இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, November 12, 2012

இனியாவது திருந்துவோம்

             நமது நலனுக்காக ஆளும் அரசாங்கம் சில பல திட்டங்களை அறிவிப்பதுண்டு. அவற்றில் பல கிடப்பில் போடப்பட்டாலும், சில திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டி உடனுக்குடன் செயல்படுத்தப்படுவதுண்டு. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் 'ஊடகங்கள்' மூலம் அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஒருசில மட்டுமே வெற்றிப்பெறுகின்றன. உதாரணமாக விலையில்லா பொருட்களை சொல்லலாம்.
 
            இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து அமலாக்கம் வரை ஒவ்வொரு திட்டமும் போராடியே நம்மை வந்து அடைகின்றன என்பது உண்மையிலும் உண்மை. அப்படி நம்மை வந்து அடையும் திட்டங்கள் முழுமையாக நமக்கு பயனளிக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே. உதாரணமாக 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டங்களை சொல்லலாம். விவசாயத்தை விட்டு 'ஓசியில்' பணம் கிடைக்கும் இந்த தொழிலை மக்கள் வெகுவாக நேசிக்கின்றனர். இன்றும் கிராமங்களுக்கு சென்றால், ஒரு விவசாயி தனது தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்காமல் திணறுவதையும், 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் ஏதேனும் மரத்தடியில் படுத்து தூங்குவதையும் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
 
           நம்முடைய நலனுக்காக வகுக்கப்பட்ட திட்டம் தான் இது. உள்ளூர் அரசியல்வாதிகளும், சில குள்ளநரி அதிகாரிகளும்  மக்களுக்கு சேரவேண்டிய கூலியில் பெரும்பகுதியை 'அமுக்கி' விட்டு, தூங்கிவிட்டு செல்வதற்கு சன்மானமாய் கொஞ்சம் கூலியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். நாள் முழுதும் நிலத்தில் வியர்வை சிந்தி ரூ.100 கூலி பெறுவதைவிட, வெறுமனே மரத்தடியில் தூங்கிவிட்டு ரூ 30 அல்லது 40 பெறுவதை லாபம் என்று நினைப்பதால் தான் இவ்வாறு நடக்கிறது.
 
           இது ஒருபுறமிருக்க, ஒரு நலத்திட்ட பணிக்காக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று வந்தால் நடக்கும் அக்கப்போருக்கு யார் சாட்சி? கட்டடம் இருக்கும் ஆனால் இருக்காது என்ற நிலைமை தான். நமது கையாலாகாத தானம் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தட்டிக்கேட்க நினைத்தாலும் 'பண' மற்றும் 'படை' பலதிற்கு முன் எடுபடுவதில்லை.
 
        இப்பொழுது உள்ளூர் அரசியல்வாதிகள் கொஞ்சம் சாமர்த்தியமாய் செயல்படுகின்றனர். தமது தொகுதியில் ஏதேனும் நலதிட்டப்பணி வரப்போகிறது என்றால் முன்பு இருந்ததைப்போல் தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதில்லை. அதற்கு பதில் உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வருகின்ற ஒப்பந்ததாரரிடம் சற்று காட்டமாகவே வலியுறுத்துகின்றனர். வரப்போகும் தேர்தலுக்கு செலவும் மிச்சம். வேலை வாங்கி கொடுப்பதற்கு தலைக்கு இவ்வளவு என்று கணிசமாக வசூல் வேட்டையும் நடக்கிறது.
 
         உள்ளூர் வாசிகள் பெரும்பாலும் வேலை செய்வதைவிட தூங்குவதிலும், சீட்டாடுவதிலும் மிக்க அக்கறையுடன் செயல்பட்டு, வளர்ச்சிப்பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். மீறி ஒப்பந்ததாரர் வெளியூரிலிருந்து வேலையாட்களை அமர்த்தினால் அவர்களை அடிப்பது, மிரட்டுவது என்று சகட்டுமேனிக்கு அட்டகாசம் செய்வது என்று அவர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகும். சமரசம் செய்ய உள்ளே வரும் அரசியல்வாதிக்கு பணம் கொடுத்தால் தான் சமரசம். இல்லையேல் வேலைநிறுத்தம்.
 
            ஆக நமக்காக அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டப்பணிகள் நம்மை வந்து அடையாததற்கு, நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் தான்  காரணம் என்பது புலனாகிறது. சரியானவர்களை தேர்ந்தெடுக்காமல், பணத்திற்கு ஆசைப்பட்டு யாரையோ தேர்ந்தெடுத்து நமக்கு நாமே 'ஆப்பு' வைத்துக்கொள்கிறோம். இனியாவது திருந்துவோம்.

Saturday, November 10, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்