இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, February 28, 2012

இப்படியும் சிலர் - வாழ்க வளமுடன் :

                இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் இருந்து எனது வீட்டிற்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய நேரிட்டது. பொதுவாகவே எனக்கு பயணங்களின்போது சிறிது இடைவெளி கிடைத்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கமுண்டு. அன்றும் அவ்வாறே படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷன்-ஐ வண்டி நெருங்கிக்கொண்டிருந்தது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் (இறங்குவதற்கு முன்) என்னிடம் 'நீங்கள் இந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டுமா?' என்று அந்த ஸ்டேஷன் பெயரை சொல்லிகேட்டார். நானும் 'இல்லை, என்னுடையது அடுத்தது' என்று சொல்லிவிட்டு புத்தகத்தில் மூழ்கினேன்.
 
                சிறிது யோசித்த பிறகு, எனக்கு ஏதோ வித்தியாசமாய் பட, அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் 'பலரும் பேருந்து அல்லது ரயில் பயணங்களின் போது புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சில சமயம் புத்தக ஸ்வாரசியத்தில் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டு அவதிக்குள்ளாகின்றனர். அதனால் நான் இறங்கும் முன் யாரேனும் புத்தகத்துடன் தென்பட்டால் அவர்களை இவ்வாறு கேட்டு செல்வது வழக்கம்' என்றார். நான் அப்படியே மலைத்து போனேன். தங்கள் நிறுத்தம் வரும்போது ஓடும் வண்டியிலிருந்து இறங்கியோடும் 'வேகமான' உலகத்தில், அடுத்தவர் இறங்கும் இடத்தை நினைவுபடுத்தி செல்லும் இவர் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்.
 
                நாமும் இவ்வாறு நடக்க முயற்சிசெய்வோம் (?)

Thursday, February 2, 2012

கவிதைகள் :

அவளின்
கவிதை பேசும் கண்கள்
எங்கு கற்றன
என்னை பார்க்கும் பொது மட்டும்
வசை பாடுவதற்கு !
----
அவள் விழிகள் பேசுமாம்
அப்புறமேன்
வாய்பேச முடியாத
அவளுக்கு ஊமையென்ற பட்டப்பெயர் ?

பேருந்துக்குள் விலங்கினம் :

என் பேருந்து பயணத்தில்
நான் அதிகம் சந்திப்பது
மிருகங்களை தான்
 
இடித்துக்கொண்டு போகும் எருமை
பாக்கை குதப்பும் பன்றி
நாக்கை தொங்கவிட்டு
வெறிக்கும் நாய்
 
ஏ! நிர்வாகமே
ஒருபுறம் 'பெண்கள்' என்று எழுதிவைத்து
மறுபுறம் 'ஆண்கள்' என்று எழுத மறந்தாய்
 
பார்!
விலங்கினங்கள்
பெருந்துக்குள்!

உறவுக்கு உறவுகள் இல்லை :

இது
என் தாத்தா தந்த காசு
என் பாட்டி சொன்ன கதை
என் பெரியப்பா கொடுத்த பொம்மை
என் அண்ணன் தந்த மிட்டாய்
 
இவையெல்லாம் இன்று
பட்டணத்து
அங்கிளுக்குள்ளும்
ஆண்டிக்குள்ளும்
அடங்கிப்போய்
வெறுமையாய்!
 
உலகம் சுருங்கிப்போனது
உள்ளங்கள் சுருங்கிப்போனது
இன்று
உறவுகளும் சுருங்கிப்போய்
குற்றுயிரும் குலையுயிறுமாய்
 
ஐ‌சி‌யுவில் வைத்து காக்க
பாவம் உறவுக்கு இன்று உறவுகள் இல்லை!

ஆசை :

அதிகாலை சூரியன்
இளங்காலை தென்றல்
மலரும் மொட்டுக்கள்
சிலிர்க்கும் பறவை கூட்டம்
புல்லின் பனி கிரீடம்
இவை அனைத்தையும்
தரிசிக்க நினைத்தேன்
 
நாடு இரவு தாண்டி தொடரும்
கணினி சாட்டிங்
என்னை தற்காலிக குருடனாக்கி
வேடிக்கை பார்க்கிறது.

வெற்றி தோல்வி :

வெற்றி தோல்வி என்பது
நாணயத்தின் இரு பக்கங்கள்
என்று யார் சொன்னது,
 
உழைப்புக்கும் சோம்பலுக்கும்
உள்ள வித்தியாசம் அது
 
சோம்பலை கொன்று புதைத்து
உழைப்பென்ற விதையை விதைத்து
வியர்வை நீரை பாய்ச்சு
வெற்றி தானே வளரும்.

மழலைத் தமிழ் இனிமை (கவிதை) :

அடம் பிடிக்கும் குழந்தைக்கு
நிலவில் வடைசுடும் பாட்டியை காட்டி
சோறூட்டினாள் தாய்
 
நிலவுக்கு அழைத்து செல்வதாய் கூறி
பொம்மைக்கு சோறூட்டியது
குழந்தை.
---
 
என் மழலையின் கையால்
ஒரு துண்டு தோசையில்
என் வயிறு நிறைந்து போனது
 
என் விரல் பிடித்து நடக்கும்
குட்டி தேவதை கொடுத்த
பிஞ்சு இதழ் முத்தத்தில்
என் மனம் நிறைந்துபோனது
 
என் பிஞ்சின் மடியில்
பிள்ளையானேன்
அவள் மழலை தாலாட்டிலே!
---
 
மாலை வீடு திரும்பியதும்
ஓடிவந்து கட்டியணைக்கும்
குழந்தை
என் வாடிய முகம் பார்க்கும்
சின்னஇதழ் புன்னகையோடு!
 
சோர்வெல்லாம் தொலைந்துபோய்
உற்சாகம் பற்றிக்கொள்ள
குழந்தையோடு குழந்தையாய் மாறி
நான் விளையாடுவதைப் பார்த்து
பொறாமை படுகின்றன
பொம்மைகள் !
---
 
காலை பனியின் தூய்மை
மெல்லிய மலரின் குளுமை
வீசும் தென்றலின் மென்மை
இவை அனைத்தும்
மண்டியிட்டன
என் செல்ல மகள் முன்பு
தங்களின் தோல்வியை
ஒப்புக்கொண்டு !
---
 
தப்பும் தவறுமான
தமிழ் இனித்தது
என் குழந்தையின்
மழலையில் !
---
 
என் குழந்தை
பேசும் மழலை
கேட்டு வியக்கிறேன்
 
தமிழ்
இவ்வளவு
இனிமையா
என்று !
---