இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, June 20, 2012

நிஜ வாழ்க்கை அற்புதங்கள் :

           நேற்று எனது சக ஊழியருடன் உரையாடி கொண்டிருந்தபோது எனக்கும் அவருக்கும் 'கடவுள்' இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் கூறிய (அவருடைய) சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் கூறியதிலிருந்து சில...
 
            *** 1987 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 31ந்தேதி நானும் எனது மனைவியும் புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு, திருப்பதிக்கு செல்ல ஆயத்தமானோம். அன்று முற்பகல் அரசு பேருந்தில் ஏறி பயணித்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் சென்ற பேருந்து வழியிலேயே பழுதானது. இதனை 'அபசகுனம்' என்றெண்ணி திரும்பிவிட நினைத்தோம். ஆனால், மனதினை தேற்றிக்கொண்டு, அப்பொழுது ஏற்பாடு செய்யப்பெற்ற மாற்று பேருந்தில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
 
             திருப்பதி வந்தடைந்த உடன், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினோம். கோவிலுக்கு போகும் வழியில் மொட்டை போட்டு பின்பு அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு தரிசனம் பெற கோவில் நோக்கி நடை போட்டோம். அங்கு சென்றதும் நாங்கள் கண்ட காட்சி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது இன்னும் மூன்று நாட்களுக்கு 'முன்பதிவு' முடிந்துவிட்டது. இனி 03.01.1988 அன்று காலை தான் அனுமதி என்று ஒரு அறிவிப்பு பலகை அங்கே வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் என் மனைவி, " அதுதான் அப்பவே அபசகுனம் ஆச்சே" என்று வருத்தப்பட, அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன்.
 
             அப்பொழுது தரிசனம் வேண்டி வந்த பக்தர்கள் கூட்டம் எங்களோடு சேர்ந்துகொள்ள, ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அவ்வழியே வந்த காவலர் ஒருவர், "என்ன இங்கே கூட்டம், உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்" என்று சற்று கோபம் தோய்ந்த குரலில் வினவ, உடனே நான் " நானும் என் மனைவியும் கடவுள் தரிசனதிற்காக சென்னையிலிருந்து வருகிறோம்" என்று கூறி அறிவிப்பு பலகை விஷயத்தையும் கூறினேன். அதற்கு அவர் " தரிசனம் பார்க்க வேண்டுமென்றால் உள்ளே போக வேண்டியதுதானே, வெளியே ஏன் நிற்கிறீர்கள்" என்று சொன்னார். நானோ குழப்பத்தோடு என் பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்தபடியே, "இதோ இவர்களும் உள்ளனர்" என்க, அவர் உடனே "அவர்களுக்கும் தான்" என்றார். நான் உடனே பின்னால் திரும்பி இந்த செய்தியினை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கிறேன், அந்த காவலரை காணவில்லை.ஆச்சர்யம்! அங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் இல்லை, கதவிலிருந்த பூட்டும் இல்லை. அங்கே அனுமதி சீட்டு வழங்குபரை தவிர வேறு யாருமில்லை. அவரிடம் சீட்டு பெற்று  நாங்கள் அனைவரும் உள் சென்று 'புத்தாண்டு' அன்று கடவுள் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். ***
 
            பொறுமையாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தவர் என்னை நோக்கி " இப்பொழுது சொல்லுங்கள், கடவுள் இருக்கிறாரா? இல்லையா?. என்னிடம் எந்த பதிலும் இல்லை. உங்களுக்காவது பதில் தெரியுமா?