சில நாட்களுக்கு முன்பு நமது அரசு பேருந்து கட்டணம், பால் விலை, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஆணையிட்டது. ஆணையிட்டது முதல் இன்று வரை சென்னை மாநகர போக்குவரத்திற்கு இவ்வளவுதான் கட்டணம் என்று வரையறுக்கவில்லை. மற்ற பேருந்துகளுக்கு கி.மீ க்கு இவ்வளவு என்று ஏற்றியதால் அதிக குழப்பம் இல்லை. ஆனால் சென்னைக்குள் இயங்கும் பேருந்துகளில் எந்தவித வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அறிவிப்பு பலகையின் நிறத்தை மட்டும் மாற்றி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் 'அராஜகம்' நடந்தேறுகிறது.
எங்கள் ஏரியாவில்: பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் ஏரியாவுக்கு சாதாரண பேருந்து 'M' அடைமொழியுடன் இயங்கி வந்தது. கட்டணம் ரூ.4 வசூலித்தனர். அறிவிப்புக்கு பின்பு 'M' நீக்கிவிட்டு 'Express' என்று எழுதிவிடு ரூ.8 வசூலிக்கின்றனர். 'M' சீரிஸ் வண்டிகளின் நிலை அனைவரும் அறிந்ததே. விவேக் காமெடியில் வரும் ஷேர் ஆட்டோவும் 'M' மற்றும் சாதாரண பேருந்துகளின் (White போர்டு) நிலையும் ஒன்றுதான். சேவையின் தரத்தை உயர்த்தமல் வெறுமனே கட்டணத்தை மட்டுமே உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயித்தெரிச்சலை கிளப்பியுள்ளது மாநகர போக்குவரத்து கழகம்.
சேவையின் தரம் உயராமல் வெறும் விலையேற்றம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. விலையேற்றத்திற்கு காரணம் முந்தய ஆட்சியின் தவறு என்றே எடுத்துக்கொண்டாலும் இப்படி ஒரே அடியில் அடித்தது கொஞ்சம் வேதனைக்குரிய விஷயம்.