சமீபத்தில் கோடை விடுமுறைக்கு எங்களின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். விடுமுறையில் கிராம அழகை ரசித்தது மட்டுமின்றி கிராம மக்களிடம் இன்றும் காணப்படும் ஒற்றுமையை கண்டு ரசித்து திரும்பினோம். அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள இந்த பதிவு.
ஒரு வளர்பிறை தினத்தன்று ஊரிலுள்ள பெரியவர்கள் ஒன்று கூடி அம்மனுக்கு 'கூழ்' ஊற்றும் திருவிழா நடத்த திட்டமிட்டனர். அது ஊர்மக்களுக்கு தெரிவிக்கபெற்று மறுநாள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்பொழுது ஊர் பெரியவர் திருவிழாவுக்கு செய்யவேண்டிய வேலைகள் மற்றும் அவற்றுக்குண்டான செலவுகளை பட்டியலிட்டார் (Planning). பின்பு செலவுத்தொகையை பங்கிட்டு, வீட்டிற்கு இவ்வளவு என்று வசூல் செய்ய முடிவடுத்தனர் (Budgeting) (அனைவரும் சமமான தொகையை மட்டுமே செலுத்தவேண்டும், நன்கொடைக்கு தடை).
பண விஷயம் முடிந்து வேலையை பிரித்துக்கொடுக்க முனைந்து ஒரு பெரியவர் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக்கொடுத்தார் (Delegation of Authority & Responsibility). அப்பொழுது இடைமறித்த பெரியவர் ஒருவர் சென்ற வருடம் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி, ஓரிரு இளைஞர்களின் பொறுப்புகளை மாற்றினார் (Appraisal, Feedback and Corrective Action). பின்பு விழாத் தேதி குறிக்கப்பெற்று அனைவரும் கலைந்துசென்றனர் (Goal Setting).
முதல் வேலையாக 'காப்பு' கட்டப்பட்டது (Health & Safety Environment) (மக்கள் பெரும்திரளாக கூடும் திருவிழா, அதனால் வெளியூரிலிந்து வருபவர்கள் மூலம் நோய் பரவாமல் இருக்க இந்த காப்பு). திருவிழாவிற்கு முதல்நாள் கரகம் ஜோடித்து ஆரம்பகால பூஜைகள் நடந்தேறின. மறுநாள் (கூழ் ஊற்றும் அன்று) காலையிலேயே மக்கள் அனைவரும் வீடு வாசல் சுத்தம் செய்து வாசலில் தண்ணீர் தெளித்து ஊர்வலத்திற்கு தயாரானார்கள். நல்ல நேரம் பார்க்கபட்டு ஊர்வலம் துவங்கியது. வீட்டிற்கு வீடு பூஜை செய்யப்பெற்று, வீட்டிலிருந்து ஒருவர் கூழ் குடத்துடன் ஊர்வலத்தில் சேர்ந்து கோயில் நோக்கி செல்ல துவங்கினர்.
கோவிலை அடைந்ததும் கூழ் கூடங்கள் பூஜைக்காக 'அம்மனுக்கு' முன்பாக வைக்கப்பெற்று, பூஜை முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்பட்டன. ஏழைகளும், பக்தர்களும் வரிசையில் நின்று அம்மானை தரிசித்து 'கூழ்' பெற்று சென்ற காட்சி, அந்த அம்மானே நேரில் வந்து கூழ் குடித்ததை போல் இருந்தது. ஊரில் உள்ள அனைவரும் பசியாறி, குளிர்ச்சியுற்று வாழ்த்தி சென்றது மனதை நெகிழ்ச்சியுற செய்தது.
மாலை அம்மனுக்கு பூஜை முடிந்ததும், ஊர்த்தேர் உற்சவ மூர்த்தியுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் ஒருபுறம், வான வேடிக்கை ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்புகள் ஒருபுறம், அலங்காரப்பொருள் கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களின் கடைகள், துணிக்கடைகள் என்று ஊரே ஒரு 'நகர கடைவீதி' போல் காட்சியளித்தது. எங்கு நோக்கினும் மகிழ்ச்சி அலைகள். யாரை பார்த்தாலும் புன்னகை. அப்பப்பா! சொர்க்கத்திற்கு வந்துவிட்ட உணர்வு. ஒருபக்கம் அம்மனுக்கு 'அசைவ' படையல், இன்னொரு பக்கம் அன்னதானம், தெருக்கூத்து என்று எங்கு நோக்கினும் கூட்டம். சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வெளியூருக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடியது நிச்சயம் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
இந்தியாவின் உயிர் நிச்சயம் 'கிராமங்களில்' தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட நாள் என் வாழ்நாளில் பொன்னாள். இதில் ஒரு விஷயம் பார்த்தீர்களா. நாம் 'மேலாண்மை உத்திகள் ' (Management technique) என்று குறிப்பிடும் அனைத்தும் அங்கு அதிகம் படிக்காத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. படித்துவிட்டு ஆட்டம் போதும் பலர் நிச்சயம் கற்றுக்கொள்ள 'கிராமத்தில்' ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது. முடிந்தால் தோழர்களே உங்கள் சொந்த கிராமத்திற்கு இல்லையென்றால் நண்பர்கள் கிராமத்திற்கு செல்லுங்கள். இன்றும் உயிரோடிருக்கும் 'கிராம' கலாச்சாரத்தை அனுபவித்து மகிழுங்கள்.