இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, August 16, 2011

பிச்சை:

இந்திய திருநாட்டில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்தில் நாமெல்லாம் பெருமை பட்டுக்கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் 'பிச்சை'. ஆம். இந்தியாவில் 'பிச்சைக்காரர்கள்' இல்லாத இடமே இல்லை. இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று இல்லாமல் ஒரே 'இனமாய்' உள்ளனர். பெருமை பட இது போதாதா?  இங்கு பிச்சைக்காரர்களில் எதற்கும் வழியில்லாதவன், கொஞ்சம் இருப்பவன், எல்லாம் இருப்பவன் என்று பலவகை உண்டு. பிச்சையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரையில் குறைக்க முயற்சி செய்யலாம். (நாளை 'வல்லரசு' என்று மார்தட்ட வேண்டுமே).
 
முதல் வகை: சாலையோரம் அனாதையாய், உடம்பெல்லாம் அழுக்கெறி, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, உயிர் வாழ்வதற்கே கையேந்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வயதானவர்கள், பிள்ளையால் கைவிடப்பட்டோர், வழி தவறி வந்தவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இவ்வகையை சார்ந்தவர்கள். இவர்கள் ஆதரவு தேடி அலையும் 'கொடி' போன்றவர்கள். இவர்களிடம் வெறுமனே பரிதாபம் மட்டும் காட்டாமல், ஏதேனும் ஒரு மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தந்து உதவலாம்.
 
இரண்டாம் வகை: மின்சார ரயிலில் இவர்களை பார்க்கலாம். நன்றாக குளித்து, சிகை அலங்காரம் செய்து, ஏதேனும் ஒரு வாத்தியத்துடன் களமிறங்கும் 'பார்வை' இல்லாதோர் இந்த வகையில் அடக்கம். அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கு பொருள் பெற்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு அதே ரயிலில் ஏதேனும் விற்று சம்பாதிக்கும் 'பார்வை' இல்லாதோர் எவ்வளவோ மேல். அவர்களிடம் பொருள் வாங்குவதன் மூலம் நாளைய பிச்சைக்காரர் ஒருவரை குறைக்கலாம். அதே போல் கை, கால், பார்வை அனைத்தும் இருந்தும் வெறுமனே பிச்சை எடுப்பவர்களும் உண்டு. ('ஏதோ ஒரு பாட்டு' - தெலுங்கில் பாடி கொல்பவர்கள்).
 
மூன்றாம் வகை: பள்ளி, கல்லூரி, கோயில், அரசு அலுவலகம் என்று இவர்களை எங்கும் பார்க்கலாம். பள்ளி சிறப்புக்கட்டணம் என்று பெற்றோரை சுரண்டுபவர்கள், கல்லூரி வளர்ச்சிநிதி என்று மாணவர்களை சுரண்டுபவர்கள், தட்சணை என்ற பெயரில் பக்தர்களை நோகடிப்பவர்கள், லஞ்சம் என்ற பெயரில் பொது மக்களை அலைகழிப்பவர்கள் அனைவரும் இவ்வகையை சேர்ந்தவர்கள். முதல் இரண்டு வகையினரால் எந்த ஆபத்தும் இல்லை. பொருள் கொடுக்கவிட்டால் அடுத்தவர்களை நாடி சென்று விடுவர் அல்லது வசை படி செல்வர். ஆனால் இந்த மூன்றாம் வகையினர் மிகவும் ஆபத்தானவர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவர்கள். இவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம்தான் பதில் சொல்லவேண்டும்.
 
இந்த மூன்று வகை மட்டுமில்லாமல் இன்னும் பலவகை 'பிச்சைக்காரர்கள்' உண்டு. பேருந்து மற்றும் ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள், முக்கிய இடங்களில் வரிசையில் நில்லாமல் 'பண' பலத்தால் முன்னே செல்பவர்கள், கலப்படம் செய்பவர்கள், அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கடத்துபவர்கள், வண்டியில் அனைத்தும் இருந்தும் 'ஓவர் ஸ்பீடு' என்று பணம் பறிப்பவர்கள், நடைபாதையில் கடை போட அனுமதித்து 'கமிஷன்' அடிப்பவர்கள், பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள், லஞ்சம் கொடுத்து 'லாபம்' அனுபவிப்பவர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் மூன்றாம் வகையினை சேர்ந்தவர்கள். நாட்டின் வளர்ச்சியை அரிக்கும் 'விஷ' உண்ணிகள். இவர்களை அழிக்காமல் இந்தியா என்றுமே ' வல்லரசு' ஆக முடியாது. வறுமை கோட்டுக்கு புதிய விளக்கம் கொடுத்து 'ஏழ்மையை' வெறும் ஏட்டில் மட்டும் அழித்த இன்றைய ஆள்பவர்கள், ஊழலுக்கு புதிய விளக்கம் கொடுத்து அதற்கு 'நியாய' சாயம் பூசி, இந்தியாவை காகிதத்தில் மட்டும் 'வல்லரசு' ஆக்குவார்கள் போலிருக்கிறது.
 
பிச்சைக்காரர்கள் இல்லா நாடு இந்தியா என்ற புகழை பெற நம்மால் இயன்றதை செய்வோம். வாழ்க இந்தியா. வளர்க ஊழல் மன்னிக்கவும் வளர்க _______ , என்ன சொல்வதென்று தெரியவில்லை (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க).