இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, October 24, 2011

பருவ மழை

சோவென்று பெய்யும்
புது மழையில் துள்ளித்
தாளம் போட மனமில்லை
குளிரில் நடுங்கிய
புன்னை மரத்து
குருவி குஞ்சை
பார்த்தபின்பு!
 
 

கலப்பு திருமணம்

கறவை மாடு அதிகம் கரக்க,
வயலில் மகசூல் பெருக
கனிவகை விரைவில் காய்க்க என்று
விவசாயத்தில் வேண்டும் 'கலப்பு'
 
காவலுக்கு வீரம் சேர்க்க
உடலில் கம்பீரம் மிளிர
பெண்ணுக்கு பரிசாய் கொடுக்க என்று
நாயிலும் வேண்டும் 'கலப்பு'
 
சூடு அதிகம் தாங்க
சக்தி அதிகம் பெருக
தாங்குதிறன் மிகுதியாய் என்று
உலோகத்தில் வேண்டும் 'கலப்பு'
 
பணத்திற்காக
கலப்பினை ஏற்பவன்
மணமென்று வந்தால்
கசப்பினை உமிழ்வதேன்?
 
கலப்பின் பலனை
மனதனிலும் புகுத்திட்டால்
சக்தி பெருகுமென்றும்
பலன் ஆயிரமென்றும்
புரிந்துகொள் 'சாதி வெறியனே'!

Thursday, October 20, 2011

மாணவ சக்தி

பகல் வரும் சூரியனின் ஒளி
உயிர் கொடுக்கும் ஆக்க சக்தி
புவி உயிர்க்கு!
அதையே
குவித்தால் கொன்று குவிக்கும்
அழிவு சக்தி
அது அழிக்கும் சக்தி!
 
மாணவர் என்றோர் ஆக்க சக்தி
குவிகிறது அழிப்பதற்கு மட்டும்.
ஆக்கத்தை போதிக்க ஆளில்லை!
போதிக்கத் துணிந்தோர்
அச்சக்தி முன் நிலைப்பாரில்லை.
 
கல்விபயில கூடம் செல்வோர் கூட்டு
இப்போ போதைக்கு மட்டும்.
படிப்பயண உற்சாகம்
பெண்களிடம் கலாட்டா என்று
இன்றைய மாணவ பருவம் தயாரானது
நாளைய மாணவருக்கு அறிவுரை கூற!
 
ஆக்கசக்தியை ஒன்றாக்கி நாட்டுக்கு
உயிர் கொடுக்க ஆளில்லை!
மாணவர் தனது சக்தி உணர
நமது கல்வி தரமில்லை!
 

Monday, October 17, 2011

மனதில் தோன்றியது

ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என் மூளைக்குள் ஏதோ திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருப்பது போன்றோரு பிரமை. சிறிது ஓரமாய் நின்று அமைதியாக யோசிக்க, வார்த்தைகள் தெளிவாக புரிய ஆரம்பித்தன.
 
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
 
எனக்கொன்றும் விளங்கவில்லை. பழையபடி நடக்க ஆரம்பித்தேன். இன்றும் எனக்குள் ஒரு ஐயம், அன்று நடந்தது என்ன? வினாவுக்கு விடைதான் கிடைக்கவில்லை. தேடல் தொடர்கிறது. அன்றிரவு நல்ல இடியுடன் கூடிய மழை. மின்னல் வெளிச்சம் என்னுள் பாய்ந்த உணர்வு. இறந்து விட்டேனா? இல்லை. உணர்விருக்கிறது. பின்பு நடந்தது என்ன? உங்களுக்கு புரிகிறதா?
 
அன்று தான் நான் என்னை உணர்ந்தேன். 'நான்' என்பதை துறந்தேன். பேரின்பம் என்னை ஆட்கொண்டது.
 
----
ஒரு கற்பனை சொற்பொழிவிலிருந்து....
 

Saturday, October 15, 2011

சமுதாயம் ஒரு கேள்விக்குறி

           என்னுடைய முந்தைய பதிவு வேடிக்கை கதைதான் என்றாலும் அதில் புதைந்துள்ள உண்மைகளை பார்த்தால் நமக்கு தலை சுற்றல் வரும் போல் உள்ளது. மதத்தின் பெயரால் அனைவரும் தங்களது சுயநல தேவையை மட்டுமே பூர்த்திசெய்து கொள்கின்றனர் என்பது தெளிவாக புலனாகும். மனித நேயம் என்பதையே மறந்து தங்களது சுய லாபத்திற்காக 'மதத்தை' பயன்படுத்தும் இழிநிலை வருந்த தக்கது.
 
          ஆதியில் மனிதன் மிருகத்தோடு மிருகமாய் வாழ்ந்த காலத்தில், அவைகளிடமிருந்து தனித்து தெரிய சற்று புத்தி முற்றிய மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது தான் 'சமூக கட்டுபாடு'. அதுதான் நாளடைவில் மாறி மதமாய், பின்பு ஜாதியாய் உருவெடுத்தது. நாகரீகம் தோன்றிய காலத்தில், குழுக்களாய் வாழ்ந்த மனிதன் வேறொரு குழுவை எதிரிகளாக பாவித்து பகை பாராட்டி வந்தான். ஒரு நாகரீகத்தை சேர்ந்தவன் மற்றவனை பகையாக நினைத்தான்.
 
          நாகரீகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் மதத்தின் பெயரால் பகை பாராட்டி வருகிறோம். மிருக வாழ்க்கை வாழ்ந்த 'கற்கால' மனிதர்களாய் இன்றும் நம்முள் சில புல்லுருவிகள். வெறும் பாண்ட், சட்டை, டை மட்டுமே நாகரீகமில்லை. மனித நேயம் தான் நாகரீகம். வெறும் மதப்பற்று மட்டுமே பக்தியில்லை, பிற உயிர்களின் மேல் அன்பு தான் பக்தி.

சிங்கும் மதபோதகரும் (நெட்டில் படித்தவை)

                ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலை முடிந்த பின்பு, வீட்டிற்கு வெளிப்புறத் தோட்டத்தில் நமது திருவாளர் சிங் அவர்கள் தந்தூரி சிக்கனையும், மட்டன் வருவலையும் செய்வது வழக்கம். ஆனால் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள் அனைவரும் தீவிர கத்தோலிக்கர்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதில்லை. அசைவம் சமைக்கும் போது அதிலிருந்து வரும் வாசம் கத்தோலிக்கர்களின் விரதத்தை சீண்டி பார்த்தது. அதனால் அவர்கள் தங்களின் மதபோதகரிடம் முறையிட்டனர்.
 
                ஒருநாள் அவரும் திருவாளர் சிங்கை சந்தித்து மதம் மாறிவிடும்படி வற்புறுத்தினார். நீண்ட நாள் போதனைகளுக்கு பிறகு அந்த நன்னாளும் வந்தது. போதகர் சிங்கின் மீது புனித நீரை தெளித்து " ஒரு சீக்கியனாக பிறந்தாய், சீக்கியனாக வளர்ந்தாய். ஆனால் இப்போது நீ ஒரு கத்தோலிக்கன்" என்றார்.
 
               பிறகென்ன, அண்டைவீட்டார் அனைவருக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்களின் ஆனந்தம் நீடிக்கவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமையே அசைவத்தின் வாசம் அவர்களின் மூக்கை துளைத்தது. கோபமுற்ற அவர்கள் மதபோதகரிடம் முறையிட்டனர். உடனே புறப்பட்ட அவர் சிங்கின் தோட்டத்திற்கு விரைந்தார். இன்று அவனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்று சென்றவர் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்தார்.
 
                 நடந்தது இதுதான். நம்ம திருவாளர் மிகவும் பக்தியுடன் புனித நீர் இருத்த ஒரு புட்டியை திறந்து வறுத்த கோழி மற்றும் ஆட்டு கறி துண்டுகள் மேல் தெளித்து இவ்வாறு சொன்னார் "நீங்கள் கோழியாகவும், ஆடாகவும் பிறந்தீர்! கோழியாகவும், ஆடாகவும் வளர்ந்தீர்! ஆனால் இன்று நீங்கள் உருளை கிழங்கும் தக்காளியும்".

Monday, October 10, 2011

தேர்தல் அறியாமை:

தேர்தல் நாள்?
வினா எழுப்பினேன்
 
ரூவா ஐநூறு
கிடைக்கும் நாள்,
இலவசமாய் வாசலில்
அஞ்சி கிலோ
அரிசி கெடைக்கும் நாள்,
 
பிரியாணி கூடவே
முட்டையும் போடும்
ஃபங்சன் என்று
பலவாறு பதில்கள்!
 
எப்படி புரிய வைக்க?
 
அஞ்சுக்கும் பத்துக்கும்
சுயமரியாதையை
அடகு வைக்கும்
மூடர்களுக்கு
'உங்கள் தலைவிதி'யை
நீங்களே எழுதும்
நாளென்று!
 

காதலி !

அவள்
என் காதலி!
 
அவள்
என்
இதயம் கிழித்து
இரத்தம் பூசிக்கும்
அழகிய ராட்சசி,
 
அவளின்
கடைக்கண்
பார்வையால்
கசையடி கொடுக்கும்
கன்னி அரசி,
 
அவள்
கண்ணசைவால்
கட்டளையிடும்
காவிய நாயகி,
 
அவள்
சிரிப்பால் என்
உயிர் குடிக்கும்
சிரிப்பழகி,
 
அவள்
என் காதலி!

மாணவபருவ குறும்புகள்:

         சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது சிறுவயதில் படித்த பள்ளிகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு 'குறும்பை' உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நண்பர்  எட்டாம் வகுப்பு படிக்கும் பொது அரையாண்டு தேர்வின் பொது வேறு சில காரணங்களால் சரியாக படிக்கவில்லை. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நல்ல சினிமா பாடலை பத்து மதிப்பெண்கள் பகுதிக்கு எழுதி இருக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக வெளியூர் சுற்ற கிளம்பிவிட்டனர்.
 
        அரையாண்டு விடுமுறை கழிந்து பள்ளிக்கு சென்ற அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அவரின் பாடலுக்கு ஆசிரியர் 10 மதிப்பெண்கள் இட்டிருந்தார். லேசாக அதிர்ச்சியுற்றவர் ஆசிரியரை வினவ, அவர் புண் சிரிப்புடன் " பாட்டு புத்தகம் வாங்கி சரிபார்த்தேன். ஒரு பிழையும் இல்லை. அதனால் தான் முழுமதிப்பெண்கள்" என்று கூற, வகுப்பில் ஒரே சிரிப்பலை. ஆனால் மற்றுமொருமுறை இவ்வாறு நிகழ்ந்தால் 10 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்று பின்குறிப்பாக கூற மாணவர்கள் இன்னும் பெருங்குரலெடுத்து சிரிக்க அன்றைய தினம் மறக்க முடியாத ஒரு 'கல்வெட்டாக' அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றதாக அதே களிப்புடன் பகிர்ந்துகொண்டார்.