நமது அன்றாட வாழ்க்கையில் தமிழ் போர்வையில் உலா வரும் பிறமொழி வார்த்தைகள் தமிழின் தன்மையை மாற்றி விடுகின்றன. அவை பெரும்பாலும் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சி செய்திகள் வழியே பரவுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. பிற மொழி சொற்கள் பரவாயில்லை, சில சமயங்களில் ஆண்பால் பெண்பால் பிரச்சனைகள் வரும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். உதாரணமாக குங்குமம் இதழில் வெளிவரும் கைத்தொழில் சார்ந்த கட்டுரையில் 'இதில் இவர் நிபுணி' எழுதுவார்கள். நிபுணர் என்பது ஆண்பால் என்பது எனக்கு இதுவரை தெரியாது. நண்பருக்கு பெண்பால் நண்பி மற்றும் வில்லனுக்கு பெண்பால் வில்லி என்றும் பிறகே என் சிறுமூளையால் புரிந்துகொள்ள முடிந்தது.
தலைப்பில் எதுகை, மோனை வேண்டுமென்று பிறமொழி கலப்பில் ஈடுபடும் எழுத்தாளர்கள் பலர். 'இன்று ஸ்டிரைக் வாபஸ்' இது முதலிடமென்று மார்தட்டிக்கொள்ளும் தினசரி செய்திதாள் தலைப்பு. அழகிய தமிழை வளர்க்கிறோம் என்று மிக அருமையாக 'கெடுக்கும்' செயல் கண்டிக்கப்படவேண்டியது. பத்திரிக்கை சுதந்திரம் என்று ஒரு மொழியை சிறுக சிறுக கொல்வது எந்த விதத்தில் நியாயம். சமானியனை அணுக அவன் மொழியில் செய்தியை தருவதே சிறந்தது என்று வாதிடும் மனிதர்களும் உண்டு. அவர்களை போலவே நீங்களும் தவறாகவே சொன்னால் அவர்களுக்கு தன்னுடைய தவறு எப்பொழுது புரிவது?
மொக்கை, களாசல், ஃபிகர், இவை இன்றைய இளைய தலைமுறையின் புதுத்தமிழ். 'அந்த ஃபிகர் மொக்கை மச்சான்', 'ஃபிலிம் மொக்கைடா', 'உடம்பு ரொம்ப பேஜார் பண்ணுது' இவை படித்த அனைவரும் பேசும் செந்தமிழ். சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் தமிழ் செத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயன் அவன் மொழிக்கு இடையில் தமிழ் கலப்பதில்லை. ஏன்? தமிழனாய் பிறந்து 'ஆங்கிலம்' சரளமாக பேசுபவர்கள் மறந்தும் இடைச்செருகலாக தமிழை பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் பேசும் பொழுது மட்டும் பல மொழிகளின் கலப்பு ஏன்?
தமிழுடன் கலந்துவிட்ட சமஸ்கிருத வார்த்தைகளை பற்றி பேசவில்லை தோழர்களே. அது முடிவில்லா பிரச்சனை. என்னுடைய இந்த பதிவில் எத்தனையோ சமஸ்கிருத வார்த்தைகள் எனக்கு தெரியாமலேயே நுழைந்துள்ளன. நமது அடிப்படை கல்வி அப்படி. எடுத்துக்காட்டு: ஆரோக்கியம், தினம், பத்திரிக்கை, வார்த்தை - இப்படி பல.
அர்த்தமில்லா வார்த்தைகள் பற்றிய எனது குமுறல் எரிமலை போல் ஒவ்வொரு நாளும் என்னுள் கொதித்துக்கொண்டே இருக்கிறது.
(பி.கு. ஆரோக்கியம் - நலம், தினம் - நாள், பத்திரிக்கை - செய்தித்தாள், வார்த்தை - சொல். இதன் மூலம் 4 தமிழல்லா வார்த்தைகளை அடையாளம் காட்டிய திருப்தி)