இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, August 29, 2011

தண்டனை :

பசுவிற்கு பெண்ணும்
தனக்கு ஆணும் வேண்டி
கிடா வெட்டினான்
பால்காரன்,
 
காளை கன்றையும்
பெண் குழந்தையும்
அருளினான் இறைவன்,
கிடாவை கொன்ற
பாவத்திற்காக!

Saturday, August 27, 2011

முதிர்கன்னி:

பிரம்மன் படைப்பில் ஜோடி இல்லாமல் தனியே வாழ(ட) சபிக்கப்பட்டவள். 'உனக்கென ஒருவன் பிறக்காமலா இருப்பான்' என்ற கூற்றை பொய்யென உணர்த்துபவள். பெண்ணின் திருமணவயது 21 என்ற சட்டத்திலிருந்து தப்பித்தவள். இன்னும் எத்தனயோ விளக்கங்கள் உண்டு 'முதிர்கன்னி' என்ற வார்த்தைக்கு. முதலில் தந்தை, அடுத்து சகோதரன், பின்பு கணவன், கடைசியில் பிள்ளை என்று முல்லைகொடியாய்  'துணை' சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்ட பெண்ணினம், தனிமை சாபத்துடன் வாழ்வது சாவினும் கொடுமையானது.
 
வெறும் தோலும் சதையும் மட்டும் விலைபோகும் இந்த சமுதாயத்தில் 'மனசுக்கு' மதிப்பில்லை. உடல் அழகில்லை என்று ஒடுக்கப்பட்டோர் சிலரே என்றாலும், கேட்கப்பெற்ற வரதட்சணை கொடுக்கமுடியாமல் முடங்கிப்போனோர் பலர். 'முதிர்க்கன்னி'யின் சோகத்திற்கு பின்னே இருப்பது 'வரதட்சணை' தான். ஆம். அழகு நிலையங்கள் பல உண்டு அழகில்லா பெண்ணை அழகு பெற செய்வதற்கு. ஆனால் விடிவே இல்லை 'பொன்' இல்லா பெண்ணுக்கு.
 
கைம்பெண்ணுக்கு கூட நலவாழ்வு கொடுக்க ஆளுண்டு. 'முதிர்கன்னிக்கு' என்றும் சாப விமோசனமே இல்லை. தனியே வாழ்ந்து 'சாதிக்கும்' திருமணமான பெண்களுக்கு ஈடாக வெகுண்டெழ நினைத்தாலும் சமுதாயம் தனது கேலிப்பேச்சால் அவளை கூண்டுக்கிளியாக மாற்றிவிடுகிறது. பெண்ணே பெண்ணை இழிவுபடுத்தும் நிலைக்கு ஆளாகி பின்பு மரணத்தை மணந்தோர் ஏராளம்.
 
இலவச தாலி மட்டும் போதுமா இவர்களின் கண்ணீர் துடைக்க? நல்ல கல்வியும், தகுதிக்கு வேலைவாய்ப்பும் அல்லவா வேண்டும் இவர்களின் துயர் துடைக்க.

Friday, August 26, 2011

மீனவப்பெண் :

மீனவ புதுப்பெண்
காத்திருந்தாள்
கடல் சென்ற
கணவனுக்காக,
 
திரும்ப வந்தது
படகு மட்டும்
ரத்தக்கறை
தோட்டாவுடன்!
 
பாவம்!
மீனுக்கு தெரிவதில்லை
இந்திய எல்லையை
கடந்துவிட்டோம் என்று!

Thursday, August 25, 2011

தீண்டாமை:

சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். இன்றும் அந்த ஊரில் 'அவர்கள்' கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. உயர்ந்த சாதி மக்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதியில்லை. அப்படியே படியில் கால் பட்டுவிட்டாலும், உடனே கழுவி விடுகின்றனர். ஆனால் வயல்களில் வேலை செய்வது, தோட்டங்களில் காவல் காப்பது, மற்ற எடுபிடி வேலைகள் செய்வது 'அவர்கள்' தான்.அவர்களின் உழைப்பு வேண்டும். உறவு வேண்டாமா?
 
அவர்களுக்கு தனி கோயில் உண்டு. அவர்களே பூஜை செய்துகொள்வர். இப்படி பல விதமான கொடுமைகள் இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது. உள்ளூர் கோயில்களில் 'தீட்டு'. அதுவே திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற பெரிய கோயில்களுக்கு பொருந்தாது. கடவுளுக்கும் 'தீட்டில்' நம்பிக்கை உண்டோ? உள்ளூர் தேவதைகளுக்கு மனிதர்கள் விதித்த 'எல்லைகள்' உண்மைதானோ? தன் எல்லைக்குள் இருக்கும் 'அவர்கள்' தன்னை வெளியில் இருந்துதான் வணங்கவேண்டும், ஆனால் வெளியூர் கோயில்களுக்குள் செல்ல அனுமதி உண்டு. ஆண்டவா! என்ன இது. உன் சட்டத்திலும் 'ஓட்டை'. தண்டனை (தாழ்ந்த குலத்தில் பிறந்ததற்கு) என்றால் பாரபட்சமின்றி அல்லவா இருக்க வேண்டும்.
 
'Cloud Computing' காலத்திலும் 'தீண்டாமை'. மூடர்களே! உங்கள் சுயநல கூட்டில் இருந்து வெளியே வாருங்கள். உலகம் எவ்வளவு அழகு. அதனை 'அவர்களும்' அனுபவித்துவிட்டு போகட்டும். ஏன் ஒரவஞ்சனை? இயற்கை உனக்கென ஒன்று, அவர்களுக்கு ஒன்று என தனியே எதையும் படைக்கவில்லை. நீயே ஏன் முட்டுக்கட்டை போடுகிறாய். உனக்கேது அந்த உரிமை?
 
காலம் நிச்சயம் நல்ல வழியை காட்டும் என்ற நம்பிக்கையுடன் ஆண்டவனிடம் ஒரு விளக்கம் வேண்டுகிறேன், "ஒருவனுக்கான அந்த ஒருத்தியை ஏன் அவன் சாதியிலேயே படைக்கிறாய். அப்படி என்றால் சாதியையும் மதத்தையும் நீதான் படைத்தாயா? ஆம் என்றால், ஏன்? பதில் சொல்!"

Wednesday, August 24, 2011

மதமாற்றமா? மனமாற்றமா?

மதம்மாறி வேண்டிய பின்பு
வாரி கொடுத்த ஆண்டவன்
செவிமடுக்கவில்லை
மனம்மாறி கெஞ்சியபோது!
 
மனிதர்களின் மதப்பித்து
கடவுளையும்
விட்டு வைக்கவில்லை!
 
ஆண்டவா!
நீயே சொல்!
தேவை மனமாற்றமா?
மதமாற்றமா?

மலர்:

மெல்லிதழ் திறந்து
காலை பனி அருந்தி
எனை பார்த்து
புன்னகைக்கும்
இயற்கை அழகு இல்லை
வெளிநாட்டிலிருந்து
வரவழைத்த
அலங்கார
பிளாஸ்டிக்
மலர்களில்!

வானவில்:

காலை பெய்த
அமில மழையில்
சாயம் போனது
வானவில்!

Tuesday, August 23, 2011

அதிகார துஷ்ப்ரயோகம்:

"நான் நெனச்சா உன்ன இல்லாம பண்ணிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பொய் வழக்குல உள்ள தள்ளிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பணி இடமாற்றம் செஞ்சிடுவேன்"
"நான் நெனச்சா உன் சொத்தை எல்லாம் அழிச்சிடுவேன்"
 
"நான் மனசு வெச்சாதான் உனக்கு ப்ரமோஷன்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ஃபைல் அடுத்த மேசைக்கு போகும்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ப்ராஜக்ட் பிரச்சனை இல்லாமல் நடக்கும்"
"நான் மனசு வெச்சாதான் உன் மேல் உள்ள பழியை தொடைக்கமுடியும்"
 
இவை திரைப்படத்தில் வரும் 'பன்ச்' டயலாக் இல்லை. தினசரி நாம் கேட்கும் சிலரின் 'மிரட்டல்' மொழிகள். அதிகார துஷ்ப்ரயோகம். ஆம். அதிகாரம் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இழிநிலை இன்றைய இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஏன்? நான் நினைத்தால் 100 பேருக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்குவேன், 4 குடும்பங்களை வாழ வைப்பேன், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என்று யாரும் சூளுரைப்பதில்லையே? ஒருவனை அழிக்க பயன்படுத்தும் அதிகாரத்தை, ஒருவர் வாழ உபயோக படுத்தலாமே? நாம் ஏன் செய்வதில்லை? நமது பலத்தை ஏன் எப்பொழுதும் பலவீனமானவர்களிடமே காட்டுகிறோம்?
 
பி.கு:என்றைக்கு தான் அவரவர் தனக்கு இடப்பட்ட வேலையை (மட்டும்) சரியாக பார்க்கப்போகிறோம்?

Tuesday, August 16, 2011

பிச்சை:

இந்திய திருநாட்டில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்தில் நாமெல்லாம் பெருமை பட்டுக்கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் 'பிச்சை'. ஆம். இந்தியாவில் 'பிச்சைக்காரர்கள்' இல்லாத இடமே இல்லை. இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று இல்லாமல் ஒரே 'இனமாய்' உள்ளனர். பெருமை பட இது போதாதா?  இங்கு பிச்சைக்காரர்களில் எதற்கும் வழியில்லாதவன், கொஞ்சம் இருப்பவன், எல்லாம் இருப்பவன் என்று பலவகை உண்டு. பிச்சையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரையில் குறைக்க முயற்சி செய்யலாம். (நாளை 'வல்லரசு' என்று மார்தட்ட வேண்டுமே).
 
முதல் வகை: சாலையோரம் அனாதையாய், உடம்பெல்லாம் அழுக்கெறி, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, உயிர் வாழ்வதற்கே கையேந்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வயதானவர்கள், பிள்ளையால் கைவிடப்பட்டோர், வழி தவறி வந்தவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இவ்வகையை சார்ந்தவர்கள். இவர்கள் ஆதரவு தேடி அலையும் 'கொடி' போன்றவர்கள். இவர்களிடம் வெறுமனே பரிதாபம் மட்டும் காட்டாமல், ஏதேனும் ஒரு மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தந்து உதவலாம்.
 
இரண்டாம் வகை: மின்சார ரயிலில் இவர்களை பார்க்கலாம். நன்றாக குளித்து, சிகை அலங்காரம் செய்து, ஏதேனும் ஒரு வாத்தியத்துடன் களமிறங்கும் 'பார்வை' இல்லாதோர் இந்த வகையில் அடக்கம். அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கு பொருள் பெற்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு அதே ரயிலில் ஏதேனும் விற்று சம்பாதிக்கும் 'பார்வை' இல்லாதோர் எவ்வளவோ மேல். அவர்களிடம் பொருள் வாங்குவதன் மூலம் நாளைய பிச்சைக்காரர் ஒருவரை குறைக்கலாம். அதே போல் கை, கால், பார்வை அனைத்தும் இருந்தும் வெறுமனே பிச்சை எடுப்பவர்களும் உண்டு. ('ஏதோ ஒரு பாட்டு' - தெலுங்கில் பாடி கொல்பவர்கள்).
 
மூன்றாம் வகை: பள்ளி, கல்லூரி, கோயில், அரசு அலுவலகம் என்று இவர்களை எங்கும் பார்க்கலாம். பள்ளி சிறப்புக்கட்டணம் என்று பெற்றோரை சுரண்டுபவர்கள், கல்லூரி வளர்ச்சிநிதி என்று மாணவர்களை சுரண்டுபவர்கள், தட்சணை என்ற பெயரில் பக்தர்களை நோகடிப்பவர்கள், லஞ்சம் என்ற பெயரில் பொது மக்களை அலைகழிப்பவர்கள் அனைவரும் இவ்வகையை சேர்ந்தவர்கள். முதல் இரண்டு வகையினரால் எந்த ஆபத்தும் இல்லை. பொருள் கொடுக்கவிட்டால் அடுத்தவர்களை நாடி சென்று விடுவர் அல்லது வசை படி செல்வர். ஆனால் இந்த மூன்றாம் வகையினர் மிகவும் ஆபத்தானவர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவர்கள். இவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம்தான் பதில் சொல்லவேண்டும்.
 
இந்த மூன்று வகை மட்டுமில்லாமல் இன்னும் பலவகை 'பிச்சைக்காரர்கள்' உண்டு. பேருந்து மற்றும் ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள், முக்கிய இடங்களில் வரிசையில் நில்லாமல் 'பண' பலத்தால் முன்னே செல்பவர்கள், கலப்படம் செய்பவர்கள், அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கடத்துபவர்கள், வண்டியில் அனைத்தும் இருந்தும் 'ஓவர் ஸ்பீடு' என்று பணம் பறிப்பவர்கள், நடைபாதையில் கடை போட அனுமதித்து 'கமிஷன்' அடிப்பவர்கள், பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள், லஞ்சம் கொடுத்து 'லாபம்' அனுபவிப்பவர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் மூன்றாம் வகையினை சேர்ந்தவர்கள். நாட்டின் வளர்ச்சியை அரிக்கும் 'விஷ' உண்ணிகள். இவர்களை அழிக்காமல் இந்தியா என்றுமே ' வல்லரசு' ஆக முடியாது. வறுமை கோட்டுக்கு புதிய விளக்கம் கொடுத்து 'ஏழ்மையை' வெறும் ஏட்டில் மட்டும் அழித்த இன்றைய ஆள்பவர்கள், ஊழலுக்கு புதிய விளக்கம் கொடுத்து அதற்கு 'நியாய' சாயம் பூசி, இந்தியாவை காகிதத்தில் மட்டும் 'வல்லரசு' ஆக்குவார்கள் போலிருக்கிறது.
 
பிச்சைக்காரர்கள் இல்லா நாடு இந்தியா என்ற புகழை பெற நம்மால் இயன்றதை செய்வோம். வாழ்க இந்தியா. வளர்க ஊழல் மன்னிக்கவும் வளர்க _______ , என்ன சொல்வதென்று தெரியவில்லை (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க).

Saturday, August 13, 2011

சுதந்திரதின வாழ்த்துக்கள்:

இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்கள். பெரியோர்கள் அரும்பாடுப்பட்டு பெற்றுத்தந்த 'சுதந்திரத்தை' கட்டிக்காப்போம். ஊழல், லஞ்சப்பேய்களை விரட்டியடிப்போம்.

கவிதை தொகுப்பு:

சாண்ட்விச்:

இரு ஆண்களுக்கு
இடையில்
ஒரு பெண்ணின்
பைக்
பயணம்!

குமுறல்:
எங்களின்
பள்ளி கல்விக்கு,
சிறிது நாட்கள்
புத்தகங்கள் தான்
இல்லை.

ஆனால்
எங்கள் பள்ளியில்
வெகுநாட்களாய்
ஆசிரியர்களே இல்லை!
 
நீதித்துறை
தலையீட்டால்
புத்தகங்கள் கிடைத்தன.
எந்தத்துறை
தலையிட்டால்
ஆசிரியர்கள்
கிடைப்பார்கள்?
 
வானம் பார்த்த
பூமி போல
வாசலை நோக்கி
கண்ணீர் விழிகளுடன்
நாளைய
இந்திய தூண்கள் (?)
 

Thursday, August 11, 2011

நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்:

காவல்துறையில் பணிபுரியும் அனைத்து தோழர்களுக்கும் ஒரு சிறு விண்ணப்பம். ஐயா, சில நாட்கள் முன்பு லேசான தூறல். அதுசமயம் குடையுடன் மக்கள் நடப்பது என்பது சாதாரண விஷயம். அதுபோல் தான் அன்றும் ஒரு பெரியவர் குடையுடன் கூட்டத்தில் நடந்து வந்தார். ஆளில்லா ரயில்வே கிராசிங் – ல் வரும் பொது ஒரு இளம் பெண்ணின் குரல், 'கொடைய மடக்கி புடிச்சினு போயா" என்று. அந்த பெண்ணுக்கு சுமார் 20 அல்லது 21 வயதிருக்கும். சீருடை அணிந்திருந்தார். சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருப்பர் என்று நினைக்கிறேன். தலையில் தொப்பி இல்லை என்பதால் அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்கிறார் என்பது உறுதி. அப்பெரியவர் 'ஏம்மா, தூறல் போடுதே, உனக்கு கஷ்டமாயிருந்தால் கொஞ்சம் பொறுமையுடன் சொல்லக்கூடாதா?' என்றார். அதற்கு 'அப்படிதான் யா பேசுவேன், மூடிகினு போ' என்று பொரிந்து விட்டு சென்று விட்டார்.
 
ஐயா, நீங்கள் எப்போதும் குற்றவாளிகளை கையாள்பவராக இருக்கலாம். அதற்காக மக்கள் அனைவரையும் 'குற்றவாளிகள்' போல் நடத்துதல் சரியா? நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான். எங்களுடனும் அன்பாக பேசுங்கள். பொது இடத்தில் வயதுக்கு சிறிது கரிசனம் காட்டலாம். சிலர் மக்கள் குடும்பத்துடன் நடக்கலாம், ஆசிரியர் மாணவர்களுடன் நடந்து செல்லலாம், ஏன், ஊர் பெரியவர் மக்களுடன் நடந்து செல்லலாம். அனைவரின் முன்பாக 'அவமதிப்பது' என்பது சரியாகுமா? சராசரி குடிமகன் ஒரு குற்றவாளியா?
 
கண்டிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் உண்டு. தேவைப்பட்டால் அனுமதியுடன் 'தண்டிக்கும்' உரிமையும் உண்டு. அதனை சாமானிய மக்களிடம் தான் காட்டுவதா? பேருந்து பயணத்தின் போது படியில் தொங்குவோரை இறக்கி விடுங்கள். தேவைப்பட்டால் 10 நிமிடங்கள் ரோட்டோரமாய் நிற்க சொல்லுங்கள். தவறே இல்லை. ஆனால் அனைவரின் முன்பிலும் '....யே, உள்ளே போயேன்' என்று திட்டுவது நிச்சயம் மனதை காயப்படுத்தும். மற்றொரு சம்பவம். ஒருநாள் போக்குவரத்தை சரிசெய்யும் தோழர் ஒருவர், 'அந்த பக்கம் எங்கே போற. அதான் பிளாக் பண்ணி வச்சிருக்கில்ல. இப்பிடி போ' என்று சற்று காட்டமாகவே சொல்லிக்கொண்டிருந்தார். மேலோட்டமாக அவரின் செயல்பாடு சரியென்றாலும், அணுகுமுறை தவறல்லவா?
 
இதனால் மக்கள் அனைவரும் சரி என்று வாதிடவில்லை. சூழ்நிலை, வயது பார்த்து கொஞ்சம் 'அன்பாகவும்' நடந்து கொள்ளலாமே என்று தான் சொல்ல வருகிறேன். மக்களும் சற்று யோசித்து நடக்க வேண்டும். சூழ்நிலையை பார்த்து, புரிந்து நடக்க வேண்டும்.
 
தோழர்களே, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள். மாறாக மனங்களை காயப்படுத்தாதீர்கள்.
 
நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்.

Monday, August 8, 2011

காஞ்சனா - திரை விமர்சனம்:

"கொலையுண்டவன் கொலையாளிகளை ஆவியாய் வந்து பழிவாங்கும்" பேய் கதை. அதை சிறிது மசாலா தூவி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் லாரன்ஸ். மாலை 6 மணிக்குமேல் 'பேய்' பயம், இரவு சிறுநீர் கழிக்கவும் தாயின் துணை, பகலில் அதிபயங்கர வீரன் என்று பல காட்சியமைப்புகள் முனி முதல் பாகத்தை அடிக்கடி நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
 
வெறும் பாடலுக்காக மட்டும் வந்து போகும் கதையின் நாயகி லஷ்மி ராய், ஒரே ஒரு காட்சியில் வரும் வீட்டு வேலைக்காரி, கதாநாயகன் அதிரடி அறிமுகத்திற்காக வரும் கிரிக்கெட் போட்டி என்று படத்தில் ஒட்டாத பல அம்சங்கள் நிறைந்துள்ளன. காதலியை வெறுப்பேற்ற வரும் பாடல் காட்சி 'வாழ்வே மாய'த்தை நினைவுபடுத்துகிறது.
 
சுப்ரீம் ஸ்டார் 'சரத்குமார்' திருநங்கையாய் அசத்தியுள்ளார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அழுத்தமாக, விருவிருப்புடன் உள்ளன. படத்தின் சில பல குறைகளை சமன் செய்கிறது அவரின் பள்ளி மேடை பேச்சு.
 
லாரான்சின் 'ஜவுளிக்கடை' நடிப்பு பிரமாதம். வீட்டில் குளிக்கும் போது மஞ்சளை பார்க்கும் பார்வையிலேயே 'அனைத்தையும்' புரியவைத்துவிடுகிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. திருநங்கைகளின் பிரச்சனைகளை கையில் எடுத்தது பலம். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இருந்தாலும் அவரின் முயற்சிக்காக ஒரு 'சபாஷ்'.
 
நில அபகரிப்பு வில்லனாக வரும் நபருக்கு திரைக்கதையில் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. சர்வ சாதாரணமாக செத்துப்போகிறார். காணாமல் போன தன் கோஷ்டியினரை பற்றி 'சாமியாரிடம்' முறையிடுகிறார். சாமியாரும் 'நீ கொலை செய்து புதைத்த சடலங்களை....' ரீதியில் பேசுகிறார். போலீஸ் எங்கே? திரைக்கதையில் ஏன் இல்லை?
 
வழக்கமான கிளைமாக்ஸ் தான் என்றாலும் ஸ்பெஷல் ஏபெக்ட்ஸ் பின்னிஎடுக்கிறது. தேவதர்ஷணி, கோவை சரளா வயிறு புண்ணாகும் அளவிற்கு காமெடியில் மிகவும் இயல்பாக கலக்கியுள்ளனர்.
 
திருநங்கைகளும் இறைவனின் படைப்புகள் தான் என்ற நல்லதொரு செய்தியை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல நினைத்த லாரான்சுக்கு எனது மனமார பாராட்டுக்கள்.

Monday, August 1, 2011

Holographic சேமிக்கும் தொழில்நுட்பம்:

Compact டிஸ்க்-கள் புழக்கத்தில் வந்ததிலிருந்து Data Storage தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. காலங்கள் ஓட ஓட CD-R என்பது DVD என்று வளர்ந்தது. சினிமா மற்றும் இதர வீடியோ கோப்புகளை அதன் தரம் குறையாமல் ஒரே டிஸ்கில் சேமிக்க முடிந்தது. காலங்கள் மாற, இப்போது HDD தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. அதன் தேவைக்கு தீனி போடும் வகையில் உருவாக்கப்பட்டது தான் Blu-Ray டிஸ்க். சுமார் 25 ஜி‌பி முதல் 50 ஜி‌பி அளவுக்கு அதில் DATA சேமிக்க முடியும்.
 
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
 
Blu-ray டிஸ்க்கிற்கு மாற்றாக, இன்னும் அதிக கொள்ளவு திறன் கொண்ட  ஒரு DISC ஐ உருவாக்க GE யின் வல்லுனர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த தொழிநுட்பத்திற்கு 'Holographic Disc' என்று பெயரிட்டுள்ளனர். அது சுமார் 500 ஜி‌பி முதல் 1000 ஜி‌பி (1 டெராபைட்) கொள்ளவு திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு disc இல் ஒரு பெரிய மருத்துவ மனையின் அனைத்து எக்ஸ்ரே படங்களையும் சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் விபரங்களுக்கு http://news.discovery.com/tech/ge-holographic-storage-110730.html