நமது புராண கதைகளிலும் வேதங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்கள் சொர்க்கமும் நரகமும். இன்றும் நமது மூளையில் இருக்கும் ஒரு நெருடல், இவை இருக்கின்றனவா? இல்லையா? அப்படி இருக்கிறதென்றால் எங்கே இருக்கிறது? சரிதானே. முதலில் அவற்றின் விளக்கங்களை பார்ப்போம். சொர்க்கம் என்றால் சுகபோகம், சந்தோஷம், பசிதெரியாமை, மகிழ்ச்சி. நரகமென்றால் கஷ்டம், தூக்கம், வேதனை, பசி, பட்டினி, வலி. இதனை நான் கூறவில்லை. நமது வேதங்களும், இதிகாசங்களும் பறைசாற்றுவது இவையே. சொர்க்கமும் நரகமும் புண்ணியமும் பாவமும். அவ்வளவே.
சுகபோகமாய் சந்தோஷமாய் பசி தெரியாமல் வாழும் மக்கள் இருக்கும் இடங்கள் சொர்க்கம். பசி பட்டினியோடு வாழும் மக்கள் இருக்குமிடம் நரகம். ஒரே ஊரில் ஒருவர் சொர்க்கம் பகுதியிலும், மற்றொருவர் நரகப்பகுதிகளிலும் வசிக்கலாம். நகரங்கள் சில நேரங்களில் சொர்க்கமாகவும் பல நேரங்களில் நரகமாகவும் ஆகின்றன. கிராமங்கள் எப்போதும் சொர்க்கமாகவே இருக்கின்றன.
இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொர்க்கமும், நரகமும் வெளி கிரகங்களோ / உலகமோ இல்லை. நம் மனமும், நம் மனம் சார்ந்த செயல்களும், அதனால் விளையும் விளைவுகளும் / மாற்றங்களும் / ஏமாற்றங்களும் தான் நம் மகிழ்ச்சியை நிர்ணயிக்கின்றன. நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், இல்லாதோருக்கு உதவுவோம், ஏழைக்கு எழுத்தறிவிப்போம் அதன் மூலம் 'நமக்கு சொர்க்கம் நிச்சயம்' - அதாவது இப்புவியில் சந்தோஷமாக வாழலாம். இல்லையேல் இருக்கும் பணத்தையும், இல்லாத அன்பையும் கட்டிக்கொண்டு அழுது புலம்ப வேண்டியதுதான் நரக வேதனையுடன்.