இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, September 16, 2011

கடவுளும் நானும் – II (கருவறை):

             கோவில்களில் கடவுளை இருளில் வைத்திருப்பதேன்? கோவில் முழுவதும் இருளில், காற்றோட்டமில்லாமல் இருப்பதேன்? சுற்றுப்புறம் சுகாதாரமில்லாமல் அசுத்தமாக இருப்பதேன்? கோயிலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. அதனால் இருள் எங்கும் பரவி இருந்தது. இப்போது? கருவறை இருளில் கடவுளை வைத்து 'ஒளிகொடுப்பவன்' இவனே என்ற பொய்யுரை கடவுளை கோபமூட்டுவதில்லை. அண்டவெளி இருள். அதனால் தான் கடவுள் கருவறையும் இருள் என்று விளக்கம் கூறுபவர்கள் உண்டு. ஆனால் கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              இறைவனை பூஜிக்க ஒரு மொழி. அந்த மொழி தெரிந்த, ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த 'மொழி'யில் இறைவனை பூஜிக்கலாம். மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் (புரிந்தாலும் புரியாவிட்டாலும்). பின்பு அவர் கொடுக்கும் 'எதையும்' பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரது தட்டில் தட்சணை என்ற பெயரில் பணம் போட்டாகவேண்டும். பிறகு உண்டியல் எதற்கு? கோவில் வாசலிலும் பிச்சைக்காரர்கள், உள்ளேயும். இவ்விதிகள் எதற்காக ஏற்படுத்தபட்டன? யாரால் விதிக்கப்பட்டன?
 
               கருவறை கடவுளை தரிசிக்க 0.5 நொடிகள் மட்டுமே. அதற்கு 8 மணிநேரம் நீண்ட வரிசை. அப்படியே வரிசையில் சென்றாலும் கருவறை அருகில் நின்று கொண்டு 'சீக்கிரம் வா, வேடிக்கை பார்க்காதே' என்று கடவுளை வேடிக்கை பொருளாக்கி கூச்சலிடுகின்றனர். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              திரையரங்கத்தில் நமது விருப்ப கதாநாயகனின் நடிப்பை பார்ப்பதற்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முற்றம் என்று பணத்தை வாரி இறைக்கிறோம். அதே போல் இன்று கோவில்களில் தரிசனத்திற்கு ரூ.1000, ரூ.500, ரூ.250, ரூ.100 மற்றும் இலவச தரிசனம் என்று கடவுளை நாடக கோமாளியாக்கி இருக்கிறார்கள். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
               உலகில் சக்தி வாய்ந்தது பணபலமே! என்று பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லாத குறைதான், கடவுள் மட்டும் மௌனமாய்.