எங்கள் அலுவலகத்தில் யாரேனும் நீண்ட விடுப்பில் சென்றாலோ அல்லது பிரசவ விடுப்பில் சென்றாலோ, அப்பணிகளை செய்ய தற்காலிகமாய் ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்களை வேலைக்கு அமர்த்துவதுண்டு. அவ்வாறு புதியதாய் பணியில் சேர்ந்த சிலரில் ஹன்சிகாவும் அடக்கம். நல்ல திறமைசாலி. வேலையில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் செயல் பட்டாள்.
அலுவலகம் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். அவள் சாலையின் மறுபுறத்தில் நின்றிருந்தாள். நான் முதலில் பேருந்தில் ஏறினாலோ அல்லது அவள் முதலில் பேருந்தில் ஏறினாலோ ஒருவரை ஒருவர் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கையில் பரஸ்பரம் ஒரு புன்னகையை பரிமாறி கொள்வதுண்டு. ஒரு நாள் அவளை அலுவலக கேண்டீனில் காபி சாப்பிட அழைத்தேன். மறுப்பேதுமின்றி வந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு இருக்கைக்கு திரும்பி விட்டோம். இவ்வாறு பல நாட்கள் சென்றன. இதை கவனித்த என் சக ஊழியர் ஒரு நாள் இது விஷயமாக அவளிடம் வம்பிழுக்க, விஷயம் விபரீதமானது.
பின்பு அவள் என்னிடம் பேசுவதுமில்லை. பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கொள்ள எனக்கு கோபம் கோபமாய் வந்தது. அவளிடம் கேட்டே விட்டேன். பதிலேதும் சொல்லாமல் வெடுக்கென்று சென்று விட்டாள். நாட்கள் நகர்ந்தன. அவளின் ஒப்பந்தம் முடியும் நாளும் வந்தது. எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்ததால், அன்று சிறிது காலதாமதமாகவே புறப்பட்டேன். அன்று அவள் எதிர் புறத்தில் நின்றிருந்தாள். காத்திருந்தாள் என்றே சொல்லலாம். அவளை கவனிக்காததுபோல் பேருந்தில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து, அவளை பார்த்தேன். அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை என்னால் கவனிக்க முடிந்தது. அது வெறும் கண்ணீர் மட்டுமல்ல என்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.