சமீபத்தில் கலெக்டர் ஒருவர் தனது பெண் குழந்தையை அரசினர் பள்ளியில் சேர்த்ததை செய்தித்தாளில் படித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவர் மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொண்டது அவருடைய மன முதிர்ச்சியை காட்டுகிறது. அரசு பள்ளிகள் ஏழைகளுக்கு மட்டும் தான் என்பதை உடைத்தெறிந்து, நல்லதொரு விஷயத்திற்கு வித்திட்டுள்ளார். அவருடைய குழந்தையும் அதை ஏற்று மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சத்துணவு சாப்பிட்டதையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஒரு வேதனைக்குரிய செய்தி என்னவென்றால் ஒரு தமிழன், ஒரு தமிழ் பள்ளியில் தன் குழந்தையை சேர்ப்பத்தை ஏதோ உலக அதிசயம் போல ஊடகங்கள் பறைசாற்றியதை 'நம் தமிழ் மண்ணின் பெருமை இப்படியா சிறுத்து போய்விட்டது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயமல்லவா இது' என்று நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. எப்படியோ ஒரு அரசு பதவியில் இருக்கும் ஒருவருக்கு, தன் பிள்ளையை 'அரசினர் பள்ளி'யில் சேர்க்கும் எண்ணம் வந்ததே அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் மற்றும் ஒரு சிறிய பூச்செண்டும் கொடுக்கலாம். இதில் யோசிக்க வைத்த விஷயம் என்னவென்றால் அரசு அலுவலர்களே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்பதே.
எனது ஐயம் : ஒரு அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் / ஆசிரியை / இதர அலுவலர் யாருமே தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்ப்பதில்லை ( எங்கேயாவது ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம் ). தான் பயிற்றுவிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்காத ஆசிரியர்கள், மற்ற பிள்ளைகளுக்கு எப்படி மிக சிறந்த 'ஏணி' யாக இருக்க முடியும்? சிந்திப்பார்களா இனியாவது?