இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, September 8, 2011

முகம் :

முப்பது வருடம் கழித்து ஒரு இனிய சந்திப்பு, கல்லூரி தோழர்கள் சங்கமிக்கும் சிறு திருவிழா, வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் ஒரு பயணம், ஏதோ கனவுகளோடு கூட்டத்தில் என் கண்கள் யாரையோ தேட, எங்கு நோக்கினும் வயதானவர்கள் கூட்டம், அதோ அங்கே நிற்பது அவன்... இல்லை அவர்...அவர் ஜாடையில் ஒரு யுவன். என் நினைவுகள் பின்னோக்கி செல்ல, அப்படியே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
 
பாடம் படித்ததை விட உன் காதல் கடிதங்கள் படித்ததுதான் அதிகம். கல்லூரி வகுப்புகளில் நேரம் போக்கியதைவிட உன்னுடன் பூங்காவில் பொழுதை போக்கியது தான் அதிகம். படித்தோம் வாழ்க்கையை. மறந்தோம் உலகத்தை. வருடங்கள் உருண்டோடி, இருவரும் மணம் முடித்தோம் வேறு வேறு மணமேடையில். நான் அமெரிக்காவிற்கும் நீ மதுரைக்கும் பறந்தோம்.நான் கலாச்சாரம் தவறாமல் கணவர் பணி செய்து, பிள்ளையிரண்டு பெற்று கடமை ஆற்றியாகிவிட்டது. இடையில் இந்தியா வரவே முடியாத சூழ்நிலை நம் இருவரையும் நிரந்தரமாக பிரித்தது. தொலைதொடர்பு வளர்ந்துவிட்ட இந்நாளில் இருபது வருட பிரிவு பெரிதில்லைதான்! வெறும் டைரி மட்டும் உன் நினைவுடன், முகவரிகள் பல மாறிய பின்பு தொலைந்தது நம் கடித தொடர்பு. நம்மை தொலைத்துவிட்டோம் வாழ்க்கை எனும் சக்கரத்தில்!
 
"ஆன்டி" என்ற அழைப்பு எனை உலுக்க, சுயநினைவுத் திரும்பினேன். "அப்பா இதை உங்களிடம் சேர்க்க சொன்னார்" என்றவன் ஏதோ ஒரு புத்தகத்தை என் கையில் திணித்தான். அது நீ எழுதிய 'சுய சரிதை'. நீ மதுரை கல்லூரி பேராசிரியர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தின் நிறுவனர் என்பதை அறிய முடிந்தது. மற்றபடி கல்லூரி காலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட உண்மையில்லை. உன் மகனிடம் கேட்டேன்" அப்பா எப்படி இருக்கிறார்". அவனின் கைகள் மேல் நோக்கி காட்டின உன் இருப்பிடத்தை.
 
கனத்த மனதோடு அமெரிக்கா திரும்பினேன் உன் 'சுய சரிதையோடு'. சொல்லி இருக்கலாம் உன் மகனிடம் உன் நடத்தையை பற்றி. வெறும் பொழுது போக்கான உன் காதலை பற்றி. மனம் வரவில்லை, உன் பழைய முகத்தை அப்படியே உன் மகனிடம் பார்த்த பின்பு.