இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, September 30, 2011

மங்காத்தா - திரை விமர்சனம்:

            வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்த கிரிக்கெட் திரைப்படம். 'தல' அஜீத், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் இணைந்து மிரட்டி இருக்கிறார்கள். கதைக்களம் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் அதனை சார்ந்தவர்கள். கொள்ளைக்காரனிடம் கொள்ளை அடிக்கும் கதாநாயகன் கதை. கதைதான் நாயகன் என்றாலும் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் செண்டிமெண்டுக்காக த்ரிஷா, ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி, கவர்ச்சிக்காக லஷ்மி ராய் மற்றும் பிரபலமான வாரிசு நடிகர்கள். சலிப்பில்லாத திரைக்கதையாலும் யுவனின் இசையினாலும் படம் 'போர்' இல்லாமல் நகர்கிறது.
 
           பிரேம்ஜி அறிமுகமாகும் காட்சியில் இருந்து குண்டடி படும் கட்சி வரை நூடுல்ஸ் தலையனாக வந்து காமெடி செய்கிறார். அஜித்தும், அர்ஜுனும் ஒன்றாக போலீஸ் ட்ரைனிங் எடுத்தவர்கள் என்று கிளைமாக்ஸில் 'போட்டோ' வுடன் காட்டிவிட்டு, ஆண்ட்ரியாவுக்கு அஜித்தை தெரியாதது போல் காட்டியது, 40 வயது இளைஜனை கண்டதும் காதலிக்கும் த்ரிஷா, மனவளர்ச்சி குன்றியவராக போக்குவரத்து துறை கட்டுப்பட்டு அறையில் பிரேம்ஜி செய்யும் தில்லு முள்ளு, அந்த நால்வரும் செய்யும் அனைத்து திட்டங்களையும் அவர்களுக்கு தெரியாமலே 'ஃபாலோ' செய்வதாய் அவர்கள் பின்னாலேயே அலையும் அஜீத் என்று திரைக்கதையில் ஆங்காங்கே சிறு மற்றும் பெரிய லாஜிக் ஓட்டைகள். மற்றபடி 'மங்காத்தா' ஒரு சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம்.
 
           பைக் சாகசம், கார் சேசிங் என்று அஜீத் அசத்தி இருக்கிறார். கிளிமாக்ஸ் சண்டை ஆக்ஷன் பிரியர்களுக்கு தீனி போடுகிறது. லக்ஷ்மி ராய் வரும் பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் வில்லத்தனமாக பணத்தை அடிக்க திட்டம் தீட்டுவதை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. கதைக்கு ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி போன்ற நடிகைகளின் தேவை என்ன என்று சத்தியமாக விளங்கவில்லை. வெங்கட் பிரபு தான் விளக்கவேண்டும். அந்த பாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் திரைக்கதையில் இல்லை. புதுமுகங்களை கூட போட்டிருக்கலாம்.
 
           மங்காத்தா – வெங்கட்பிரபுவின் சிக்சர்.
 
 

Monday, September 26, 2011

கவித்தூறல்:

சூரியன்:
 
நாள் முழுதும்
சுட்டெரித்தாலும்
ரசிக்க மறப்பதில்லை
மேகத்திற்கு பின்புறம்
கண்ணாமூச்சி விளையாடும்
மாலை நேர
சூரியனை!
 
வானம்:
 
மழையில் குளித்து
வானவில் உடையணிந்து
வெட்க சிரிப்புடன்
வானம்!

Thursday, September 22, 2011

கடவுளும் நானும் – IV (பக்தி வியாபாரம்):

         இப்பொருள் விற்பனைக்கு அல்ல என்று சில நுகர்பொருட்களில் பார்த்திருக்கலாம். அவை அரசால் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டவை. அவ்வாறு இறைவன் மக்களுக்கு இலவசமாய் வாரி இறைப்பது 'அருள்' தான். அதற்கு மனிதன் செய்யும் கைமாறு தூய பக்தி. ஏதோ சங்ககால கடவுள்கள்தான் 'இலவச' அருள் வழங்கினார்கள், இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறுமளவிற்கு 'பக்தி' வெறும் வியாபாரமாகி போய்விட்டது.
 
         ஸ்வாமி தரிசனம் ரூ.500, சிறப்பு பூஜை ரூ.350, தட்சணை ரூ.51, பூ மற்றும் பழம் கொடுத்தால் கடவுளின் பூரண நல்லாசி உங்களுக்குத்தான். கோவிலுக்கு வெளியே நம்ம யானையார் ரூ.1 வாங்கி கொண்டு ஆசீர்வதிப்பார். விலங்கு என்பதால் 'ரேட்' குறைவு. மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.
 
        பரிகாரம் செய்தால் செய்த பாவம் போய்விடும். இது லேட்டெஸ்ட். கொலை செய்துவிட்டு அரசுக்கு ஏதேனும் 'பரிகாரம்' செய்துவிடலாமே. எதற்காக காவல் துறை, நீதிமன்றம், சட்டம், தண்டனை. ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இறைவனுக்கு பரிகாரம் செய்வதால் வாழ்வை இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்குமா? 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' பழமொழியை உருவாக்கியவர்களே நாம் தானே. எங்கே திருந்தபோகிறோம்.
 
         ஆடு, மாடு, கோழி என்று கடவுளுக்கு பலி கொடுத்து, ஒரு உயிரை வதைத்து இறைவனை குஷிப்படுத்தும் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்ல!

Tuesday, September 20, 2011

கடவுளும் நானும் – III (பெயர்கள் பலவிதம்):

              இஸ்லாமியர் வணங்கும் கடவுளுக்கு ஒரே பெயர் 'அல்லா'. கிறித்துவர்கள் வணங்கும் கடவுளுக்கும் ஒரே பெயர் 'ஏசு'. இந்துக்கள் வணங்கும் கடவுளுக்கு மட்டும் ஏன் ஆயிரமாயிரம் திருநாமங்கள். தெருவுக்கு தெரு கோயில். ஒவ்வொரு கோயிலிலும் கடவுளுக்கு வேறு வேறு பெயர். கடவுளுக்கு பெயர் சூட்டு விழா நடத்த நாம் யார். நடத்துபவன் அவனே என்று சப்பை கட்டுபவர்கள் விளக்கம் கூறட்டும். இந்தியாவில் மொழி, இனம், ஜாதி, மதம் என்று அனைத்திலும் வேறுபட்டு, ஊழலில் ஒற்றுமையாய் வாழ்ந்துகாட்டி 'வேற்றுமையில் ஒற்றுமை' கண்டோம். கடவுளுக்கும் அதே நிலையை கொடுத்துள்ளோம். வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் வேறு வேறு கதைகள் கூறினாலும் 'உண்மை' என்பது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அந்த 'உண்மை' என்ன?
 
            இறைவனின் ஆதி என்ன?
 
            Linux என்ற ஒரு கணினி OS உண்டு. அதனை யார் வேண்டுமானாலும் தனது இஷ்டத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதனை பிறருக்கும் கொடுக்கலாம். எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அது போல் யார் வேண்டுமானாலும் கடவுளின் உருவத்தை மாற்றியமைத்து இது என் கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம். கட்டுப்பாடு இல்லை. நமது விநாயகர் படும் பாடு இருக்கிறதே... வாயில்லாபிள்ளை. கம்ப்யூட்டர் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், அந்த விநாயகர், இந்த விநாயகர் என்று கடவுளை விளையாட்டு பொம்மை போல் பாவிக்கும் கொடுமை கலியுகத்தில் நடக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் கடவுளுக்கு இவை 'தெய்வக்குற்றம்' ஆகாது.
 
           ஏன் மற்ற மதங்களில் உள்ளது போன்று இந்துக்கடவுளை ஒரே 'பெயரில்' வணங்கக்கூடாது? கூட்டு பிரார்த்தனை ஒரே திசை நோக்கி, ஒரே நிலையில், ஒரே ஒரு கடவுளிடம் செய்தால் தான் பலன். இல்லையேல் ஆழ உழாமல் அகல உழுத கதைதான்.

Friday, September 16, 2011

கடவுளும் நானும் – II (கருவறை):

             கோவில்களில் கடவுளை இருளில் வைத்திருப்பதேன்? கோவில் முழுவதும் இருளில், காற்றோட்டமில்லாமல் இருப்பதேன்? சுற்றுப்புறம் சுகாதாரமில்லாமல் அசுத்தமாக இருப்பதேன்? கோயிலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. அதனால் இருள் எங்கும் பரவி இருந்தது. இப்போது? கருவறை இருளில் கடவுளை வைத்து 'ஒளிகொடுப்பவன்' இவனே என்ற பொய்யுரை கடவுளை கோபமூட்டுவதில்லை. அண்டவெளி இருள். அதனால் தான் கடவுள் கருவறையும் இருள் என்று விளக்கம் கூறுபவர்கள் உண்டு. ஆனால் கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              இறைவனை பூஜிக்க ஒரு மொழி. அந்த மொழி தெரிந்த, ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த 'மொழி'யில் இறைவனை பூஜிக்கலாம். மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் (புரிந்தாலும் புரியாவிட்டாலும்). பின்பு அவர் கொடுக்கும் 'எதையும்' பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரது தட்டில் தட்சணை என்ற பெயரில் பணம் போட்டாகவேண்டும். பிறகு உண்டியல் எதற்கு? கோவில் வாசலிலும் பிச்சைக்காரர்கள், உள்ளேயும். இவ்விதிகள் எதற்காக ஏற்படுத்தபட்டன? யாரால் விதிக்கப்பட்டன?
 
               கருவறை கடவுளை தரிசிக்க 0.5 நொடிகள் மட்டுமே. அதற்கு 8 மணிநேரம் நீண்ட வரிசை. அப்படியே வரிசையில் சென்றாலும் கருவறை அருகில் நின்று கொண்டு 'சீக்கிரம் வா, வேடிக்கை பார்க்காதே' என்று கடவுளை வேடிக்கை பொருளாக்கி கூச்சலிடுகின்றனர். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              திரையரங்கத்தில் நமது விருப்ப கதாநாயகனின் நடிப்பை பார்ப்பதற்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முற்றம் என்று பணத்தை வாரி இறைக்கிறோம். அதே போல் இன்று கோவில்களில் தரிசனத்திற்கு ரூ.1000, ரூ.500, ரூ.250, ரூ.100 மற்றும் இலவச தரிசனம் என்று கடவுளை நாடக கோமாளியாக்கி இருக்கிறார்கள். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
               உலகில் சக்தி வாய்ந்தது பணபலமே! என்று பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லாத குறைதான், கடவுள் மட்டும் மௌனமாய்.

கடவுளும் நானும் – I (மனித சாயம்):

            கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் பழைய திரைவசனங்களாக மாறிப்போய் இன்று கடவுள் 'எந்த வடிவில்' இருக்கிறார் என்ற ஐயம் தலைதூக்கி நிற்கிறது. மனித வடிவில் வடிக்கப்பட்ட கடவுளின் உருவம் 'மனிதனின்' இயல்புகளுடன் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் நம் முன்னோர். பலவகையான குழப்பங்களையும், குளறுபடிகளையும் விதைத்து சென்றுள்ளனர். எந்த ஒரு செயலுக்கும் சரியான விளக்கமில்லை. விளக்கிச்சொல்ல ஆளும் இல்லை. மீறி வினா எழுப்பினால் 'தெய்வக்குற்றம்'. தினம் நாம் வணங்கும் கடவுளை அறிய ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.
 
           நான் எந்த கோட்பாடுகளுக்கும் எதிர் கேள்வி கேட்கவில்லை. விளக்கம் தான் கேட்கிறேன், ஏன் கோபிக்கிறார்கள் என்று பக்தன் ஒருவன் புலம்பிச்செல்வதை பார்த்தேன். ஏன் இந்த நிலை. அனைத்து மதங்களிலும் எல்லாம் விரிவாக, எளிதாக, சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கோட்பாடுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும் போது, பழமை வாய்ந்த இந்து மதத்தில் ஏன் இந்த 'இருள்'. குடும்பத்துடன் அருள்பாலிக்கும் இறைவனை அடைய 'துறவு' தான் வழி என்ற பாரபட்சம் ஏன்? சகோதரன், மாமன் , மச்சான் உறவு கொண்ட கடவுள்களை வணங்குபவர்கள் வேறு வேறு ஜாதியாய், உயர்வு தாழ்வு பாராட்டி வாழ்வதேன்?
 
மனிதர்களின் சாயம் கடவுளுக்கு பூசப்பட்டது ஏன்?

Wednesday, September 14, 2011

ரயில் பயணங்களில்:

தினமும் ரயில் பயணத்தின் போது என்னை பாதித்த சில நிகழ்வுகள்,
 
1. சுமார் 48 முதல் 54 வயதிருக்கும் இளைஞர்களின் அரட்டை (கொட்டம்): அதே பெட்டி, அதே இருக்கைகள். தினமும் அவர்களை அங்கு பார்க்கலாம். எல்லாம் ஒரு வயதினர் என்பதால் வாடா... போடா... என்று வசனங்கள் இருக்கும். பரவாயில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் பேச்சு வேறு திசையில் பயணிக்கும். ஒருவர் மற்றவரை விளையாட்டாக 'ஓட்டுவதாக' நினைத்துக்கொண்டு சில அந்தரங்க விஷயங்களை கிளறுவார். அவரும் சளைத்தவர் அல்ல. கேட்ட கேள்விக்கு கொஞ்சம் அதிகமாகவே பதில் சொல்வார். அப்படியே இறங்கும் இடம் வரை அவர்களின் கொட்டம் தாளமுடியாது. "அருகில் பள்ளி குழந்தைகள், கல்லூரிப் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் பலர் இருப்பதையும் மறந்து அப்படி என்ன அரட்டை அதுவும் பொது இடத்தில்" என்று கேட்க பலர் நினைத்தாலும் அவர்களின் நாக்கு வாய்க்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறது. அரட்டை தேவைதான். அதுவே மற்றவர் மனது புண்படும்படி, அதுவும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக வேண்டிய வயதில் தேவையா?
 
2. அதே பெட்டியில் சற்றுத்தள்ளி ஒரு பெண்மணி குழந்தைகளுடன்: பள்ளிக்கு செல்லும் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் (4 மற்றும் 3 வகுப்பு பயில்பவர்கள்) அவசரமாக ஏறும் பெண் பலமுறை தடுக்கி அடுத்தவர் மீது முட்டி, மோதி ஏறுவதை தினமும் பார்க்கலாம். தினமும் அந்த குழந்தைகளுக்கு 'சிற்றுண்டி' அங்குதான். குழந்தைகள் சாப்பிடும் போதே தலைசீவி, பவுடர் பூசி தயார் செய்வார்.(ஏறும் பொது தூங்கு மூஞ்சியாகவே இருக்கும்) அவரின் பேச்சின் மூலம் அவர் பணிக்கு செல்லும் பெண் அல்ல என்பது தெரிந்தது. இத்தனைக்கும் காலை 8 மணிக்கு நடக்கும் விழயம் இது. ரயில் பயணமோ வெறும் 20 நிமிடங்கள். மிஞ்சிப்போனால் ஒரு குழந்தையை தயார் செய்ய அரை மணிநேரம், சமைக்க ஒரு மணிநேரம் என்று எடுத்துக்கொண்டாலும் காலை 6 மணிக்கு எழுந்தால் கூட போதுமே. சீரியல் பைத்தியங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலை என்னவாகும்? இந்த சிறுவயதிலேயே நேரத்தின் அருமை தெரியாமல் வளர்க்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?
 
3. படியில் தொங்கும் ஆண், பெண்: உள்ளே இடமிருந்தாலும் இறங்கும் வழியில் தொங்கும் 'இளைஞர்'கள், நம் பாதையை மறிப்பதோடு காற்றையும் உள்ளே வரவிடாமல் தடுக்கின்றனர். சில நேரம் 'பெண்கள்' பெட்டியிலும் இதே நிலைமை. ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்று இப்படித்தான் நிரூபிக்க வேண்டுமா? இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பெண்கள் பெட்டி தானே என்று தலைசீவுவது, புடவையை சரி செய்வது என்று சகட்டு மேனிக்கு நடக்கின்றனர், வண்டி பிளாட்பார்ம்-இல் வந்து நின்றுவிட்டது கூட தெரியாமல்!
 
மற்றும், தேவையற்ற அரட்டை, நேர மேலாண்மை இல்லாமை, இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடத்தல், செல்போனில் 'லவுட்ஸ்பீக்கர்' இல் மட்டுமே பாட்டு கேட்பது, அருகில் இருப்பவரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் போதை பாக்கு மென்று ஜன்னல் வழியே துப்புவது, பெட்டி கொஞ்சம் காலியாக இருந்தால் கொஞ்சம் 'சில்மிஷ'த்தில் ஈடுபடுவது என்று நமது சக மனிதர்களின் 'சேட்டைகள்' இன்னும் எத்தனையோ.
 
நாகரீக வளர்ச்சி அடைந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்து பாருங்கள். இறங்கும் போது நிச்சயம் என் புலம்பல்கள் புரியும்.

Tuesday, September 13, 2011

அறியாத மொழி அழகு :

அறியாமை:
 
வண்டொன்று பூ தேடி
ஊரெல்லாம் அலைகிறது!
பூக்கள் எல்லாம்
என்னவளைத்தேடி சென்றது
தெரியாமல்!
 
மொழி:
 
திகட்டுகிறது
தேனிசை
அவள் கண்களின்
குயிலிசை
கேட்ட பிறகு!
 
அழகு:
 
குயிலின் நிறம் போல
கூந்தல் கருமை
 
தாமரை மலர் போல
மலர்ந்த முகம்
 
மலரின் தேனைப் போல
உதிரும் புன்னகை
 
ஆனால்!
இதயம் மட்டும்
தங்கத்தை போல
ஏழை என்னால்
அடைய முடியாத
உயரத்தில்!

Friday, September 9, 2011

வீட்டு மருத்துவம்:

அமிலத்தன்மை நீங்க:
 
1. 8-10 அரிசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்
2. காலை சிற்றுண்டிக்கு முன்பு அல்லது எதுவும்  சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் விழுங்கவும்
3. இவ்வாறு 21 நாட்கள் செய்துவர அமிலத்தன்மை நீங்கும்.
 
ரத்த கொழுப்பு குறைய:
 
1. கொட்டை பாக்கை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. சாப்பிட்ட பின்பு 30-45 நிமிடங்களுக்கு நன்றாக வாயில் போட்டு மென்று பிறகு துப்பிவிடவும்.
3. பாக்கானது உமிழ்நீரில் கலந்து ரத்தத்தை இளகுவாக்கி எளிதில் ஓட வைக்கிறது.
 
உயர் ரத்த அழுத்தம் குறைய:
 
1. சிறிதளவு வெந்தயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
2. காலை சிற்றுண்டிக்கு முன்பு அல்லது எதுவும் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் விழுங்கவும்
3. இவ்வாறு 30 நாட்கள் செய்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும்.
 
ரத்த சர்க்கரை கட்டுப்பட:
 
1. வெண்டைக்காயை இரண்டு துண்டுகளாக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும்.
2. காலை சிற்றுண்டிக்கு முன்பு வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்துவர ரத்த சர்க்கரை கட்டுப்படும்.
 
குறிப்பு: இந்த மருத்துவக்குறிப்புகள் புத்தகங்களில் படித்தவை. என் சுய அனுபவம் அல்ல.

Thursday, September 8, 2011

முகம் :

முப்பது வருடம் கழித்து ஒரு இனிய சந்திப்பு, கல்லூரி தோழர்கள் சங்கமிக்கும் சிறு திருவிழா, வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் ஒரு பயணம், ஏதோ கனவுகளோடு கூட்டத்தில் என் கண்கள் யாரையோ தேட, எங்கு நோக்கினும் வயதானவர்கள் கூட்டம், அதோ அங்கே நிற்பது அவன்... இல்லை அவர்...அவர் ஜாடையில் ஒரு யுவன். என் நினைவுகள் பின்னோக்கி செல்ல, அப்படியே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
 
பாடம் படித்ததை விட உன் காதல் கடிதங்கள் படித்ததுதான் அதிகம். கல்லூரி வகுப்புகளில் நேரம் போக்கியதைவிட உன்னுடன் பூங்காவில் பொழுதை போக்கியது தான் அதிகம். படித்தோம் வாழ்க்கையை. மறந்தோம் உலகத்தை. வருடங்கள் உருண்டோடி, இருவரும் மணம் முடித்தோம் வேறு வேறு மணமேடையில். நான் அமெரிக்காவிற்கும் நீ மதுரைக்கும் பறந்தோம்.நான் கலாச்சாரம் தவறாமல் கணவர் பணி செய்து, பிள்ளையிரண்டு பெற்று கடமை ஆற்றியாகிவிட்டது. இடையில் இந்தியா வரவே முடியாத சூழ்நிலை நம் இருவரையும் நிரந்தரமாக பிரித்தது. தொலைதொடர்பு வளர்ந்துவிட்ட இந்நாளில் இருபது வருட பிரிவு பெரிதில்லைதான்! வெறும் டைரி மட்டும் உன் நினைவுடன், முகவரிகள் பல மாறிய பின்பு தொலைந்தது நம் கடித தொடர்பு. நம்மை தொலைத்துவிட்டோம் வாழ்க்கை எனும் சக்கரத்தில்!
 
"ஆன்டி" என்ற அழைப்பு எனை உலுக்க, சுயநினைவுத் திரும்பினேன். "அப்பா இதை உங்களிடம் சேர்க்க சொன்னார்" என்றவன் ஏதோ ஒரு புத்தகத்தை என் கையில் திணித்தான். அது நீ எழுதிய 'சுய சரிதை'. நீ மதுரை கல்லூரி பேராசிரியர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தின் நிறுவனர் என்பதை அறிய முடிந்தது. மற்றபடி கல்லூரி காலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட உண்மையில்லை. உன் மகனிடம் கேட்டேன்" அப்பா எப்படி இருக்கிறார்". அவனின் கைகள் மேல் நோக்கி காட்டின உன் இருப்பிடத்தை.
 
கனத்த மனதோடு அமெரிக்கா திரும்பினேன் உன் 'சுய சரிதையோடு'. சொல்லி இருக்கலாம் உன் மகனிடம் உன் நடத்தையை பற்றி. வெறும் பொழுது போக்கான உன் காதலை பற்றி. மனம் வரவில்லை, உன் பழைய முகத்தை அப்படியே உன் மகனிடம் பார்த்த பின்பு.