சில நாட்கள் முன்பு மின்தொடர் வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. அதில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு வயதான ஜோடி, பயணிகள் ஏறுமிடத்தில் அமர்திருந்தது. அதில் அந்த பெண்மணிக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். பெரியவருக்கு சுமார் 85 வயதிற்கு மேலிருக்கும். அந்த தள்ளாத நிலையிலும் தான் மனைவியை மடிமேல் படுக்க சொல்லி, ஆதரவாய் அவர்களின் தலையை வருடியவாறு வந்தார். வண்டியில் அதிக கூட்டமில்லை என்பதால் அவர்களுக்கு தொந்திரவு ஏதும் ஏற்படவில்லை.
மெதுவாக பேச்சு கொடுத்ததில், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதாகவும், தங்களுக்கு தாங்கள் மட்டுமே துணை என்றும், அதில் ஒருவருக்கு எதேனும் ஆகிவிட்டால் உலகில் உயிர் வாழ மற்றவருக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் பெரியார் புன்னகை பூத்த முகத்துடனே சொன்னார். ஆனால் முடிக்கும் பொது அவரால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கணவன் கண் கலங்குவதை கண்ட அப்பெண்மணி அவருக்கு ஆறுதல் சொல்லி, அவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டார். அருகில் இருந்த அனைவரும் சிறிது நேரம் செய்வதரியாது நின்று இருந்தோம்.
இறங்க வேண்டிய இடம் வந்தது. அந்த பெண்மணியால் நடக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத வயதிலும் தன் மனைவியை தூக்கிக்கொண்டு இறங்கிய அந்தப்பெரியவரின் மன உறுதியை பார்த்து வாயடைத்து போனேன். நிச்சயம் 'கடவுள்' துணை இருப்பார் என்று தன் மனைவியை தேற்றிக்கொண்டே அவர் சென்றதை பார்த்துக்கொண்டே என் பயணத்தை ஒருவித மனபாரத்துடன் தொடர்ந்தேன்.
திருமணம் முடிந்து மறுநாளே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இன்றைய தலைமுறைக்கு, காதல் என்றால் என்னவென்று எப்படி சொல்லி புரியவைப்பது?
நீங்களாவது சொல்லுங்களேன் 'காதல்' என்றால் என்னவென்று?