இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, September 27, 2012

சிந்திக்க ஒரு நொடி:

        வழக்கமான எனது பயணத்தின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டொரு நாட்களுக்கு முன்பு மழை பெய்யும் நேரத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டி வந்தது. மழையென்றால் வெறும் தூறல் அல்ல. பேரிடி மின்னலுடன் கூடிய பெருமழை. நான் பயணம் செய்த பெட்டியில் சில மாணவர்களும், மாணவ பருவ காதலர்கள் சிலரும், பொதுமக்கள் பலரும் இருந்தனர். அந்த மழையில் ஏற்படும் குளிரில் உடலில் சில மாற்றங்கள் வரும் என்பது இயற்கை தான். வயதானவர்களுக்கு நடுக்கமும், இளம் வயதினருக்கு ஒரு வித கிறக்கமும், குழந்தைகளுக்கு குதூகலமும் நிச்சயம் ஏற்பட வேண்டும். அதுதான் மழையின் சக்தி. சிறியவர் முதல் பெரியவர் வரை மழையில் நனைய உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அது நிறைவேறுவது சிலருக்குதான். ஜலதோஷம், ஜுரம் என்று பயந்துகொண்டு நானும் சற்று தள்ளியிருந்தேன்.
          நான் தள்ளித்தள்ளி சென்றாலும் மழை என்னை விடுவதாயில்லை. நான் நகர்ந்து அமர்வதும் அது என்னை நனைப்பதும் என்று ஒரு விளையாட்டு போலவே வெகு நேரம் சென்றது. சட்டென்று ஏதோ தோன்ற, வாயிலை நோக்கி பார்வையை திருப்பினேன். அப்பொழுதுதான் தெரிந்தது. அங்கே மாணவர்கள் சிலர் நின்று கொண்டு கதவை திறப்பதும், நனைவதும் பின்பு அடைப்பது போல் அடைத்து விளையாடுவதும் தான் நான் நனைய காரணம் என்று. அவர்களின் சேட்டை அருகிலிருக்கும் அனைவரையும் எரிச்சலூட்டும் வகையிலேயே இருந்தது. ஆனாலும் அவர்களை அதட்ட அங்கு யாருமில்லாதது கண்டு (என்னையும் சேர்த்துதான்) நிச்சயம் ஒரு கணம் திகைத்துதான் போனேன். காரணம் ஆக்கசக்தியாக உருவாக வேண்டிய மாணவ சக்தி இப்பொழுதெல்லாம் அழிவுசக்தியாகிப்போவது தான் காரணம் என்று என்னுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் புலம்பல் என்னுள் ஏதோ செய்தது.
 
          இங்கிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவன் தனது கைசெலவிற்கு பகுதிநேர பணிசெய்கிறான். அங்கிருக்கும் சட்டங்களை மதிக்கிறான். ஒழுக்கத்தை கடைபிடிக்கிறான். ஆனால், உள்நாட்டில் படிக்கும் மாணவனுக்கு இவை பொருந்தாமல் போவது வியப்பளிக்கிறது. பெற்றோர் பணத்தில் ஆட்டம் போடும் இவர்களைப்போன்ற இரண்டாம்தர மாணவர்களால், மாணவ சமூகதிற்கே இழுக்கு. மாணவ சமுதாயம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறை இந்தியாவிலேயே இல்லையா? தனக்கு பிரச்சினை என்றால் பேருந்தின் கண்ணாடி உடைக்கும் மாணவன், சக மாணவனுக்கு பிரச்சினை என்றால் ஒன்று கூடி போராடும் மாணவர்கள் ஒரு சுயநல கூட்டமாகதான் எனக்கு தெரிகிறது. இன, மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்கும் ஒரு சமூகம் 'மாணவர்கள்' தான். அவர்கள் படிக்கும் வயதில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அதற்கு மற்றவர்களின் உணர்வுகளை பலி கொள்வது எந்தவித்தில் நியாயம் என்றுதான் புரியவில்லை.
 
          சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்று நாடே கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இதில் 'பேருந்து நாள்' கொண்டாட்டம் தான் ரொம்ப முக்கியம். ஊழலும், வன்முறைகளும் மலிந்து கிடக்கும் மண்ணில் உங்களின் கேலிக்கூத்து நிச்சயம் ஒருநாள் அனைவரையும் பார்த்து கேலியாய் சிரிக்கத்தான் போகிறது. மாணவர்களே! அரட்டையும் வேண்டும், கேலி கிண்டலும் வேண்டும். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதோடு கொஞ்சம் பொறுப்பும் வேண்டும். நாடு உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்களோ 08:40 க்கு வரும் 'ஃபிகர்' க்காக காத்துக்கிடக்கிறீர்கள். காதல் வேண்டும். தப்பில்லை. அது பொது இடத்தில் வேண்டாம். சிந்தியுங்கள்.
 
        (பொது இடத்தில் அட்டூழியம் செய்யும் மாக்களை, மக்கள் நிச்சயம் தட்டிக்கேட்க வேண்டும்)