இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 29, 2011

ஓட்டு போட்டால் மட்டும் போதுமா?

சமீப 'தானே' புயல் ஒரு கலக்கு கலக்கிவிட்டு போயிருக்கிறது. எங்கு நோக்கினும் தண்ணீர். சாலை, வீதி, வீடு என்று அனைத்து இடங்களிலும் மழை நீர் நிரம்பி வழிகிறது. சாக்கடை நீர் மேலெழும்பி மழை நீருடன் கலந்து 'நோய்' பரப்பிக்கொண்டிருக்கிறது. சற்றே தொலைக்காட்சியை உயிரூட்டி செய்தி அலைவரிசையை நாடினேன். அவர்கள் சாதாரணமாகவே அனைத்தையும் மிகைப்படுத்துவார்கள். இப்பொழுது கேட்கவே வேண்டாம். பிரச்சனைகளை உடனுக்குடன் வெளி சொல்வதற்கு மட்டும் இன்றைய ஊடகங்கள்.
 
செய்திகளுக்கிடையே நேரடி அறிக்கை அளித்த அனைத்து நிருபர்களும் ஏனோ மக்களின் பிரச்சனைகளை காட்ட மறுத்தனர். 'நைட்டி' அணிந்த பெண்கள் தங்களின் வாக்குமூலத்தில் 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' என்ற ஒரே முறையீட்டை வைத்தனர். யாரோ சொல்லி கொடுத்து பேசியதை போன்றதொரு உணர்வு. அது ஒருபுறமிருக்க, காமிரா கையால்பவர் வெறுமனே அலைகளையும், கடலையுமே காண்பித்து பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். நம் மேல் அவருக்கு என்ன 'கொலவெறியோ'.
 
ஊடகங்கள் தங்களின் கடமையை மறக்கின்றன. ஓட்டு போடுவதோடு நமது கடமை முடிந்துவிடுகிறது. யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப்போக்கு ஏன்? 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' - என்று வெறுமனே அடுத்தவர் மேல் பழி போட்டு நம் 'கடமையை' சரிவர செய்த திருப்தியை அடைகிறோம். அந்த 'யாரும்' என்பது யார் என்று குறை கூறுபவர்களுக்கும் தெரியாது, அதனை படம் பிடிப்பவர்களுக்கும் தெரியாது. ஏதோ செய்தி, ஒளிபரப்பினால் லாபம் வரும் என்று வெறும் வியாபார நோக்கே இங்கு தலை தூக்கி நிற்கிறது.
 
ஊடகங்கள் அந்த 'யாரும்' என்பதை வெளிக்கொணர வேண்டாமா? மக்களின் குறையை காண்பிக்கும் இவர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களை சந்தித்து 'என்ன செய்யப்போகிறீர்கள்?' என்ற கேள்வியெழுப்பி, காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வழி காட்டவேண்டாமா? அதை விடுத்து 'வீடுகளில் கடல் நீர் புகுந்தது', 'மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்' என்று பிளாஷ் செய்தி போட்டு தங்களின் வியாபார லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
 
'யாரும்' வந்து பார்த்துவிட்டால் மட்டும் நம் குறை தீர்ந்து விடுமா? ஏன் நமக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. நமக்கு நாமே ஏன் தோள் கொடுத்துக்கொள்வதில்லை. யாரோ ஒருவரின் 'பார்வை' மட்டும் நமது பிரச்சனைக்கு தீர்வல்ல. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, இருப்பதை பகிர்ந்து ஏன் வாழக்கூடாது. ஒற்றுமையாக சென்று தேவைகளை அரசிடம் (ஆகிம்ஸா வழியில்) ஏன் முறையிடக்கூடாது. கடந்த மூன்று நாட்களாக ஒரே செய்தி, ஒரே பிரச்சனை, ஒரே குமுறல். விடியல் தான் வந்தபாடில்லை.
 
ஊடகங்களே மக்களின் பிரச்சனையை வெளியுலகுக்கு காட்டுவது மட்டும் உங்கள் கடமை அல்ல. அதற்கான தீர்வை எடுத்துக்காட்ட வேண்டியதும் உங்கள் கடமை தான்.