காவல்துறையில் பணிபுரியும் அனைத்து தோழர்களுக்கும் ஒரு சிறு விண்ணப்பம். ஐயா, சில நாட்கள் முன்பு லேசான தூறல். அதுசமயம் குடையுடன் மக்கள் நடப்பது என்பது சாதாரண விஷயம். அதுபோல் தான் அன்றும் ஒரு பெரியவர் குடையுடன் கூட்டத்தில் நடந்து வந்தார். ஆளில்லா ரயில்வே கிராசிங் – ல் வரும் பொது ஒரு இளம் பெண்ணின் குரல், 'கொடைய மடக்கி புடிச்சினு போயா" என்று. அந்த பெண்ணுக்கு சுமார் 20 அல்லது 21 வயதிருக்கும். சீருடை அணிந்திருந்தார். சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருப்பர் என்று நினைக்கிறேன். தலையில் தொப்பி இல்லை என்பதால் அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்கிறார் என்பது உறுதி. அப்பெரியவர் 'ஏம்மா, தூறல் போடுதே, உனக்கு கஷ்டமாயிருந்தால் கொஞ்சம் பொறுமையுடன் சொல்லக்கூடாதா?' என்றார். அதற்கு 'அப்படிதான் யா பேசுவேன், மூடிகினு போ' என்று பொரிந்து விட்டு சென்று விட்டார்.
ஐயா, நீங்கள் எப்போதும் குற்றவாளிகளை கையாள்பவராக இருக்கலாம். அதற்காக மக்கள் அனைவரையும் 'குற்றவாளிகள்' போல் நடத்துதல் சரியா? நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான். எங்களுடனும் அன்பாக பேசுங்கள். பொது இடத்தில் வயதுக்கு சிறிது கரிசனம் காட்டலாம். சிலர் மக்கள் குடும்பத்துடன் நடக்கலாம், ஆசிரியர் மாணவர்களுடன் நடந்து செல்லலாம், ஏன், ஊர் பெரியவர் மக்களுடன் நடந்து செல்லலாம். அனைவரின் முன்பாக 'அவமதிப்பது' என்பது சரியாகுமா? சராசரி குடிமகன் ஒரு குற்றவாளியா?
கண்டிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் உண்டு. தேவைப்பட்டால் அனுமதியுடன் 'தண்டிக்கும்' உரிமையும் உண்டு. அதனை சாமானிய மக்களிடம் தான் காட்டுவதா? பேருந்து பயணத்தின் போது படியில் தொங்குவோரை இறக்கி விடுங்கள். தேவைப்பட்டால் 10 நிமிடங்கள் ரோட்டோரமாய் நிற்க சொல்லுங்கள். தவறே இல்லை. ஆனால் அனைவரின் முன்பிலும் '....யே, உள்ளே போயேன்' என்று திட்டுவது நிச்சயம் மனதை காயப்படுத்தும். மற்றொரு சம்பவம். ஒருநாள் போக்குவரத்தை சரிசெய்யும் தோழர் ஒருவர், 'அந்த பக்கம் எங்கே போற. அதான் பிளாக் பண்ணி வச்சிருக்கில்ல. இப்பிடி போ' என்று சற்று காட்டமாகவே சொல்லிக்கொண்டிருந்தார். மேலோட்டமாக அவரின் செயல்பாடு சரியென்றாலும், அணுகுமுறை தவறல்லவா?
இதனால் மக்கள் அனைவரும் சரி என்று வாதிடவில்லை. சூழ்நிலை, வயது பார்த்து கொஞ்சம் 'அன்பாகவும்' நடந்து கொள்ளலாமே என்று தான் சொல்ல வருகிறேன். மக்களும் சற்று யோசித்து நடக்க வேண்டும். சூழ்நிலையை பார்த்து, புரிந்து நடக்க வேண்டும்.
தோழர்களே, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள். மாறாக மனங்களை காயப்படுத்தாதீர்கள்.
நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்.