இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, July 19, 2012

படிக்கும் பழக்கமும் புத்தகங்களும்:

         நண்பர் ஒருவர் ஒருநாள் ஒரு பழைய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். "என்ன நண்பரே! திடீர் பழக்கம்? என்று நான் வினவியதற்கு விளக்கமாக ஒரு கதா காலட்சேபமே நடத்திவிட்டார். அவர் சொன்னதிலிருந்து சில வரிகள் மட்டும் இதோ உங்களுக்காக.
 
*** போகின்ற போக்கை பார்த்தால் தினசரி செய்திதாள்களையோ, வார மற்றும் மாத இதழ்களையோ படிக்கும் முறை மாறிவிடும் போல் தெரிகிறது. உதாரணமாக இப்பொழுது தினசரிகளில் தலைப்பு செய்திகள், வர்த்தகம், மாநில மற்றும் மாவட்ட செய்திகள், சினிமா, விளையாட்டு, உலகம், இன்னும் பல என்று பற்பல தலைப்புகளில் செய்திகள் வெளியிடுகின்றனர். வார மற்றும் மாத இதழ்களில் கலை, கவிதை, கட்டுரை, அரசியல், கேள்வி பதில், சமையல், இளைஞர் சிறப்பிதழ், பெண்கள் சிறப்பிதழ், வேலைவாய்ப்பு என்று பலவகையுண்டு.
 
படிக்க படிக்க சுவாரசியம் குறையாத க்ரைம் நாவல்களும், சிறிய மற்றும் பெரிய குடும்ப நாவல்களும் நம்மை படிக்க தூண்டுபவை. அறிவியல் சம்பந்தமாக அறிந்து கொள்ள தனி புத்தகம், தொழில்நுட்பம் அறிந்து கொள்ள தனி புத்தகம் என்று புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. சரி, விஷயத்திற்கு வருகிறேன். எதிர்காலத்தில் இ-புத்தகங்களின் வரவைப்பற்றி நான் பேசப்போவதில்லை. இன்றைய நிலவரப்படி நாளைய இதழ்களில் தலைப்புகள் எப்படி வரும் என்று எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சொல்கிறேன்.கேள்.
 
கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, கள்ளக் காதல் தொடர்பான செய்திகளே அதிகம் வருவதனால் அவற்றுக்கு தனித்தனியே பக்கங்கள் ஒதுக்கப்படும். மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக நடக்கும் கெட்ட விஷயங்களுக்கு தனிப் பக்கம். இலவச இணைப்பாக கொலை, கொள்ளை மற்றும் இதர குற்றங்கள் நடந்த விதத்தை விவரிக்கும் சிறப்பிதழ்கள் வழங்கப்படும். கொலை வல்லுனர்கள், கொள்ளைக்காரர்கள் தங்களின் திறமைகள் பற்றிய பேட்டி நிச்சயம் உண்டு. வேண்டுமானால் பயிற்சியளிக்க இவ்வளவு ஆகும் என்று விளம்பரமும் கொடுக்கலாம்***
 
இப்படியே பேசிக்கொண்டிருந்தவரை இடை மறித்து, இன்னும் நீங்கள் சரியான விளக்கம் கூறவில்லையே என்றதற்கு, " இப்போ வர புத்தகங்களை படிக்க முடிவதில்லை. அதனால் தான் 'பழைய' புத்தகங்களுக்கு தாவிவிட்டேன்" என்றவர், "பழைய புத்தகங்கள் விலையும் குறைவுதான்" என்று முடித்தார்.
 
எனக்கென்னவோ அவர் சொன்னதில் 'உண்மை' இருப்பது போல் தோன்றுகிறது.