பொங்கல் பொதுவான ஒரு பண்டிகையாக இருந்தாலும் மற்ற பண்டிகையை போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி கொண்டாடப்படுவதில்லை. இந்தத் திருநாள் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் ஒருமாதிரியும், நகரங்களில் ஒருமாதிரியும் கொண்டாடப்பட்டாலும் 'பொங்கல்' என்னவோ ஒன்றுதான். கிராமங்களில் பொங்கலானது 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது. நகரங்களில் ஒன்று அல்லது இரண்டுநாட்கள் மட்டுமே.
கிராமங்களின் பெருமையை இந்த பொங்கல் திருநாளில் நாம் தெளிவாக காணலாம். போகியன்று 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று வீடு மற்றும் மனதில் உள்ள பழைய, உபயோகமில்லாதவற்றை சுத்தம் செய்து, வெள்ளையடித்து மகிழ்வது வழக்கம். மறுநாள் பெரிய பானையில் வெண்பொங்கலும், கொஞ்சம் சிறிய பானையில் சர்க்கரை பொங்கலும் செய்து சூரியனுக்கு படைத்து, தாமும் உண்டு மற்றவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வர். மூன்றாம் நாள் உழவுக்கு துணைபுரியும் ஆடு, மாடு போன்றவற்றை அலங்கரித்து, பூஜித்து பொங்கல் வைத்து 'மாட்டுப்பொங்கலாக' கொண்டாடி களிப்பர். அடுத்தநாள் பொங்கல் உண்ட களைப்பு போக வீரவிளையாட்டுகளும், அதற்கடுத்த நாள் திருவிழாவும் கொண்டாடுவார். இன்னும் சில ஊர்களில் போகிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பொங்கல் ஆரம்பித்துவிடும்.
நகரங்களில் பொங்கல் கொண்டாட நிச்சயம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.போகியன்று லாரி டயர், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், மறுநாள் ஸ்டவ் இல் பொங்கல், நாள் முழுவதும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், மாட்டுப்பொங்கல் கிடையாது. காணும் பொங்கல் என்று ஒன்றை வைத்துக்கொண்டு கடற்கரையை குப்பையாக்குவது அல்லது திரையரங்கை குப்பையாக்குவது. பின்பு மறுநாட்களில் எப்போதும் போல் 'எந்திர' வாழ்க்கை. இவர்கள் போடும் குப்பைகளாலும், எரிக்கும் டயரினாலும் சுற்றுசூழல் பாதிப்படைவதோடு மக்களின் சுகாதாரத்தையும் கெடுக்கிறது. நகரங்களில் 'பொங்கல்' கொண்டாடுவதை தடை செய்தால் தேவலை.
ஆயினும், பொங்கல் தமிழர் திருநாள் என்பதால் 'பொங்கலோ பொங்கல்' , 'பொங்கலோ பொங்கல்', 'பொங்கலோ பொங்கல்'.