இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, September 6, 2012

வளர்ப்பு பிராணிகள்:

             உங்களில் பலரின் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கும். அப்படி இல்லாயென்றால் உடனே ஒன்றினை உடனே வளர்க்க ஆரம்பியுங்கள். இதை நான் சொல்லவில்லை. மேற்கத்திய நாடுகளில் 'மனோதத்துவ' நிபுணர்களின் பரிந்துரை. எந்திர மயமாகிப்போன யுகத்தில் யாரிடம் எப்பொழுது கேட்டாலும் 'மன உளைச்சல்'. பணிச்சுமை காரணமாக நம்மில் பலருக்கும் 'மன அழுத்தம்' அதிகமாகி, மற்றவர்கள் மேல் எரிச்சலை கொட்டுகிறோம். இதனால் மனித உறவுகளில் விரிசல். நிம்மதி இல்லாத வாழ்க்கை. ஆனால் இதற்கெல்லாம் மருந்து 'வளர்ப்பு பிராணிகள்'.
 
               கிளி, புறா,பூனை, மீன், லவ் பேர்ட்ஸ், தவளை, ஆமை, பச்சோந்தி என்று எவ்வளவோ 'pets' இருந்தாலும் இவற்றில் முதலிடம் 'நாய்' க்கு தான். எஜமானர் எந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலும் அதனை மோப்பம் பிடித்து வாலாட்டிக்கொண்டே குழைந்துவரும் நாயை அவ்வளவு சீக்கிரம் யாரும் வெறுத்துவிட முடியாது. அப்படியே நீங்கள் உங்களின் கோபம் முழுவதையும் கொட்டினாலும் தன் முகத்தில் ஒரு விதமான ஏக்கத்தை புதைத்துக்கொண்டு தான் முன்னங்காலினால் உங்களுக்கு  'கைக்கொடுக்க' முயற்சிக்கும். இன்னமும் நீங்கள் உங்கள் மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பொருளை உங்கள் முன் கொண்டுவந்து போட்டு உங்களை சாந்த படுத்த முயற்சிக்கும். நமது குடும்ப அங்கத்தினர்களையும் தாண்டி நம் மீது அக்கறை கொள்ளும் ஒரு ஜீவன் எப்படி வெறும் 'விலங்கினமாக' இருக்க முடியும்.
 
                கலப்பின, உயர்ந்த ரக நாய்கள் தான் நகர சூழலுக்கு ஏற்றது என்று நம்மில் பலர் தவறாக கணக்கு போடுகிறோம். நமது தெருவில் விளையாடும் நாய்கள் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. கொஞ்சம் அக்கறை கொண்டால் அழுக்கான தெருநாயும் சுத்தமாகும். கொஞ்சம் பாசம் வைத்தால் தெரு நாய்க்கும் ஒரு உறவு கிடைக்கும். பிரபல நடிகையை பார்த்து சொல்லவில்லை. நானும் ஒரு நாய் வளர்த்தேன். அது சாதாரண ரக நாய்தான். ஆயினும் அது அன்பில், அக்கறையில், விசுவாசத்தில் உயர்ந்த ரகம். நள்ளிரவில் வீடு திரும்பினாலும் எனக்காக காத்திருந்து, நான் வந்த பின்பு என்னுடன் 5-10 நிமிடங்கள் செலவழித்த பின்பு தான் உறங்க செல்லும். பலமுறை நான் வரும் வரை சாப்பிடாமல் கூட காத்திருந்த நாட்கள் உண்டு. வயோதிகம் அதனால் மரணம். இருப்பினும் எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் வாழ்கிறது.
 
               ஒரு விஷயம் தான் புரியவில்லை. எனது செல்ல பிராணி இறந்த பின்பு எனக்கு வேறு ஒரு 'pet' வைத்துக்கொள்ள தோன்றவில்லை. குடும்பத்தினர் வற்புறுத்தலால் ஒரு நாயை வளர்க்க நினைத்தாலும் மனம் பழைய நாயையே இந்த புதிய உறவிலும் தேடுகிறது. அது கிடைக்காத பட்சத்தில் மனம் மற்றொரு செல்ல பிராணியை ஏற்றுக்கொள்வதில்லை. அதே போல் வளர்ப்பு பிராணிகளும் 'ஒரே ஒரு' எஜமானரை தான் ஏற்றுக்கொள்ளும். மற்றவர்கள் மேல் பாசம் காட்டினாலும் 'எஜமானர்' ஒருவரே. இந்த ஒரு வினோதமான பாசப்பிணைப்பு நிச்சயம் உன்னதமானது தான். ஆதலினால் செல்ல பிராணிகளை  வளருங்கள். அது எந்த உயிரினமாகவும் இருக்கலாம். சமீபத்தில் ஒருவர் 'மலை பாம்பை' செல்ல பிராணியாக வளர்ப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.