தமிழகத்தில் இப்போது இலவசங்களின் அணிவகுப்பு சற்று மும்முரமாகவே இருக்கிறது. எந்த வகையிலும் மக்கள் தானாக சிந்தித்துவிடக்கூடாது என்பதில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றனர். இலவசங்களை வாரி வாரி இறைப்பதால் 'ஓட்டு வங்கி'யில் ஓட்டு குவிந்துவிட போவதில்லை. அதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஒரு நல்ல உதாரணம். இருந்தாலும் அவர்களும் கொடுக்காமல் விடப்போவதில்லை, இவர்களும் வாங்காமல் விடப்போவதில்லை.
'ஒருவனுக்கு மீனை தானமாக கொடுக்காதே, அதற்கு பதில் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு' என்பது உலகவழக்கில் உள்ள தத்துவம். அதுபோல, நம் மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பினை அமைத்து தருவதன் மூலம் அவர்களின் வறுமையை ஒழிக்கலாமே. அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள நல்ல வழியை காட்டலாமே. அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தலாமே. இலவச அரிசி ஏன்? எதற்கு?
படிப்பதற்கு நல்ல பள்ளி இல்லை. அப்படியே நல்ல பள்ளியை கண்டெடுத்தாலும், கல்வி கட்டணம் மலை போல் அழுத்துகிறது. நல்ல தரமான கல்வி, நியாமான கல்விகட்டணம், உலக தரத்திற்கு படத்திட்டம் போன்றவற்றினை அமைத்து மக்களின் 'அறிவுக்கண்'ணை திறக்கலாமே. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்கலாமே. இலவச 'மடிக்கணினி' ஏன்? எதற்கு?
கிராமங்களில் விவசாயம் இல்லை. இயற்கை வளங்கள் இல்லை. வாழ வழி இல்லை. சுகாதாரம் இல்லை. இப்படி பல 'இல்லை'கள் இருக்கும் போது, இலவசங்கள் எதற்கு? ஆயிரம் 'ஏன், எதற்கு'கள் இருக்கும் போது கோடி கோடியாய் பண விரயம் எதற்கு? அவற்றை வேறு நல்ல நோக்கில் பயன்படுத்தலாமே.
சிந்திப்போமா இனியாவது!