனக்கு தெரிந்த வரையில் எந்தவொரு அழகியும் 'மாவட்ட ஆட்சியர்' ஆகவோ, அல்லது அறிவு சார்ந்த துறையில் வல்லுனராகவோ ஆனதாக சரித்திரம் இல்லை. பரிசு கொடுக்கும் போது அழகும் அறிவும் வேண்டும் என்று அறிவுத்தும் போட்டியை நடத்தும் நடுவர்கள் பரிசு கொடுத்தபின்பு உண்மையிலேயே அவர்களின் அறிவின் உபயோகத்தை காண்பதில்லை.
 
         வெறும் புற அழகை வைத்து மட்டும் பணம்பார்க்கும் இவர்களுக்கு 'அழகிபோட்டி' தேவையா? அப்படியே நடத்தபெரினும் அதில் 'அறிவு அல்லது சமயோஜித அறிவு ' சார்ந்த கேள்வியோ தேவையா? அப்படி கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் 'அழகிகள்' பின்னாளில் அதனை முற்றிலுமாக மறந்துவிடுகிறார்களே, இதற்கு விதிமுறைகள் இல்லையா?
 
          வெறும் சோப்பு, வாசனை திரவியம், ஆடைகள், ஆபரணங்கள், அலைபேசி விளம்பரங்களுக்கு மட்டுமே உபயோகப்படும் இந்த அழகிகள் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமா?