இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, June 28, 2011

ஹன்சிகா (சிறுகதை) :

எங்கள் அலுவலகத்தில் யாரேனும் நீண்ட விடுப்பில் சென்றாலோ அல்லது பிரசவ விடுப்பில் சென்றாலோ, அப்பணிகளை செய்ய தற்காலிகமாய் ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்களை வேலைக்கு அமர்த்துவதுண்டு. அவ்வாறு புதியதாய் பணியில் சேர்ந்த சிலரில் ஹன்சிகாவும் அடக்கம். நல்ல திறமைசாலி. வேலையில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் செயல் பட்டாள்.
 
அலுவலகம் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். அவள் சாலையின் மறுபுறத்தில் நின்றிருந்தாள். நான் முதலில் பேருந்தில் ஏறினாலோ அல்லது அவள் முதலில் பேருந்தில் ஏறினாலோ ஒருவரை ஒருவர் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கையில் பரஸ்பரம் ஒரு புன்னகையை பரிமாறி கொள்வதுண்டு. ஒரு நாள் அவளை அலுவலக கேண்டீனில் காபி சாப்பிட அழைத்தேன். மறுப்பேதுமின்றி வந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு இருக்கைக்கு திரும்பி விட்டோம். இவ்வாறு பல நாட்கள் சென்றன. இதை கவனித்த என் சக ஊழியர் ஒரு நாள் இது விஷயமாக அவளிடம் வம்பிழுக்க, விஷயம் விபரீதமானது.
 
பின்பு அவள் என்னிடம் பேசுவதுமில்லை. பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கொள்ள எனக்கு கோபம் கோபமாய் வந்தது. அவளிடம் கேட்டே விட்டேன். பதிலேதும் சொல்லாமல் வெடுக்கென்று சென்று விட்டாள். நாட்கள் நகர்ந்தன. அவளின் ஒப்பந்தம் முடியும் நாளும் வந்தது. எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்ததால், அன்று சிறிது காலதாமதமாகவே புறப்பட்டேன். அன்று அவள் எதிர் புறத்தில் நின்றிருந்தாள். காத்திருந்தாள் என்றே சொல்லலாம். அவளை கவனிக்காததுபோல் பேருந்தில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து, அவளை பார்த்தேன். அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை என்னால் கவனிக்க முடிந்தது. அது வெறும் கண்ணீர் மட்டுமல்ல என்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.

Tuesday, June 21, 2011

ஓவியம் (கவிதை) :

பெண்ணென்னும்

ஓவியம் பார்த்து

கவிதை ஒன்று

எழுதினேன்.

 

காப்புரிமை

வழக்கு போட்டான்

பிரம்மன்...

 

அவன் படைப்பை

நான்

காப்பி அடித்து

விட்டேன் என்று !!!

 

ஹைக்கூ :

கடந்து சென்றது

ரோஜாக்கள் ஒட்டிய கார்

என் கைகளில்

மல்லிகை பூ !

============================

மேகம் கறுத்தது

முகம் இருண்டது

சலவை தொழிலாளி !

============================

கோடை முடிகிறது

வருத்தப்பட்டான்

குச்சி ஐஸ் கடைக்காரன் !

============================

சிரிக்கும் பேரக்குழந்தையை

தொட்டு கொஞ்ச முடியவில்லை

வீடியோ சாட்டில்

தாத்தா, பாட்டி

============================

ஆசிரியர் என்னும் 'ஏணி' :

சமீபத்தில் கலெக்டர் ஒருவர் தனது பெண் குழந்தையை அரசினர் பள்ளியில் சேர்த்ததை செய்தித்தாளில் படித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவர் மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொண்டது அவருடைய மன முதிர்ச்சியை காட்டுகிறது. அரசு பள்ளிகள் ஏழைகளுக்கு மட்டும் தான் என்பதை உடைத்தெறிந்து, நல்லதொரு விஷயத்திற்கு வித்திட்டுள்ளார். அவருடைய குழந்தையும் அதை ஏற்று மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சத்துணவு சாப்பிட்டதையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
 
ஒரு வேதனைக்குரிய செய்தி என்னவென்றால் ஒரு தமிழன், ஒரு தமிழ் பள்ளியில் தன் குழந்தையை சேர்ப்பத்தை ஏதோ உலக அதிசயம் போல ஊடகங்கள் பறைசாற்றியதை 'நம் தமிழ் மண்ணின் பெருமை இப்படியா சிறுத்து போய்விட்டது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயமல்லவா இது' என்று நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. எப்படியோ ஒரு அரசு பதவியில் இருக்கும் ஒருவருக்கு, தன் பிள்ளையை 'அரசினர் பள்ளி'யில் சேர்க்கும் எண்ணம் வந்ததே அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் மற்றும் ஒரு சிறிய பூச்செண்டும் கொடுக்கலாம். இதில் யோசிக்க வைத்த விஷயம் என்னவென்றால் அரசு அலுவலர்களே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்பதே.
 
எனது ஐயம் : ஒரு அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் / ஆசிரியை / இதர அலுவலர் யாருமே தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்ப்பதில்லை ( எங்கேயாவது ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம் ). தான் பயிற்றுவிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்காத ஆசிரியர்கள், மற்ற பிள்ளைகளுக்கு எப்படி மிக சிறந்த 'ஏணி' யாக இருக்க முடியும்? சிந்திப்பார்களா இனியாவது?

Saturday, June 18, 2011

புதிய பாடத் திட்டம் :

கல்வி வியாபாரம் மும்முரமாக நடக்கும் தமிழகத்தில், சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கும்போது அப்படியே மெய் சிலிர்க்கிறது. என்ன கொடுமை 'சரஸ்வதி'? தனியார் பள்ளியில் பிள்ளையை சேர்க்க துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று மொத்தமாக சுரண்ட நினைக்கும் பள்ளி நிர்வாகம் ஒருபுறம், இதில் பிள்ளைகளின் பாடுதான் திண்டாட்டமாகிறது. பாவம் பெற்றோரையும் குற்றம் கூற முடியாது. வேலைப்பளு அவர்களை அவ்வாறு கட்டாயப்படுத்துகிறது. தான் கவனிக்காவிட்டாலும் பள்ளியும், ஆசிரியரும் கவனிப்பார்கள் என்று எண்ணி நல்ல தரமான பள்ளியை நோக்கி படை எடுக்கிறார்கள். இதுதான் சமயம் என்று பள்ளி நிர்வாகமும் தனி கட்டணம், சிறப்பு கட்டணம், கட்டட மேம்பாடு கட்டணம், பேருந்து கட்டணம், புத்தக கட்டணம் மற்றும் இன்ன பிற கட்டணங்களை விதித்து பெற்றோரை விழி பிதுங்க வைக்கிறார்கள்.
 
தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலையா? இல்லை இந்தியா முழுவதுமே இந்த நிலை தானா? கடவுளுக்கு தான் வெளிச்சம். புற்றீசல் போல இன்று எங்கு நோக்கினும் பள்ளி, கல்லூரி என்று இருந்தாலும் இந்த கட்டண முறை அனைத்தையும் பாழ் படுத்திவிடுகிறது. இன்றைய எல்.கே.ஜி யின் விலை 20 ஆயிரம். நாளைய கல்லூரி கட்டணத்தை நினைக்கும் பொது இதயம் நின்று விடும் போலிருக்கிறது.
 
இவ்வளவு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் இருந்தும் மக்கள் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கல்'ஐ எதிர்க்கும் இந்நாட்டு குடிமக்கள் பள்ளிகள் தனியார் மயமாக்கல்'ஐ வரவேற்றது ஏன்? நல்ல தரமான கல்வியை தர அரசு பள்ளிகள் முன்வந்தாலும், தனியாருக்கு இருக்கும் மவுசு இவற்றுக்கு இல்லை என்றே சொல்லலாம். இதற்கு 'பாட திட்டமும்' ஒரு காரணம். உலக அளவில் ஒருவன் உயர தாய்மொழி வழி கல்வி உதவாது என்ற நல்லெண்ணம் (!) தான் காரணம். இதற்கு பாட திட்டத்தில் நல்ல மாற்றம் தேவை. மெட்ரிக், CBSE க்கு இணையானதொரு பட திட்டம் தேவை.
 
பெற்றோர்களே! தனியார் பள்ளிகளை ஒதுக்கி, அரசு பள்ளிகளின் தரம் உயர அரசுக்கு தோள் கொடுங்கள். இந்த கல்வி கட்டண பூதத்தை நாட்டை விட்டே விரட்டுங்கள்.

தப்பும் தவறும் :

நாம் தெரிந்தே செய்யும் தப்புகளும் தெரியாமல்(!) செய்யும் தவறுகளும்...
 
1. தன் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'புகை' பிடிப்பது
2. தன் குடும்பத்தின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'மது' அருந்துவது
3. பிறரின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'சாலை விதி'யை மதிக்காதது
4. தன் மற்றும் உடன் வருபவரின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'தலை கவசம்' அணியாதது
5. மக்களின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'லஞ்சம்' வாங்குவது
6. நாட்டின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'ஊழல்' செய்வது
7. உலகத்தின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'பூமி வெப்பமயமாதலுக்கு' துணை போவது
8. நாளைய தலைமுறைக்கு தேவையில்லை என்று, இருக்கும் வளங்களை தின்று தீர்ப்பது
9. BLOG ஒன்றை நிறுவி இப்படி அடுத்தவங்களை குறை சொல்வது (சத்தியமா இது எனக்கு மட்டும் பொருந்தும்)
10. ......
11. .......
 
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
இவற்றுள் தப்பு எவை, தவறு எவை என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

காதலும் நாமும் :

சில நாட்கள் முன்பு மின்தொடர் வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. அதில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு வயதான ஜோடி, பயணிகள் ஏறுமிடத்தில் அமர்திருந்தது. அதில் அந்த பெண்மணிக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். பெரியவருக்கு சுமார் 85 வயதிற்கு மேலிருக்கும். அந்த தள்ளாத நிலையிலும் தான் மனைவியை மடிமேல் படுக்க சொல்லி, ஆதரவாய் அவர்களின் தலையை வருடியவாறு வந்தார். வண்டியில் அதிக கூட்டமில்லை என்பதால் அவர்களுக்கு தொந்திரவு ஏதும் ஏற்படவில்லை.
 
மெதுவாக பேச்சு கொடுத்ததில், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதாகவும், தங்களுக்கு தாங்கள் மட்டுமே துணை என்றும், அதில் ஒருவருக்கு எதேனும் ஆகிவிட்டால் உலகில் உயிர் வாழ மற்றவருக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் பெரியார் புன்னகை பூத்த முகத்துடனே சொன்னார். ஆனால் முடிக்கும் பொது அவரால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கணவன் கண் கலங்குவதை கண்ட அப்பெண்மணி அவருக்கு ஆறுதல் சொல்லி, அவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டார். அருகில் இருந்த அனைவரும் சிறிது நேரம் செய்வதரியாது நின்று இருந்தோம்.
 
இறங்க வேண்டிய இடம் வந்தது. அந்த பெண்மணியால் நடக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத வயதிலும் தன் மனைவியை தூக்கிக்கொண்டு இறங்கிய அந்தப்பெரியவரின் மன உறுதியை பார்த்து வாயடைத்து போனேன். நிச்சயம் 'கடவுள்' துணை இருப்பார் என்று தன் மனைவியை தேற்றிக்கொண்டே அவர் சென்றதை பார்த்துக்கொண்டே என் பயணத்தை ஒருவித மனபாரத்துடன் தொடர்ந்தேன்.
 
திருமணம் முடிந்து மறுநாளே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இன்றைய தலைமுறைக்கு, காதல் என்றால் என்னவென்று எப்படி சொல்லி புரியவைப்பது?
 
நீங்களாவது சொல்லுங்களேன் 'காதல்' என்றால் என்னவென்று?

Friday, June 17, 2011

லஞ்சம் & ஊழல் :

எனது பெற்றோர் இதுவரையில் லஞ்சம், ஊழல், பிறர் பொருள் அபகரிப்பு, அரசுடமை ஆக்ரமிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடவில்லை. நானும் இதுநாள் வரை இதுபோன்ற இழி செயல்களை செய்ததில்லை. எனது குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன். நான் அவர்களுடன் இருந்து கவனிக்க முடியாவிட்டாலும், நான் இட்ட விதை அவர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. அவர்களுக்கு பின் வருபவர்களும் அவ்வாறே இருக்க இன்றிலிருந்தே 'ஒழுக்க' கட்டுப்பாடு மனதளவில் விதிக்கப்பட்டு விட்டது.
 
இதன் மூலம் என்னால் மற்றும் எனது சந்ததியினரால் 'லஞ்சம், ஊழல், பிறர் பொருள் அபகரிப்பு, அரசுடமை ஆக்ரமிப்பு' போன்றவை வளராது என்பதை உறுதியுடன் கூறலாம். அதுபோல் தோழர்களே நீங்களும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். இளைய தலைமுறையை லஞ்சம் & ஊழல் போன்ற கொடிய நோய்க்கு மருந்தாய் வளர்ப்போம். லஞ்சம் & ஊழல் இல்லாமல் இந்தியாவை உருவாக்குவோம்.
 
நமது அப்துல் காலம் அவர்கள் சொன்னது போல வீட்டுக்கு வீடு நல்ல மனிதர்களை வளர்ப்போம். இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்.

Wednesday, June 15, 2011

காணாமல் போனவை:

உலகில் காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களினால் பலவித உயிரினங்கள் அழிந்தும் மற்றும் சில உயிரினங்கள் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டும் உள்ளன. அதே போல் நாகரீக வளர்ச்சியினால் நாம் பல பொருட்களை உபயோக படுத்தாமல் விட்டு, காலப்போக்கில் அவை நமது உபயோகத்தில் இருந்து மறைந்து இன்று அழிந்தும் போய்விட்டன.

 

அவற்றுள் நமது பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் சில, (எங்கேயாவது கண்ணுக்கு புலப்பட்டால் எடுத்து பாத்திரப்படுத்தி கொள்ளுங்கள்)

 

1. கேசட் (பாட்டு)

2. கேசட் (படம்)

3. வாக்மேன்

4. ஃபிளாப்பி டிஸ்க்

5. ஃபிலிம் காமிரா

6. அஞ்சல் அட்டை

 

இதே போல் இன்று அடுத்த வரிசையில் நிற்கும் சில பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்று,

 

1. அஞ்சலகம் – இ-மெயில்

2. காசோலை – இ-வர்த்தகம்

3. செய்தித்தாள் – இ-பேப்பர்

4. புத்தகம் – இ-புக்

 

இதுபோல் நாளுக்கு நாள் நம்மிடையே காணாமல் போகும் விஷயங்கள் பல. அவற்றுள் சிலதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

 

1. தொலைபேசி (Landline Phone)

2. மேசை கணினி (Desktop)

3. தொலைகாட்சி பெட்டி (Like CRT Monitor)

4. சி‌டி மற்றும் டி‌வி‌டி

 

அறிவியல் வளர்ச்சியால் இவைகளை இழந்தாலும், புதிய ஒன்றை நாம் வரவேற்க தவறுவதில்லை.

Monday, June 13, 2011

ஷேர் ஆட்டோ :

சென்னையில் ஷேர் ஆட்டோ பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இருப்பினும் எனது சில அபிப்ராயங்களை சொல்ல நினைக்கிறேன். ஒருநாள் எனது இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சாலை ஓரம் நின்றிருந்த ஒரு பெண்மணி திடீரென கை காட்ட, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சட்டென்று இடது பக்கம் ஒதுங்கிய வண்டி நான் எதிர்பாராத நேரத்தில் ஏன் வண்டியை குறுக்கிட்டு நின்றது. மோதாமல் தவிர்க்க நான் எனது வண்டியை திருப்ப, பின்னால் வந்த தோழர் என்னை வசை பாடி செல்ல, அன்று ஏதோ என் நல்ல நேரம் நான் தப்பித்தேன்.

 

       பேருந்து நிற்பதற்கு 'பேருந்து நிறுத்தம்' என்று உள்ளது. சாலையில் நாம் பயணிக்கும் பொது கவனமுடன் செயல்படலாம். ஆனால் இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் திருப்பலாம், எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம், யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம். இப்பிரச்சினைக்கு வழி இல்லையா?

 

       ஏன் இல்லை.

      

       மனமிருந்தால் அனைத்தையும் நடத்தி காட்டலாம் ஏன் இந்த கவனக்குறைவு? இரண்டு பக்கமும் தவறு நடக்கிறது. பொது மக்களாகிய நாமும் சிறிது தூரம் நடக்க பயந்து நின்ற இடத்தில் ஆட்டோவை கூப்பிடுகிறோம். ஏன்? அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு சென்று அங்கு ஆட்டோவை அழைக்கலாமே. போக்குவரத்து துறை சில வரைமுறைகளை விதிக்கலாமே? அல்லது 'பேருந்து நிறுத்தம்' போல் 'ஷேர் ஆட்டோ நிறுத்தம்' ஒன்றை நடைமுறை படுத்தலாமே? நனவாகுமா?

Wednesday, June 1, 2011

ஐம்பூதங்கள் (கவிதை) :

அவள்

பார்வை மழை

 

அவள்

பேச்சு தென்றல்

 

அவள்

கூந்தல் கார்மேகம்

 

அவள்

தீண்டல் உஷ்ணம்

 

அவள்

அன்பெனும் ஊற்றெடுக்கும்

நல்ல நிலம்

 

ஐம்பூதங்கள்

அவளில் கண்டேன்

 

மெய் மறந்து

ரசித்து நின்றேன்.

 

சிறு கைகள் நீட்டி

பிள்ளை மொழியால்

எனை அழைத்தாள்

 

கை இரண்டில்

வாரிக்கொண்டேன்

 

என் மகளே

என்று அணைத்துக்கொண்டேன்