இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, November 16, 2011

வேலாயுதம், ஏழாம் அறிவு - திரை விமர்சனம்

இந்திய நாட்டுக்கு எதிராக செயல்படும் தீய சக்தியை அழிக்கும் ஒருவனின் கதையே இரண்டு படங்களின் மூல கருவாகும். ஒரே கதையை திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்களை செய்து இரண்டு விதமான படங்களாக தந்துள்ளனர். தன்னுடைய கதாநாயகனுக்காக திரைக்கதையை எழுதிய இயக்குனர்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இதில் 'போதி தர்மர்' என்ற தமிழரின் பெருமையை எடுத்துணர்த்திய இயக்குனர் முருகதாசுக்கு தமிழர்கள் சார்பாக எனது பாராட்டுக்கள்.
 
வேலாயுதம் திரைப்படத்தில் ஹன்ஸிகாவை நீக்கி பார்த்தாலும் திரைக்கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பழைய திரைப்படங்களில் வரும் கவர்ச்சி நடிகையின் வேலையை மட்டும் 'திறம்பட' செய்திருக்கிறார். ஹன்ஸிகா, பாஸ்கர், மற்றும் விஜய்யின் நண்பர்களின் பங்கு திரைக்கதையில் ஒட்டவில்லை. ஆரம்பத்தில் விஜய் மற்றும் சரண்யா மோகன் செய்யும் குறும்புக்காக அவர்களை ஊர்க்காரர்கள் விரட்டுவதைப்போல் கதையை ஆரம்பிக்கும் இயக்குனர் பின்பு தங்கையின் திருமணத்திற்கு பொருள் வாங்க சென்னை வருவதாய் குழப்பியுள்ளார். வழக்கமான 'விஜயகாந்த்', 'அர்ஜூன்' பட ஃபார்முலா தான் என்றாலும் விஜய் ரசிக்க வைக்கிறார்.
 
ஏழாம் அறிவில் கதாநாயகியின் பங்களிப்பு திரைக்கதையில் ஒன்றி வருகிறது. ஆராய்ச்சி, டி‌என்‌ஏ என்று ஏகத்துக்கு குழப்பியிருந்தாலும் தமிழனின் பெருமையை கூறுவதால் அதனை பொறுத்துக்கொள்ளலாம். பாடல்கள் சுமார் ரகம்தான். சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. போதி தர்மராக சூர்யா வரும் சண்டை காட்சிகள் அற்புதம். புதிய, அறிவியல் சார்ந்த திரைக்கதை தமிழுக்கு ஏ.ஆர். முருகதாஸ் -ன் பரிசு. ஹாலிவுட் வில்லன் தமிழுக்கு புதுவரவு. மனோவசியத்தை வைத்துக்கொண்டு கார், பைக் -ஐ சூர்யா மேல் மோதவிடும் சண்டை காட்சிகள் புதுமை, அருமை.
 
வேலாயுதத்தில் ஜெனிலியா, ஏழாம் அறிவில் ஸ்ருதிஹாஸன் - கதாநாயகனை 'சூப்பர் மேன்' ஆக மாற்றுகிறார்கள்.
 
இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகர்கள் சொல்லும் செய்தி ' உள்ளுக்குள் புதைந்திருக்கும் வீரத்தையும், விவேகத்தையும், அறிவையும் வெளிக்கொணர்ந்து தீய சக்திகளை அடியோடு அழிக்க வேண்டும்' என்பதே. அநியாயத்தை பார்த்தால் தட்டிக்கேட்க வேறு ஒருவனுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
 
ஒரே தோசைமாவில் மசாலா சேர்த்து இரண்டு வித 'தோசைகளை' வழங்கிய இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும்.