பிரம்மன் படைப்பில் ஜோடி இல்லாமல் தனியே வாழ(ட) சபிக்கப்பட்டவள். 'உனக்கென ஒருவன் பிறக்காமலா இருப்பான்' என்ற கூற்றை பொய்யென உணர்த்துபவள். பெண்ணின் திருமணவயது 21 என்ற சட்டத்திலிருந்து தப்பித்தவள். இன்னும் எத்தனயோ விளக்கங்கள் உண்டு 'முதிர்கன்னி' என்ற வார்த்தைக்கு. முதலில் தந்தை, அடுத்து சகோதரன், பின்பு கணவன், கடைசியில் பிள்ளை என்று முல்லைகொடியாய் 'துணை' சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்ட பெண்ணினம், தனிமை சாபத்துடன் வாழ்வது சாவினும் கொடுமையானது.
வெறும் தோலும் சதையும் மட்டும் விலைபோகும் இந்த சமுதாயத்தில் 'மனசுக்கு' மதிப்பில்லை. உடல் அழகில்லை என்று ஒடுக்கப்பட்டோர் சிலரே என்றாலும், கேட்கப்பெற்ற வரதட்சணை கொடுக்கமுடியாமல் முடங்கிப்போனோர் பலர். 'முதிர்க்கன்னி'யின் சோகத்திற்கு பின்னே இருப்பது 'வரதட்சணை' தான். ஆம். அழகு நிலையங்கள் பல உண்டு அழகில்லா பெண்ணை அழகு பெற செய்வதற்கு. ஆனால் விடிவே இல்லை 'பொன்' இல்லா பெண்ணுக்கு.
கைம்பெண்ணுக்கு கூட நலவாழ்வு கொடுக்க ஆளுண்டு. 'முதிர்கன்னிக்கு' என்றும் சாப விமோசனமே இல்லை. தனியே வாழ்ந்து 'சாதிக்கும்' திருமணமான பெண்களுக்கு ஈடாக வெகுண்டெழ நினைத்தாலும் சமுதாயம் தனது கேலிப்பேச்சால் அவளை கூண்டுக்கிளியாக மாற்றிவிடுகிறது. பெண்ணே பெண்ணை இழிவுபடுத்தும் நிலைக்கு ஆளாகி பின்பு மரணத்தை மணந்தோர் ஏராளம்.
இலவச தாலி மட்டும் போதுமா இவர்களின் கண்ணீர் துடைக்க? நல்ல கல்வியும், தகுதிக்கு வேலைவாய்ப்பும் அல்லவா வேண்டும் இவர்களின் துயர் துடைக்க.