இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, November 30, 2011

பாரதியார் கவிதைகளும் புதுமை பெண்களும்:

            நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை கொண்டு பெண்ணாடிமை செய்வோரை தன் பார்வயாலே சுட்டெரிக்க வேண்டும், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டாம் என்று சொன்ன மூடர்கள் அழிய பெண்கள் உயர்படிப்பு பெறவேண்டும், உயர்படிப்பு அதன்மூலம் நல்லாட்சி நடத்தி ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டவன் பாரதி. அப்போது அவன் கனவு மெய்யானதோ தெரியாது. ஆனால் இன்று பல புதுமை பெண்கள் இந்தியாவில் இருப்பதை கண்டு நிச்சயம் அவன் ஆத்மா சந்தோஷங்கொள்ளும்.
 
           நிற்க. இன்றைய செய்தித்தாள் (அல்லது இ-பேப்பர்) படித்தீர்களா? அதில் நீங்கள் கண்ட புதுமை பெண்களை மட்டும் (நற்செயல், சமூக சேவை, கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) பட்டியலிட்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். அட்டவனையில் அவரவர் செயல்களுக்கேற்ப மதிப்பெண் கொடுங்கள். நற்செயலுக்கு + ve மதிப்பெண்களும், தீயதிற்கு - ve மதிப்பெண்களும் கொடுத்து (100 க்கு) பின்னால் அவற்றின் சராசரியை பாருங்கள். நிச்சயம் 30% குறைவான மதிப்பெண்களே வரும்.
 
           பெண்விடுதலை என்பது கலாச்சார மீறல் அல்ல. பெண்விடுதலை என்பது அடுத்தவரை மதியாமை அல்ல. பெண்விடுதலை என்பது மிருகத்தனம் அல்ல. ஆண்களிடம் அடிமையாய் வாழ்ந்த பெண்களை படிக்கச்சொல்லி அவர்களையும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக பாவித்து சமநிலையை ஏற்படுத்த நினைத்தான் பாரதி. ஆனால் வளந்து நிற்பதோ 'முள்' காடு. புதுமை என்று சொல்லி கலாச்சார மீறல்களில் ஈடுபடும் பெண்கள்தான் ஏராளம். பெரியோரை மதிக்காமல், மிருகத்தனமான வாழ்க்கைக்கு இன்று வித்திட்டு கொண்டுள்ளனர். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்பதை மறந்துவிட்டார்கள்.
 
            ஆண்களுக்கு இணை என்ற பாரதி கனவு பல துறைகளில் இன்று பெண்களை முன்னேற வைத்துள்ளது. அதோடு ஆண்களின் கெட்ட செயல்களிலும் (குடி, சிகரெட், கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) இணையாக செய்ய முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். செய்தித்தாள் பாருங்கள். பாரதி கனவு இன்று நனவாகி (partial) இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பெண்கள் போகப்பொருளாக கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது என்ற கூற்று மட்டும் மாறவேயில்லை.  விளையாட்டில் ஒரு சானியா, அறிவியலில் ஒரு கல்பனா என்று ஒருபுறம் பார்த்து ரசிக்கிறோம். விமான பணிபெண்ணாக, ஹோட்டல் வரவேற்பாளராக, விளையாட்டுத்துறையில் CHEER GIRLS ஆக, பெண்கள் இன்றும் போகப்பொருளாவதை நாமே பார்த்து ரசிக்கிறோம்.
 
          பெண்விடுதலை பாரதியின் கனவுதான். இன்றைய பெண்களின் கனவல்ல.

Monday, November 28, 2011

சமூக வலைதளங்கள் - ஒரு எச்சரிக்கை:

            தோழர்களே! நம்மில் 100 க்கு 99 பேர் பேஸ்புக் அல்லது இதர சமூக வலைதளத்தின் பயனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. சமூக வலைதளங்களால் நன்மைகளும் உண்டு. அதே சமயம் தீமைகளும் உண்டு. நன்மைகளை விடுத்து தீமைகளை மட்டுமே எடுத்தாளும் கயவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. குறிப்பாக இளம் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டும் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுத்திவிடுகின்றனர். சமுதாய நலன் மட்டுமின்றி நமது கலாச்சாரம், பெண்களின் பாதுகாப்பு போன்றவையும் தான் கேள்விக்குறியாகின்றன.
 
        எதில் தான் இல்லை குறை நிறைகள்? உங்கள் கேள்வி நியாயமானது தான். அதே சமயம் உங்களை சார்ந்தவர்களை அல்லது தெரிந்தவர்களை காப்பாற்றவேண்டியது உங்களது / நமது கடமையல்லவா? பாதையில் புதைகுழி இருப்பது தெரிந்தும் அவ்வழியே போவோரை தடுக்காமல் வேடிக்கைபார்ப்பது எந்த விதத்தில் தர்மம். குறைந்தபட்சம் புதைகுழி பற்றி எச்சரித்து அனுப்பலாமே. மீறி செல்பவர்கள் பலனை அனுபவிக்க வேண்டியதுதான். அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்டோர் தங்களை வெளிப்படுத்தி, அதன் மூலம் சமூக விரோதிகளை அடையாளம் காண்பிக்கலாம். இதனால் சமூகமும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பர்.
 
          தயவுசெய்து சமூக வலைதளங்களால் பதிக்கப்பட்டோர் யாராகினும் தயவுசெய்து தங்களை வெளிப்படுத்தி அனைவருக்கும் விழிப்புணர்வூட்டுங்கள். நீங்கள் ஏற்றும் இந்த தீபம் நல்லவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், தீயவர்களுக்கு தீயாகவும் இருக்கட்டும்.

Sunday, November 27, 2011

அடைமழை:

        சமீப காலங்களில் மழையே பெய்யவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்துவிட்டார் வருணன். தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஒரே மழை நீர். வெள்ளக்காட்டின் மத்தியில் மாட்டிக்கொண்டோரின் நிலைதான் கொஞ்சம் பரிதாபம். விவசாய நிலங்கள் எல்லாம் பாழ். நகரங்களில் சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் கலந்து ஒரே நாற்றம். நோய் கிருமிகளை சுமந்துகொண்டு இங்கும் அங்குமாக அலைகிறது, ஆள் தேடி. சாலைகள் எல்லாம் சேதமடைந்து பல ஊர்கள் தொடர்பு துண்டித்து போய்விட்டது. குண்டும் குழியுமான பாதைகள் இன்று முழு பள்ளங்களாக மாறி வாய் பிளந்து காத்திருக்கின்றன.
 
        நிவாரண பணிகளை துரிபடுத்தும் நிலையில் அரசு. ஆங்காங்கே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள். மக்களும் தங்களுக்குள்ளே ஒற்றுமையோடு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய். புயல் சின்னம் அரபிக்கடலை நோக்கி சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். இல்லையென்றால் மழையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம்.
 
         இந்த மழைநீரையாவது சேமிப்போமா? சந்தேகமே. நமக்கென்ன. பழிபோடத்தான் அரசும், அரசாங்க அதிகாரிகளும் உள்ளனரே. நம் கடமையை என்றைக்கு செய்திருக்கிறோம்>

Wednesday, November 23, 2011

பேருந்து கட்டணம் உயர்வு:

                    சில நாட்களுக்கு முன்பு நமது அரசு பேருந்து கட்டணம், பால் விலை, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஆணையிட்டது. ஆணையிட்டது முதல் இன்று வரை சென்னை மாநகர போக்குவரத்திற்கு இவ்வளவுதான் கட்டணம் என்று வரையறுக்கவில்லை. மற்ற பேருந்துகளுக்கு கி.மீ க்கு இவ்வளவு என்று ஏற்றியதால் அதிக குழப்பம் இல்லை. ஆனால் சென்னைக்குள் இயங்கும் பேருந்துகளில் எந்தவித வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அறிவிப்பு பலகையின் நிறத்தை மட்டும் மாற்றி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் 'அராஜகம்' நடந்தேறுகிறது.
 
                    எங்கள் ஏரியாவில்: பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் ஏரியாவுக்கு சாதாரண பேருந்து 'M' அடைமொழியுடன் இயங்கி வந்தது. கட்டணம் ரூ.4 வசூலித்தனர். அறிவிப்புக்கு பின்பு 'M' நீக்கிவிட்டு 'Express' என்று எழுதிவிடு ரூ.8 வசூலிக்கின்றனர். 'M' சீரிஸ் வண்டிகளின் நிலை அனைவரும் அறிந்ததே. விவேக் காமெடியில் வரும் ஷேர் ஆட்டோவும் 'M' மற்றும் சாதாரண பேருந்துகளின் (White போர்டு) நிலையும் ஒன்றுதான்.  சேவையின் தரத்தை உயர்த்தமல் வெறுமனே கட்டணத்தை மட்டுமே உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயித்தெரிச்சலை கிளப்பியுள்ளது மாநகர போக்குவரத்து கழகம்.
 
                    சேவையின் தரம் உயராமல் வெறும் விலையேற்றம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. விலையேற்றத்திற்கு காரணம் முந்தய ஆட்சியின் தவறு என்றே எடுத்துக்கொண்டாலும் இப்படி ஒரே அடியில் அடித்தது கொஞ்சம் வேதனைக்குரிய விஷயம்.

Wednesday, November 16, 2011

வேலாயுதம், ஏழாம் அறிவு - திரை விமர்சனம்

இந்திய நாட்டுக்கு எதிராக செயல்படும் தீய சக்தியை அழிக்கும் ஒருவனின் கதையே இரண்டு படங்களின் மூல கருவாகும். ஒரே கதையை திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்களை செய்து இரண்டு விதமான படங்களாக தந்துள்ளனர். தன்னுடைய கதாநாயகனுக்காக திரைக்கதையை எழுதிய இயக்குனர்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இதில் 'போதி தர்மர்' என்ற தமிழரின் பெருமையை எடுத்துணர்த்திய இயக்குனர் முருகதாசுக்கு தமிழர்கள் சார்பாக எனது பாராட்டுக்கள்.
 
வேலாயுதம் திரைப்படத்தில் ஹன்ஸிகாவை நீக்கி பார்த்தாலும் திரைக்கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பழைய திரைப்படங்களில் வரும் கவர்ச்சி நடிகையின் வேலையை மட்டும் 'திறம்பட' செய்திருக்கிறார். ஹன்ஸிகா, பாஸ்கர், மற்றும் விஜய்யின் நண்பர்களின் பங்கு திரைக்கதையில் ஒட்டவில்லை. ஆரம்பத்தில் விஜய் மற்றும் சரண்யா மோகன் செய்யும் குறும்புக்காக அவர்களை ஊர்க்காரர்கள் விரட்டுவதைப்போல் கதையை ஆரம்பிக்கும் இயக்குனர் பின்பு தங்கையின் திருமணத்திற்கு பொருள் வாங்க சென்னை வருவதாய் குழப்பியுள்ளார். வழக்கமான 'விஜயகாந்த்', 'அர்ஜூன்' பட ஃபார்முலா தான் என்றாலும் விஜய் ரசிக்க வைக்கிறார்.
 
ஏழாம் அறிவில் கதாநாயகியின் பங்களிப்பு திரைக்கதையில் ஒன்றி வருகிறது. ஆராய்ச்சி, டி‌என்‌ஏ என்று ஏகத்துக்கு குழப்பியிருந்தாலும் தமிழனின் பெருமையை கூறுவதால் அதனை பொறுத்துக்கொள்ளலாம். பாடல்கள் சுமார் ரகம்தான். சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. போதி தர்மராக சூர்யா வரும் சண்டை காட்சிகள் அற்புதம். புதிய, அறிவியல் சார்ந்த திரைக்கதை தமிழுக்கு ஏ.ஆர். முருகதாஸ் -ன் பரிசு. ஹாலிவுட் வில்லன் தமிழுக்கு புதுவரவு. மனோவசியத்தை வைத்துக்கொண்டு கார், பைக் -ஐ சூர்யா மேல் மோதவிடும் சண்டை காட்சிகள் புதுமை, அருமை.
 
வேலாயுதத்தில் ஜெனிலியா, ஏழாம் அறிவில் ஸ்ருதிஹாஸன் - கதாநாயகனை 'சூப்பர் மேன்' ஆக மாற்றுகிறார்கள்.
 
இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகர்கள் சொல்லும் செய்தி ' உள்ளுக்குள் புதைந்திருக்கும் வீரத்தையும், விவேகத்தையும், அறிவையும் வெளிக்கொணர்ந்து தீய சக்திகளை அடியோடு அழிக்க வேண்டும்' என்பதே. அநியாயத்தை பார்த்தால் தட்டிக்கேட்க வேறு ஒருவனுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
 
ஒரே தோசைமாவில் மசாலா சேர்த்து இரண்டு வித 'தோசைகளை' வழங்கிய இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

Saturday, November 12, 2011

தினம் தினம் தீபாவளி

       சென்னையில் குடியிருப்போருக்குத் தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று. தீபாவளி திருநாள் அன்று காலை வெளியில் வந்து நின்று பாருங்கள். எங்கும் பட்டாசு ஒலி, புகை, பட்டாசினால் ஏற்பட்ட குப்பை என்று அந்த திருநாளின் கோரத்தாண்டவம் கண் முன்னே அரங்கேறும். இது சாதாரண நிகழ்வாக தெரிந்தாலும் அதனால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் தீங்கு அளவிடமுடியாத ஒன்று. விஷயத்திற்கு வருகிறேன். நம் சிங்கார சென்னையில் நாள்தோறும் பெருகும் மக்கள் தொகையினால் ஏற்படும் குப்பை, பெருகிவரும் வாகனங்களால் வரும் புகைமண்டலம் மற்றும் இரைச்சல் என்று தினம் தினம் இங்கு தீபாவளிதான்.
 
      கிராமபுரத்தில் இருந்து இங்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவர்களின் தேவை 'பணம்'. கிராம மக்களின் தேவைகளை சிறிது சிறிதாக பூர்த்தி செய்வதன் மூலம் இந்த 'இடப்பெயர்ச்சியை' சிறிது குறைக்கலாம். கூட்டம் குறைந்தால் குப்பையும் குறையும். குற்றங்களும் குறையும். நிறைவேற்றுமா அரசு?
 
        தனி ஒருவர் அலுவலகம் செல்ல 'இன்னோவா' எதற்கு? ஒரு மணிநேரத்தில் எனை கடந்து சென்ற 154 கார்களில் 78 தனியே சென்றவர்கள், 54 ஓட்டுனர் மற்றும் ஒருவர் மட்டும், மீதி 22 கார்களில் 5 வயது முதல் 12 வயதுள்ள பள்ளி செல்லும் பிள்ளைகள் (அதுவும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பயணம்). இது தவிர இருசக்கர வாகனங்கள் புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்பி எங்கும் நிறைந்து வழிந்தோடின. அரசே ஏற்று நடத்தும் பேருந்து போக்குவரத்து இருந்தும் இவ்வளவு மக்கள் தங்களின் சொந்த வண்டியில் செல்வதேன்? ஒன்று கௌரவம் (?), மற்றொன்று கூட்ட நெரிசல். இந்த இழிநிலையை போக்க, பேருந்து எண்ணிக்கையை உயர்த்தி, பயணத்தின் தரத்தினை உயர்த்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
        நிறைவேற்றுமா அரசு?

Wednesday, November 2, 2011

மழலை விளையாட்டு :

பிஞ்சு கையால்
என் கண் மறைத்து
கண்ணாமூச்சி விளையாட்டு
 
அம்மாவின் புடவையில்
ஒளிந்து கொண்டு
ஓடிப்பிடித்து விளையாட்டு
 
தத்தித் தத்தி நடந்து
சிறிது தூரம் சென்ற பின்பு
லேசாய் திரும்பி பார்த்து,
பின்னால் நான்
தொடர்வதை கண்டு
எனக்கு போக்கு காட்டி
ஒரு விளையாட்டு
 
யாரிடம் கற்கிறாய்
என் செல்ல மகளே!
இந்த புது புது விளையாட்டுகளை
எப்போதும் நீயே ஜெயிக்கிறாய்
எங்கள் மனதை
கொள்ளை கொண்டு!

காதல் மொழி

கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
'சீ போ!'
 
பதிலேதும் சொல்லாமல்
செல்லும் தென்றல் காற்றை
மடக்கிக் கேட்டேன்
என்ன சொன்னாள் என்னவள் என்று
 
பார்த்ததும் உள் மறையும்
நிலவும் சொல்லாமல் மறைத்தது
அவள் விழி மொழியின்
அர்த்தங்களை
 
ஆனது ஆகட்டுமென்று
ஏதோ ஒரு தைரியத்தில்
என்னவோ சொன்னாய் அன்று!
அது முதல்
கண்ணில் தூக்கமில்லை
வயிற்றில் பசியில்லை
மற்றும் சில பல இல்லைகள்
இன்றாவது சொல்!
 
கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
மீண்டும்
'சீ போ!'