இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, August 25, 2011

தீண்டாமை:

சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். இன்றும் அந்த ஊரில் 'அவர்கள்' கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. உயர்ந்த சாதி மக்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதியில்லை. அப்படியே படியில் கால் பட்டுவிட்டாலும், உடனே கழுவி விடுகின்றனர். ஆனால் வயல்களில் வேலை செய்வது, தோட்டங்களில் காவல் காப்பது, மற்ற எடுபிடி வேலைகள் செய்வது 'அவர்கள்' தான்.அவர்களின் உழைப்பு வேண்டும். உறவு வேண்டாமா?
 
அவர்களுக்கு தனி கோயில் உண்டு. அவர்களே பூஜை செய்துகொள்வர். இப்படி பல விதமான கொடுமைகள் இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது. உள்ளூர் கோயில்களில் 'தீட்டு'. அதுவே திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற பெரிய கோயில்களுக்கு பொருந்தாது. கடவுளுக்கும் 'தீட்டில்' நம்பிக்கை உண்டோ? உள்ளூர் தேவதைகளுக்கு மனிதர்கள் விதித்த 'எல்லைகள்' உண்மைதானோ? தன் எல்லைக்குள் இருக்கும் 'அவர்கள்' தன்னை வெளியில் இருந்துதான் வணங்கவேண்டும், ஆனால் வெளியூர் கோயில்களுக்குள் செல்ல அனுமதி உண்டு. ஆண்டவா! என்ன இது. உன் சட்டத்திலும் 'ஓட்டை'. தண்டனை (தாழ்ந்த குலத்தில் பிறந்ததற்கு) என்றால் பாரபட்சமின்றி அல்லவா இருக்க வேண்டும்.
 
'Cloud Computing' காலத்திலும் 'தீண்டாமை'. மூடர்களே! உங்கள் சுயநல கூட்டில் இருந்து வெளியே வாருங்கள். உலகம் எவ்வளவு அழகு. அதனை 'அவர்களும்' அனுபவித்துவிட்டு போகட்டும். ஏன் ஒரவஞ்சனை? இயற்கை உனக்கென ஒன்று, அவர்களுக்கு ஒன்று என தனியே எதையும் படைக்கவில்லை. நீயே ஏன் முட்டுக்கட்டை போடுகிறாய். உனக்கேது அந்த உரிமை?
 
காலம் நிச்சயம் நல்ல வழியை காட்டும் என்ற நம்பிக்கையுடன் ஆண்டவனிடம் ஒரு விளக்கம் வேண்டுகிறேன், "ஒருவனுக்கான அந்த ஒருத்தியை ஏன் அவன் சாதியிலேயே படைக்கிறாய். அப்படி என்றால் சாதியையும் மதத்தையும் நீதான் படைத்தாயா? ஆம் என்றால், ஏன்? பதில் சொல்!"