இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, September 14, 2011

ரயில் பயணங்களில்:

தினமும் ரயில் பயணத்தின் போது என்னை பாதித்த சில நிகழ்வுகள்,
 
1. சுமார் 48 முதல் 54 வயதிருக்கும் இளைஞர்களின் அரட்டை (கொட்டம்): அதே பெட்டி, அதே இருக்கைகள். தினமும் அவர்களை அங்கு பார்க்கலாம். எல்லாம் ஒரு வயதினர் என்பதால் வாடா... போடா... என்று வசனங்கள் இருக்கும். பரவாயில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் பேச்சு வேறு திசையில் பயணிக்கும். ஒருவர் மற்றவரை விளையாட்டாக 'ஓட்டுவதாக' நினைத்துக்கொண்டு சில அந்தரங்க விஷயங்களை கிளறுவார். அவரும் சளைத்தவர் அல்ல. கேட்ட கேள்விக்கு கொஞ்சம் அதிகமாகவே பதில் சொல்வார். அப்படியே இறங்கும் இடம் வரை அவர்களின் கொட்டம் தாளமுடியாது. "அருகில் பள்ளி குழந்தைகள், கல்லூரிப் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் பலர் இருப்பதையும் மறந்து அப்படி என்ன அரட்டை அதுவும் பொது இடத்தில்" என்று கேட்க பலர் நினைத்தாலும் அவர்களின் நாக்கு வாய்க்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறது. அரட்டை தேவைதான். அதுவே மற்றவர் மனது புண்படும்படி, அதுவும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக வேண்டிய வயதில் தேவையா?
 
2. அதே பெட்டியில் சற்றுத்தள்ளி ஒரு பெண்மணி குழந்தைகளுடன்: பள்ளிக்கு செல்லும் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் (4 மற்றும் 3 வகுப்பு பயில்பவர்கள்) அவசரமாக ஏறும் பெண் பலமுறை தடுக்கி அடுத்தவர் மீது முட்டி, மோதி ஏறுவதை தினமும் பார்க்கலாம். தினமும் அந்த குழந்தைகளுக்கு 'சிற்றுண்டி' அங்குதான். குழந்தைகள் சாப்பிடும் போதே தலைசீவி, பவுடர் பூசி தயார் செய்வார்.(ஏறும் பொது தூங்கு மூஞ்சியாகவே இருக்கும்) அவரின் பேச்சின் மூலம் அவர் பணிக்கு செல்லும் பெண் அல்ல என்பது தெரிந்தது. இத்தனைக்கும் காலை 8 மணிக்கு நடக்கும் விழயம் இது. ரயில் பயணமோ வெறும் 20 நிமிடங்கள். மிஞ்சிப்போனால் ஒரு குழந்தையை தயார் செய்ய அரை மணிநேரம், சமைக்க ஒரு மணிநேரம் என்று எடுத்துக்கொண்டாலும் காலை 6 மணிக்கு எழுந்தால் கூட போதுமே. சீரியல் பைத்தியங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலை என்னவாகும்? இந்த சிறுவயதிலேயே நேரத்தின் அருமை தெரியாமல் வளர்க்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?
 
3. படியில் தொங்கும் ஆண், பெண்: உள்ளே இடமிருந்தாலும் இறங்கும் வழியில் தொங்கும் 'இளைஞர்'கள், நம் பாதையை மறிப்பதோடு காற்றையும் உள்ளே வரவிடாமல் தடுக்கின்றனர். சில நேரம் 'பெண்கள்' பெட்டியிலும் இதே நிலைமை. ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்று இப்படித்தான் நிரூபிக்க வேண்டுமா? இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பெண்கள் பெட்டி தானே என்று தலைசீவுவது, புடவையை சரி செய்வது என்று சகட்டு மேனிக்கு நடக்கின்றனர், வண்டி பிளாட்பார்ம்-இல் வந்து நின்றுவிட்டது கூட தெரியாமல்!
 
மற்றும், தேவையற்ற அரட்டை, நேர மேலாண்மை இல்லாமை, இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடத்தல், செல்போனில் 'லவுட்ஸ்பீக்கர்' இல் மட்டுமே பாட்டு கேட்பது, அருகில் இருப்பவரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் போதை பாக்கு மென்று ஜன்னல் வழியே துப்புவது, பெட்டி கொஞ்சம் காலியாக இருந்தால் கொஞ்சம் 'சில்மிஷ'த்தில் ஈடுபடுவது என்று நமது சக மனிதர்களின் 'சேட்டைகள்' இன்னும் எத்தனையோ.
 
நாகரீக வளர்ச்சி அடைந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்து பாருங்கள். இறங்கும் போது நிச்சயம் என் புலம்பல்கள் புரியும்.