சமீப நாட்களாக இந்தியாவையே குலுக்கி கொண்டிருந்த விஷயம் தனுஷின் ' ஏன் இந்த கொலவெறிடி ' என்ற பாடல் (பாடல் என்றே வைத்துக்கொள்வோம்). சிறியவர்கள், இளைஞர்கள் என்று அனைவரின் வாயிலும் 'கொலவெறி' தான். அப்படி என்னதான் இருக்கிறது என்று யூட்யூப் - இல் தட்டினால் பாடல் வீடியோவுடன் பார்க்கமுடிந்தது. தங்லீஷ் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏதோ ஒரு இங்கிலீஷ் உபயோக பட்டிருக்கிறது. பக்கத்திலேயே ஒரு குழந்தை பாடிய ' கொலவெறி' யையும் வெளியிட்டிருந்தனர். ஏதோ 'rhyms' போல குழந்தை என்ன அழகாக பாடுகிறது. பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மெட்டுக்காக அமைக்கபெற்ற போலி பாடல் வரிகள் தான் என்றாலும், இளைஞர்களை மையப்படுத்தி வருவதால் கொஞ்சம் ரசிக்கும் படி உள்ளது. ராகம், தாளம், அது இதுவென்று அலைபவர்களுக்கு நிச்சயம் இந்த பாட்டு பிடிக்க வாய்ப்பில்லை. குளியலறையில் பாடும் பாடலாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சில சமூகவலைதளங்கள் மூலமாக தான் இத்தனை 'அக்கபோரும்' என்று புலம்புபவர்களும் உண்டு.
இவ்வளவு நடந்தாலும் தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கும் 'தனுஷை' பாராட்டலாம். தொடரட்டும் தமிழ் மேல், தமிழ் இசை மேல் அவருக்கு இருக்கும் 'கொலவெறி'.