இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, June 28, 2012

நமக்கான 5 நிமிடங்கள் :

                 நாம் நமது தினசரி வாழ்க்கையில் 99% நேரத்தினை அடுத்தவர்களுக்காக செலவிடுகிறோம் ( அனைவருக்கும் பொருந்தாது ) அல்லது செலவிடுது போல் அலுத்துக்கொள்கிறோம். ஆனால் நமக்கான நேரத்தை பயன்படுத்தாமலேயே வீணடிக்கிறோம். கொஞ்சம் தலையை சுற்றி மூக்கை தொடுவதை போல் தோன்றுகிறதா? இதோ எளிமையாக எனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
                 எனது நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். அந்த நிறுவனம் 'காலம் தவறாமை'யை மிகவும் கடுமையாக பின்பற்றிவரும் ஒரு நிறுவனம். காலை பணிநேரத்திற்கு தாமதமாக வர 5 நிமிடம் மட்டுமே அனுமதி. அதற்கு ஒரு நிமிடம் கூடினாலும் 1 மணி நேரத்திற்கான சம்பளம் பிடித்துக்கொள்ளப்படும். அதுவே 15 நிமிடங்கள் என்றால் 2 மணி நேரங்கள், 30 நிமிடங்கள் என்றால் அரைநாள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஒருவர் விடுப்பு எடுத்தால் அன்றைய சம்பளம் அவ்வளவுதான். இவ்வளவும் மிகவும் கடினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 
                இவர் தினமும் தனது பைக்-ல் பணிக்கு செல்வது வழக்கம். வண்டியை சரிவர பழுது பார்க்காமல் விட்டதால் அதன் நிலைமை மிகவும் மோசமான நிலையில். ஆனாலும் நண்பர் அதை பற்றி கவலை கொள்ளவில்லை. காலையில் எழுவார், தயாராகி வெளியில் வந்து வண்டியை எடுத்து கிளம்பிவிடுவார். மாலை திரும்பியதும் அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு அப்படியே மறந்துவிடுவார். பெட்ரோல் போடுவதோடு சரி. ஒரு நாள் காலை வழக்கம் போல் வண்டியை எடுத்து 'ஸ்டார்ட்' செய்ய அது முரண்டு பிடித்தது. வண்டியை விட்டு பேருந்தில் ஏறி காலதாமதமாக பணிக்கு சென்றார். ஒரு நாள் இருநாள் அல்ல. இப்படி பலநாட்கள். தொடர்ந்து காலதாமதமாக வந்ததால் அவருக்கு வர வேண்டிய 'பதவி உயர்வு' மற்றும் சம்பள உயர்வும் மறுக்கப்பட்டது.
 
               தினமும் ஒரு '5' நிமிடங்கள் அந்த வண்டிக்காக இல்லையில்லை 'நமக்காக' செலவழித்திருந்தால்... இவ்வளவு அவஸ்த்தை இல்லை. காலையில் வண்டியை எடுத்து சரிபார்த்து வைத்தால் கடைசி நேர அவசரம் குறையும். வண்டி பழுது என்று முன்பே தெரிந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி பேருந்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் அலுவலகம் செல்லலாம். அந்த '5' நிமிடம் இன்று இவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
 
              இப்பொழுதெல்லாம் எனது நண்பர் கண் விழிப்பது தனது 'வண்டியின்' முகத்தில் தான். நன்றாக துடைத்து, எண்ணெய் எரிபொருள் சரிபார்த்து, ஒரு முறை 'ஸ்டார்ட்' செய்து பரிசோத்தித்த பின்னரே காலை கடன். வாரம் ஒருமுறை சக்கரத்தில் காற்றின் அழுத்தம் சரிபார்த்தல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வண்டியை பழுது பார்த்தல் என்று பொறுப்புடன் செய்கிறார். இப்பொழுது 'கால தாமதம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
            அதனால் தோழர்களே! நமக்கான அந்த '5' நிமிடங்களை நிச்சயம் வீணடிக்காமல் பயன்படுத்தி பயன் பெறுவோம். வெறும் பதவி உயர்வுக்காக மட்டுமென்று சொல்லவில்லை. நம் நண்பர்கள், சொந்தங்களை இழக்காமல் இருக்கவும் தான். நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு காலதாமதமாக சென்று 'வழியில் பைக் படுத்திவிட்டது' என்று கூறிப்பாருங்கள், நான் சொல்வது புரியும்.

Wednesday, June 20, 2012

நிஜ வாழ்க்கை அற்புதங்கள் :

           நேற்று எனது சக ஊழியருடன் உரையாடி கொண்டிருந்தபோது எனக்கும் அவருக்கும் 'கடவுள்' இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் கூறிய (அவருடைய) சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் கூறியதிலிருந்து சில...
 
            *** 1987 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 31ந்தேதி நானும் எனது மனைவியும் புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு, திருப்பதிக்கு செல்ல ஆயத்தமானோம். அன்று முற்பகல் அரசு பேருந்தில் ஏறி பயணித்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் சென்ற பேருந்து வழியிலேயே பழுதானது. இதனை 'அபசகுனம்' என்றெண்ணி திரும்பிவிட நினைத்தோம். ஆனால், மனதினை தேற்றிக்கொண்டு, அப்பொழுது ஏற்பாடு செய்யப்பெற்ற மாற்று பேருந்தில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
 
             திருப்பதி வந்தடைந்த உடன், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினோம். கோவிலுக்கு போகும் வழியில் மொட்டை போட்டு பின்பு அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு தரிசனம் பெற கோவில் நோக்கி நடை போட்டோம். அங்கு சென்றதும் நாங்கள் கண்ட காட்சி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது இன்னும் மூன்று நாட்களுக்கு 'முன்பதிவு' முடிந்துவிட்டது. இனி 03.01.1988 அன்று காலை தான் அனுமதி என்று ஒரு அறிவிப்பு பலகை அங்கே வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் என் மனைவி, " அதுதான் அப்பவே அபசகுனம் ஆச்சே" என்று வருத்தப்பட, அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன்.
 
             அப்பொழுது தரிசனம் வேண்டி வந்த பக்தர்கள் கூட்டம் எங்களோடு சேர்ந்துகொள்ள, ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அவ்வழியே வந்த காவலர் ஒருவர், "என்ன இங்கே கூட்டம், உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்" என்று சற்று கோபம் தோய்ந்த குரலில் வினவ, உடனே நான் " நானும் என் மனைவியும் கடவுள் தரிசனதிற்காக சென்னையிலிருந்து வருகிறோம்" என்று கூறி அறிவிப்பு பலகை விஷயத்தையும் கூறினேன். அதற்கு அவர் " தரிசனம் பார்க்க வேண்டுமென்றால் உள்ளே போக வேண்டியதுதானே, வெளியே ஏன் நிற்கிறீர்கள்" என்று சொன்னார். நானோ குழப்பத்தோடு என் பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்தபடியே, "இதோ இவர்களும் உள்ளனர்" என்க, அவர் உடனே "அவர்களுக்கும் தான்" என்றார். நான் உடனே பின்னால் திரும்பி இந்த செய்தியினை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கிறேன், அந்த காவலரை காணவில்லை.ஆச்சர்யம்! அங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் இல்லை, கதவிலிருந்த பூட்டும் இல்லை. அங்கே அனுமதி சீட்டு வழங்குபரை தவிர வேறு யாருமில்லை. அவரிடம் சீட்டு பெற்று  நாங்கள் அனைவரும் உள் சென்று 'புத்தாண்டு' அன்று கடவுள் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். ***
 
            பொறுமையாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தவர் என்னை நோக்கி " இப்பொழுது சொல்லுங்கள், கடவுள் இருக்கிறாரா? இல்லையா?. என்னிடம் எந்த பதிலும் இல்லை. உங்களுக்காவது பதில் தெரியுமா?
 

Saturday, June 2, 2012

கிராம திருவிழாக்கள்:

சமீபத்தில் கோடை விடுமுறைக்கு எங்களின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். விடுமுறையில் கிராம அழகை ரசித்தது மட்டுமின்றி கிராம மக்களிடம் இன்றும் காணப்படும் ஒற்றுமையை கண்டு ரசித்து திரும்பினோம். அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள இந்த பதிவு.
 
ஒரு வளர்பிறை தினத்தன்று ஊரிலுள்ள பெரியவர்கள் ஒன்று கூடி அம்மனுக்கு 'கூழ்' ஊற்றும் திருவிழா நடத்த திட்டமிட்டனர். அது ஊர்மக்களுக்கு தெரிவிக்கபெற்று மறுநாள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்பொழுது ஊர் பெரியவர் திருவிழாவுக்கு செய்யவேண்டிய வேலைகள் மற்றும் அவற்றுக்குண்டான செலவுகளை பட்டியலிட்டார் (Planning). பின்பு செலவுத்தொகையை பங்கிட்டு, வீட்டிற்கு இவ்வளவு என்று வசூல் செய்ய முடிவடுத்தனர் (Budgeting) (அனைவரும் சமமான தொகையை மட்டுமே செலுத்தவேண்டும், நன்கொடைக்கு தடை).
 
பண விஷயம் முடிந்து வேலையை பிரித்துக்கொடுக்க முனைந்து ஒரு பெரியவர் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக்கொடுத்தார் (Delegation  of Authority & Responsibility). அப்பொழுது இடைமறித்த பெரியவர் ஒருவர் சென்ற வருடம் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி, ஓரிரு இளைஞர்களின் பொறுப்புகளை மாற்றினார் (Appraisal, Feedback and Corrective Action). பின்பு விழாத் தேதி குறிக்கப்பெற்று அனைவரும் கலைந்துசென்றனர் (Goal Setting).
 
முதல் வேலையாக 'காப்பு' கட்டப்பட்டது (Health & Safety Environment) (மக்கள் பெரும்திரளாக கூடும் திருவிழா, அதனால் வெளியூரிலிந்து வருபவர்கள் மூலம்  நோய் பரவாமல் இருக்க இந்த காப்பு). திருவிழாவிற்கு முதல்நாள் கரகம் ஜோடித்து ஆரம்பகால பூஜைகள் நடந்தேறின. மறுநாள் (கூழ் ஊற்றும் அன்று) காலையிலேயே மக்கள் அனைவரும் வீடு வாசல் சுத்தம் செய்து வாசலில் தண்ணீர் தெளித்து ஊர்வலத்திற்கு தயாரானார்கள். நல்ல நேரம் பார்க்கபட்டு ஊர்வலம் துவங்கியது. வீட்டிற்கு வீடு பூஜை செய்யப்பெற்று, வீட்டிலிருந்து ஒருவர் கூழ் குடத்துடன் ஊர்வலத்தில் சேர்ந்து கோயில் நோக்கி செல்ல துவங்கினர்.
 
கோவிலை அடைந்ததும் கூழ் கூடங்கள் பூஜைக்காக 'அம்மனுக்கு' முன்பாக வைக்கப்பெற்று, பூஜை முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்பட்டன. ஏழைகளும், பக்தர்களும் வரிசையில் நின்று அம்மானை தரிசித்து 'கூழ்' பெற்று சென்ற காட்சி, அந்த அம்மானே நேரில் வந்து கூழ் குடித்ததை போல் இருந்தது. ஊரில் உள்ள அனைவரும் பசியாறி, குளிர்ச்சியுற்று வாழ்த்தி சென்றது மனதை நெகிழ்ச்சியுற செய்தது.
 
மாலை அம்மனுக்கு பூஜை முடிந்ததும், ஊர்த்தேர் உற்சவ மூர்த்தியுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் ஒருபுறம், வான வேடிக்கை ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்புகள் ஒருபுறம், அலங்காரப்பொருள் கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களின் கடைகள், துணிக்கடைகள் என்று ஊரே ஒரு 'நகர கடைவீதி' போல் காட்சியளித்தது. எங்கு நோக்கினும் மகிழ்ச்சி அலைகள். யாரை பார்த்தாலும் புன்னகை. அப்பப்பா! சொர்க்கத்திற்கு வந்துவிட்ட உணர்வு. ஒருபக்கம் அம்மனுக்கு 'அசைவ' படையல், இன்னொரு பக்கம் அன்னதானம், தெருக்கூத்து என்று எங்கு நோக்கினும் கூட்டம். சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வெளியூருக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடியது நிச்சயம் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
 
இந்தியாவின் உயிர் நிச்சயம் 'கிராமங்களில்' தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட நாள் என் வாழ்நாளில் பொன்னாள். இதில் ஒரு விஷயம் பார்த்தீர்களா. நாம் 'மேலாண்மை உத்திகள் ' (Management technique) என்று குறிப்பிடும் அனைத்தும் அங்கு அதிகம் படிக்காத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. படித்துவிட்டு ஆட்டம் போதும் பலர் நிச்சயம் கற்றுக்கொள்ள 'கிராமத்தில்' ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது. முடிந்தால் தோழர்களே உங்கள் சொந்த கிராமத்திற்கு இல்லையென்றால் நண்பர்கள் கிராமத்திற்கு செல்லுங்கள். இன்றும் உயிரோடிருக்கும் 'கிராம' கலாச்சாரத்தை அனுபவித்து மகிழுங்கள்.