இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, September 27, 2012

பள்ளிக்குழந்தைகளும் பாதுகாப்பும்:

        " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி " என்று ஒரு திரைப்பாடல் உண்டு. இன்றைய நாளிதழ்களில் கண்ணில் அடிபடும் முக்கியமான செய்தி 'குழந்தைகளுக்கு' ஏற்படும் விபத்துதான். நாளை சரித்திரம் படைக்கும் என்று எண்ணிய குழந்தை விபத்தில் மாள்வது பெருந்துயரம். எப்பொழுதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு இப்பொழுதான் வெளிச்சத்திற்கு வருகிறதா? அல்லது இப்பொழுது விபத்துகள் அதிகமாகிவிட்டதா? என்ற விவாதத்தை விடுத்து கொஞ்சம் சிந்திப்போம்.
 
         குழந்தைகளுக்கு இப்பொழுது பாதுகாப்பே இல்லையோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்துகள். பள்ளியின் உள்ளே பாதுகாப்பது பள்ளியின் கடமை. அதுபோல், பள்ளியை விட்டு வெளியே வரும் குழந்தை வீடு சேரும்வரை பாதுகாக்கவேண்டியதும் பள்ளிதான். பள்ளியின் வளாகத்தை தாண்டிவிட்டால் எங்களின் பொறுப்பல்ல என்று கூறும் நிர்வாகம் நிச்சயம் தம் கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எங்கோ ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நடந்த போட்டியில் வெற்றிப்பேற்ற மாணவன் 'எங்கள் பள்ளியில்' தான் படிக்கிறான் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் தேடும் பள்ளி நிர்வாகம் நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கவேண்டும். எங்கள் பள்ளி பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 
            பள்ளி வாகனம் வந்தது. குழந்தையை அனுப்பிவிட்டேன். என் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோரே! கொஞ்சம் சிந்தியுங்கள். வண்டியின் தரம், ஓட்டுனரின் நிலைமை, வண்டியில் அவசர உதவிக்கு ஆள், அவசர அழைப்பு எண்கள் இவை அனைத்தையும் சரிபார்க்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா. 100 ரூபாய் புடவையை 1000 முறை பிரித்து பார்க்கும் பெண்கள் ஏனோ இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. ஒரு ரூபாய் செலவு செய்வதற்கு ஓராயிரம் முறை யோசிக்கும் பெற்றோர்கள் கூட தான் கட்டும் கட்டணத்திற்கு இந்த பள்ளி உகந்தது தானா? பாதுகாப்பு எப்படி? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அதேபோல் வெறுமனே சமூகத்தில் ஒரு 'STATUS' க்காக ஒரு பள்ளியில் சேர்ப்பதும் கூடாது.
 
           சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் தான் காரணமென்றாலும், நமது கையாலாகாதத்தனமும் ஒரு காரணம். சாலையில் பாதுகாப்பாக வர வேண்டும் என்று நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதே இல்லை. சொன்னால் மட்டும் கேட்டு விடப்போகிறானா? என்கிற அலட்சியம். 'எறும்பூற கல்லும் தேயும்' இது பழமொழி. சாலை பாதுகாப்பு விதிகளை குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது பள்ளி மற்றும் பெற்றோரின் கடமை. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மட்டுமே இத்தகைய சாலை விபத்துகளை தடுக்க ஒரே வழி. அதே போல் பெற்றோர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வே குழந்தைகளை பாதுகாக்கும்.
 
          வெறும் முதல் மதிப்பெண் மட்டும் போதும். மற்றதெல்லாம் எனக்கும் தேவையில்லை என்றிருக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும் ச்சயம் நான் சொல்வது ஏதோ புரியாத புதிர் போலதான் தெரியும்.