இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, July 29, 2011

பயம் எதற்கு:

சமீப காலமாக செய்தித்தாள்களில் அடிபடும் விஷயங்கள் 'நில அபகரிப்பு', மற்றும் முந்தைய ஆட்சியில் நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள்.ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துதல் என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் அதுவே ஐந்து வருட வேலையாகிப்போனால் மக்களுக்கு என்னதான் நல்லது நடக்கும்? ஆளும் வாய்ப்பை இழந்தவர்கள், ஆட்சியில் இருக்கும் பொது 'தவறுகளை' கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது 'நடப்பவை எல்லாம் ஆளுங்கட்சியின் சதி' என்று அறிக்கை வேறு விடுகின்றனர்.
 
ஓட்டு போட்ட குடிமகனுக்கு கடைசியில் மிஞ்சுவது என்ன? தினம் காலை பரபரப்பு செய்தி. சில பல அறிக்கைகள். ஆங்காங்கே 'சாலை மறியல்', கொடும்பாவி எரிப்பு. இதை தவிர மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதுவும் கிடைப்பதாக தெரியவில்லை. 500 ரூபாய் கையூட்டு பெரும் ஒரு சாதாரண குமாஸ்தாவை மடக்கி பிடிக்க சட்டத்தில் வழியுண்டு (அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராயினும்). ஆனால் 500 கோடி ஊழல் செய்யும் ஒரு அரசியல்வாதியை அக்கட்சி ஆட்சியில் இருக்கும் போதே தண்டிக்க முடிவதில்லை. மக்களாகிய நாமும் உயிர் பயத்தால் எதையும் வெளிசொல்வதில்லை. ஆளுங்கட்சியில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் பெற இந்தியாவில் வழியே இல்லையா அல்லது நியாயமே கிடைக்காதா? புரியவில்லை.
 
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எத்தனை பேர் வழக்கு போடுகின்றனர். இவர்கள் முந்தய ஆட்சி காலத்தில் என்ன செய்தனர்? காவல் துறையில் புகார் அளித்தனரா? அல்லது அளித்த புகாருக்கு பதிலேதும் கிடைக்கவில்லையா? அதிகாரதில் இருப்பவர்கள் தவறு செய்யலாமா? அவர்களை தட்டிக்கேட்க மக்களுக்கு அதிகாரம் இல்லையா?  அரசு அதிகாரிகளை கண்காணிக்க Vigilance என்றொரு துறை இருக்கிறது. அதுபோல் அரசியல் கண்காணிக்க துறை ஒன்றை ஏன் ஏற்படுத்தக்கூடாது. தவறு செய்பவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு தனது சுயலாபத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்களால் மக்களுக்கு என்ன பயன்.
 
மக்களே! பயம் எதற்கு. தவறு செய்பவர்களை காவல் துறையின் துணை கொண்டு தண்டிப்போம். காலம் கடந்த நீதியினால் பயனேதும் இல்லை. காலத்தே பயிர் செய்வோம். காலத்தே களை எடுப்போம். சுயஒழுக்கம் ஒன்றே தீர்வு. அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழட்டும்.

Saturday, July 16, 2011

கவிதை தொகுப்பு :

முரண்பாடு:
 
சிறிய எழுத்துக்கள்
பெரியதாய் தெரிய
லென்ஸுடன் பேனா
விலை ஐந்து
விற்கிறான்
பார்வை இல்லாதவன்!
 
காகம்:
 
இட்லி துண்டில் பங்கா?
விரட்டியது காகம்!
விதைத்து விட்டானா
மனிதன்
காகத்திற்குள்ளும்
சுயநல
விஷத்தை?
 
மரவெட்டி:
 
ஒற்றைக்கால்
தவசிகளை
வதைக்கும்
அரக்கன்.
 

Tuesday, July 12, 2011

அடைகாக்கும் சேவல் (கவிதை):




















காதல் கண்மறைக்க
பெற்றோரை விட்டு வந்து
எதுவும் தெரியாத ஊரிலே
புதிதாய்
ஒரு குடித்தனம்!
மனமெல்லாம் மகிழ்ச்சி
பின்பு கருவாகி
ஆனந்த கண்ணீருடன்
ஓரினிய வாழ்க்கை!
கையிருப்பு கரைந்த பின்பு
கூலிவேலை பல
செய்தும்
தீரவில்லை சுயதேவை,
கனவுடன் ஓடிவந்து
இன்று
கனவு மட்டும்
கையிருப்பு!
கனவை நனவாக்குபவன்
தான்
கணவன் என்று
கள்ள காதல் கண்மறைக்க,
பெற்ற குழந்தையை
கைவிட்டு
வேறு ஊருக்கு பயணம்!
கையில் குழந்தையும்
நெஞ்சில் காதல் மனைவியும்
சுமந்தவன்
குழந்தையின் பசி போக்க
இன்று சுமை தூக்கியாய்!
தாயில்லா குழந்தைக்கு
தாயாகி
அடைகாக்குது சேவல்!

Saturday, July 9, 2011

நெட்டில் படித்தவை:

சிரிப்பதற்க்கு மட்டும்:
-------------
தருமன் தனது பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சமாதியில் மலர் கொத்தை வைத்து வணங்கிவிட்டு தன்னுடைய காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவர் கண்ட காட்சி அவரை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அங்கு ஒருவன் ஒரு சமாதியின் முன்னே மண்டியிட்டு கதறி அழுதுகொண்டிருந்தான். ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? என்று அவன் கதறியது தருமனின் நெஞ்சத்தை ஏதோ செய்தது.
 
அவனருகே சென்று ஆறுதலாய், 'தம்பி, உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இப்படி துடிப்பதை பார்க்க மிகவும் வருத்தமாய் உள்ளது. இறந்து போனது உனது பையனா? என்று கேட்டார்.
"இல்லை".
பின்பு அண்ணனா?.
"இல்லை".
உன் நண்பனா?
"இல்லை"
.......!?!?!
 
சற்றே கோபமுற்ற தருமன், சற்று வேகமாய் " பின்னே யாருக்காக இப்படி அழுகிறாய்?" என்று கேட்க,
சிறிது நேரம் நிதானித்து பின்பு இப்படி பதிலளித்தான்,
 
"இவன் என் மனைவியின் முதல் கணவன்"
-----------
ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக்குலத்தில் யாரேனும் வேண்டுதலோடு காசு போட்டால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் அங்கு வந்தனர். கணவன் கண்ணை மூடி வேண்டிக்கொண்டு காசு போட்டான். பின்பு மனைவி கண்ணை மூடிக்கொண்டு காசை போட எத்தனிக்க, தவறிப்போய் உள்ளே விழுந்து இறந்துபோனாள். கணவன் மனதுக்குள் "அதற்குள் பலித்துவிட்டதே!".
-----------

Thursday, July 7, 2011

பருவ மழை :

கடலிடம் கடன் வாங்கி
மேகமாய் திரிந்து
மழையாய் பெய்து
பின்பு
கடலுக்கு திரும்பும் பொது
வட்டியாய்
மனித உயிர்கள்!
 
துளி துளியாய்
வானத்து நீர்
விழும்போது
வரமாய் ,
பின்பு
உயிர்களை வாங்கும்போது
சாபமாய்.
 
ஒரே மழை
இரு வேடங்களில்!

ஏன் இலவசங்கள் :

தமிழகத்தில் இப்போது இலவசங்களின் அணிவகுப்பு சற்று மும்முரமாகவே இருக்கிறது. எந்த வகையிலும் மக்கள் தானாக சிந்தித்துவிடக்கூடாது என்பதில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றனர். இலவசங்களை வாரி வாரி இறைப்பதால் 'ஓட்டு வங்கி'யில் ஓட்டு குவிந்துவிட போவதில்லை. அதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஒரு நல்ல உதாரணம். இருந்தாலும் அவர்களும் கொடுக்காமல் விடப்போவதில்லை, இவர்களும் வாங்காமல் விடப்போவதில்லை.
 
'ஒருவனுக்கு மீனை தானமாக கொடுக்காதே, அதற்கு பதில் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு' என்பது உலகவழக்கில் உள்ள தத்துவம். அதுபோல, நம் மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பினை அமைத்து தருவதன் மூலம் அவர்களின் வறுமையை ஒழிக்கலாமே. அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள நல்ல வழியை காட்டலாமே. அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தலாமே. இலவச அரிசி ஏன்? எதற்கு?
 
படிப்பதற்கு நல்ல பள்ளி இல்லை. அப்படியே நல்ல பள்ளியை கண்டெடுத்தாலும், கல்வி கட்டணம் மலை போல் அழுத்துகிறது. நல்ல தரமான கல்வி, நியாமான கல்விகட்டணம், உலக தரத்திற்கு படத்திட்டம் போன்றவற்றினை அமைத்து மக்களின் 'அறிவுக்கண்'ணை திறக்கலாமே. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்கலாமே. இலவச 'மடிக்கணினி' ஏன்? எதற்கு?
 
கிராமங்களில் விவசாயம் இல்லை. இயற்கை வளங்கள் இல்லை. வாழ வழி இல்லை. சுகாதாரம் இல்லை. இப்படி பல 'இல்லை'கள் இருக்கும் போது, இலவசங்கள் எதற்கு?  ஆயிரம் 'ஏன், எதற்கு'கள் இருக்கும் போது கோடி கோடியாய் பண விரயம் எதற்கு? அவற்றை வேறு நல்ல நோக்கில் பயன்படுத்தலாமே.
 
சிந்திப்போமா இனியாவது!

Wednesday, July 6, 2011

மழலை:

ஆ..ஆ..ஆ.ஆ
மம்..மம்...மம்
பிர்ர்...பிர்ர்
க்கும்...க்கும்..
தித்..தித்..தித்
 
எந்த அகராதியில்
தேடினாலும்
கிடைக்கவில்லை
என் பிஞ்சு மகளின்
செல்ல
மழலை மொழிக்கு
அர்த்தம்!