இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Saturday, November 12, 2011

தினம் தினம் தீபாவளி

       சென்னையில் குடியிருப்போருக்குத் தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று. தீபாவளி திருநாள் அன்று காலை வெளியில் வந்து நின்று பாருங்கள். எங்கும் பட்டாசு ஒலி, புகை, பட்டாசினால் ஏற்பட்ட குப்பை என்று அந்த திருநாளின் கோரத்தாண்டவம் கண் முன்னே அரங்கேறும். இது சாதாரண நிகழ்வாக தெரிந்தாலும் அதனால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் தீங்கு அளவிடமுடியாத ஒன்று. விஷயத்திற்கு வருகிறேன். நம் சிங்கார சென்னையில் நாள்தோறும் பெருகும் மக்கள் தொகையினால் ஏற்படும் குப்பை, பெருகிவரும் வாகனங்களால் வரும் புகைமண்டலம் மற்றும் இரைச்சல் என்று தினம் தினம் இங்கு தீபாவளிதான்.
 
      கிராமபுரத்தில் இருந்து இங்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவர்களின் தேவை 'பணம்'. கிராம மக்களின் தேவைகளை சிறிது சிறிதாக பூர்த்தி செய்வதன் மூலம் இந்த 'இடப்பெயர்ச்சியை' சிறிது குறைக்கலாம். கூட்டம் குறைந்தால் குப்பையும் குறையும். குற்றங்களும் குறையும். நிறைவேற்றுமா அரசு?
 
        தனி ஒருவர் அலுவலகம் செல்ல 'இன்னோவா' எதற்கு? ஒரு மணிநேரத்தில் எனை கடந்து சென்ற 154 கார்களில் 78 தனியே சென்றவர்கள், 54 ஓட்டுனர் மற்றும் ஒருவர் மட்டும், மீதி 22 கார்களில் 5 வயது முதல் 12 வயதுள்ள பள்ளி செல்லும் பிள்ளைகள் (அதுவும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பயணம்). இது தவிர இருசக்கர வாகனங்கள் புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்பி எங்கும் நிறைந்து வழிந்தோடின. அரசே ஏற்று நடத்தும் பேருந்து போக்குவரத்து இருந்தும் இவ்வளவு மக்கள் தங்களின் சொந்த வண்டியில் செல்வதேன்? ஒன்று கௌரவம் (?), மற்றொன்று கூட்ட நெரிசல். இந்த இழிநிலையை போக்க, பேருந்து எண்ணிக்கையை உயர்த்தி, பயணத்தின் தரத்தினை உயர்த்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
        நிறைவேற்றுமா அரசு?