இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, April 19, 2012

ஒழுக்கம் :

         இன்றைய தினசரியை படித்துக்கொண்டிருந்தேன். படித்து முடிப்பதற்குள் வியர்த்து கொட்டியது. 'மின்வெட்டு' என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் 'தவறு' என்னுடையது அல்ல. அதில் வந்த செய்திகளை படித்ததன் விளைவு. குறைந்தபட்சம் 5 கொலைகள் வெறும் கள்ளக்காதலினால் மட்டுமே. 'காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இளம்பெண் கைது'. 'கள்ள காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவன் கைது', 'கள்ள காதலை தடுத்ததால் கணவன் கொலை - மனைவிக்கு வலைவீச்சு'. 'கள்ள காதல் கொலை வழக்கில் திடுக் திருப்பம்'. இப்படி எத்தனையோ தலைப்புகளில் ஆங்காங்கே சிதறி கிடந்தது நமது ' கலாச்சாரம்'. தமிழகத்தில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகத்தினால் தான் வியர்த்து கொட்டியது.
 
            இவற்றுக்கு மூல காரணம் என்ன? ஏன் இவ்வாறு நடக்கிறது?
 
            முதல் காரணம் பெற்றோர்கள். தங்களின் பெண்ணோ/ பையானோ காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும், அவர்களை கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு மணம் முடிப்பது கண்டிக்கப்படவேண்டிய விஷயம். திருமணத்திற்கு பிறகு காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பலர் 'தற்கொலை' செய்துகொண்டது அந்தக்காலம். இப்பொழுது அப்படி அல்ல. திருமணத்திற்கு பிறகும் தங்களின் 'புனிதமான' காதலை தொடர்கின்றனர். கணவனோ / மனைவியோ எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதெப்படி?
 
             இரண்டாவது காரணம் அனைவரும் அறிந்ததே! பணம். தினமும் பணம், பணம் என்று அலையும் இன்றைய மக்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழையும் 'குள்ளநரிகள்' தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டு சுலபமாக அவர்களுடன் பழக ஆரம்பித்து, பின்பு முடிவு .....?. மறுநாள் செய்தி. கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பு செலுத்தாததினால் வரும் குழப்பம் இது. அவைகள் மனது வைத்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
 
              மூன்றாவது நமது மூடப்பழக்கவழக்கங்கள். விவாகரத்து என்பது தெய்வக்குற்றம் போல் பாவிக்கும் நிலை. கணவனுக்கோ / மனைவிக்கோ எவ்வளவு எடுத்துசொல்லி புரிய வைத்தும் ஒத்துவராத நிலையில் 'விவாகரத்து' தான் சரியான தீர்வு. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. அதுவும் இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடத்தைக்கு காரணம். இதனால், நான் 'விவாகரத்தை' ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. தேவைப்பட்டால் கொடுக்கலாம் என்றுதான் சொல்லவருகிறேன்.
                 
            இப்படி காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று சீரழிந்து கிடப்பது நமது 'கலாச்சாரம்' தான். மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டில் மிக முக்கியமானது இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி' விஷயம். ஆனால் நாம் அதனை மறந்து இன்று மிருகங்களாகி திரிகிறோம். தனி மனித ஒழுக்கமென்பது சொல்லிக்கொடுத்து வருவதன்று. உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது.
 
           பெற்றோர்களே! பிள்ளைகளின் காதலுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களின் சுயநலதிற்காக மற்றவரின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். கணவான்மார்களே, மனைவிமார்களே! பணத்தை நேசிப்பதை விட்டு வாழ்க்கையை நேசியுங்கள்! உங்களின் வாழ்க்கை துணையை நேசியுங்கள்! நிச்சயம் தனிமனித ஒழுக்கம் தழைக்கும்.

Friday, April 6, 2012

ஐ.பி.எல். விளையாட்டு:

             ஆதிகாலத்தில் விளையாட்டு போட்டிகள் மனிதனின் வீரத்தை வெளிப்படுத்துவதற்காக விளையாடப்பட்டன. உதாரணமாக சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றை சொல்லலாம். பின்பு திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளையின் வீரத்தை சோதித்துப்பார்க்கவும் விளையாடப்பட்டன. ஊர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகள் பின்பு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பெற்றன. பரிசுகளையும் பதக்கங்களையும் அள்ளிச்சென்று வீட்டில் வைத்து அழகு பார்த்தனர். நாளடைவில் ஆரோக்கியம் என்ற நிலை மாறி பணம் மட்டுமே பிரதானமாகி இன்று அனைத்து விளையாட்டுகளுமே சூதாட்ட களங்களாகிவிட்டன.
 
            விளையாட்டு வீரரை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலை மாறி ஏலத்தில் எடுத்து 'தனக்காக' ஆடச்சொல்லி பணம் பார்க்கும் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இன்று விளையாட்டுகள் மாறிவிட்டன. ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்ற நிலை மாறி தனியொரு மனிதனுக்காக 'நகரங்களின்' பெயர்களில் நடைபெறும் இன்றைய விளையாட்டு போட்டிகள் நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
 
             விளையாட்டு - ஆரோக்கியம், பொழுதுப்போக்கு, வீரம் என்ற நிலை மாறி வெறும் ' சூது ' மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

கள்ளத்தனம் (கவிதை):

உறவில் கள்ளஉறவு
காதலில் கள்ளக்காதல்
வியாபாரத்தில் கள்ளவியாபாரம்
இப்படி அனைத்திலும்
கள்ளத்தனம் !!!
நாடு கேட்டுவிட்டது!
புலம்பிக்கொண்டே
கோவிலுக்கு சென்றேன்
அங்கேயும்
கடவுளுக்கு பதில்
சிலை!