இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, June 28, 2012

நமக்கான 5 நிமிடங்கள் :

                 நாம் நமது தினசரி வாழ்க்கையில் 99% நேரத்தினை அடுத்தவர்களுக்காக செலவிடுகிறோம் ( அனைவருக்கும் பொருந்தாது ) அல்லது செலவிடுது போல் அலுத்துக்கொள்கிறோம். ஆனால் நமக்கான நேரத்தை பயன்படுத்தாமலேயே வீணடிக்கிறோம். கொஞ்சம் தலையை சுற்றி மூக்கை தொடுவதை போல் தோன்றுகிறதா? இதோ எளிமையாக எனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
                 எனது நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். அந்த நிறுவனம் 'காலம் தவறாமை'யை மிகவும் கடுமையாக பின்பற்றிவரும் ஒரு நிறுவனம். காலை பணிநேரத்திற்கு தாமதமாக வர 5 நிமிடம் மட்டுமே அனுமதி. அதற்கு ஒரு நிமிடம் கூடினாலும் 1 மணி நேரத்திற்கான சம்பளம் பிடித்துக்கொள்ளப்படும். அதுவே 15 நிமிடங்கள் என்றால் 2 மணி நேரங்கள், 30 நிமிடங்கள் என்றால் அரைநாள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஒருவர் விடுப்பு எடுத்தால் அன்றைய சம்பளம் அவ்வளவுதான். இவ்வளவும் மிகவும் கடினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 
                இவர் தினமும் தனது பைக்-ல் பணிக்கு செல்வது வழக்கம். வண்டியை சரிவர பழுது பார்க்காமல் விட்டதால் அதன் நிலைமை மிகவும் மோசமான நிலையில். ஆனாலும் நண்பர் அதை பற்றி கவலை கொள்ளவில்லை. காலையில் எழுவார், தயாராகி வெளியில் வந்து வண்டியை எடுத்து கிளம்பிவிடுவார். மாலை திரும்பியதும் அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு அப்படியே மறந்துவிடுவார். பெட்ரோல் போடுவதோடு சரி. ஒரு நாள் காலை வழக்கம் போல் வண்டியை எடுத்து 'ஸ்டார்ட்' செய்ய அது முரண்டு பிடித்தது. வண்டியை விட்டு பேருந்தில் ஏறி காலதாமதமாக பணிக்கு சென்றார். ஒரு நாள் இருநாள் அல்ல. இப்படி பலநாட்கள். தொடர்ந்து காலதாமதமாக வந்ததால் அவருக்கு வர வேண்டிய 'பதவி உயர்வு' மற்றும் சம்பள உயர்வும் மறுக்கப்பட்டது.
 
               தினமும் ஒரு '5' நிமிடங்கள் அந்த வண்டிக்காக இல்லையில்லை 'நமக்காக' செலவழித்திருந்தால்... இவ்வளவு அவஸ்த்தை இல்லை. காலையில் வண்டியை எடுத்து சரிபார்த்து வைத்தால் கடைசி நேர அவசரம் குறையும். வண்டி பழுது என்று முன்பே தெரிந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி பேருந்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் அலுவலகம் செல்லலாம். அந்த '5' நிமிடம் இன்று இவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
 
              இப்பொழுதெல்லாம் எனது நண்பர் கண் விழிப்பது தனது 'வண்டியின்' முகத்தில் தான். நன்றாக துடைத்து, எண்ணெய் எரிபொருள் சரிபார்த்து, ஒரு முறை 'ஸ்டார்ட்' செய்து பரிசோத்தித்த பின்னரே காலை கடன். வாரம் ஒருமுறை சக்கரத்தில் காற்றின் அழுத்தம் சரிபார்த்தல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வண்டியை பழுது பார்த்தல் என்று பொறுப்புடன் செய்கிறார். இப்பொழுது 'கால தாமதம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
            அதனால் தோழர்களே! நமக்கான அந்த '5' நிமிடங்களை நிச்சயம் வீணடிக்காமல் பயன்படுத்தி பயன் பெறுவோம். வெறும் பதவி உயர்வுக்காக மட்டுமென்று சொல்லவில்லை. நம் நண்பர்கள், சொந்தங்களை இழக்காமல் இருக்கவும் தான். நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு காலதாமதமாக சென்று 'வழியில் பைக் படுத்திவிட்டது' என்று கூறிப்பாருங்கள், நான் சொல்வது புரியும்.