ராமு உள்ளே நுழையும்போதே அப்பாவின் அதட்டல் தடுத்து நிறுத்தியது. விடுமுறையன்று நண்பர்களுடன் விளையாட சென்றதன் விளைவு. அதுவும் கிரிக்கெட் என்றால் சோம்பேறிகளின் விளையாட்டு என்று இன்னுமும் கொஞ்சம் அனல் அதிகம் பறக்கும். வழக்கம் போல் அல்லாமல் இன்று தண்டனை வேறு விதமாய் வந்தது பள்ளிக்கு செல்ல கூடாது என்று. சைக்கிள் சாவியும் பறிக்கப்பட்டது. இது என்ன புதுக்கதை என்று கேட்ட அம்மாவின் வார்த்தைகளும் காற்றில் கரைந்து போயின.
ஒன்று, இரண்டு என்று நாட்கள் நகர்ந்தன, ஆனாலும் அப்பாவின் கோபம் தணிந்தபாடில்லை. இன்று நடந்தாவது பள்ளிக்கு சென்று விடலாம் என்று புத்தக பையை எடுத்தவன் அப்பாவின் உருட்டு கண்களை பார்த்து மிரண்டு போய் அப்படியே வைத்துவிட்டு திண்ணையிலேயே அமர்ந்து போனான். மறுநாள் அப்பா இல்லாத நேரம் பார்த்து நடந்தே போய்விடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டான். நாட்கள் நகர நகர அப்பாவின் கோபமும் தணிந்தது. இப்பொழுது ராமு திரும்பவும் சைக்கிள் எடுத்து பள்ளிக்கு சென்று வருகிறான். கிரிக்கெட் என்றால் காத தூரம் ஓடி விடுவான். சும்மாவா, ஒரு மாதம் வெய்யிலில் 15 கி.மி. நடந்து பள்ளிக்கு சென்றவனாயிற்றே.
"மீ.. நான் வெளியில் போறேன்" கிறீச்சீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் பறக்கும் இரண்டாவது பேரனின் குரல்கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டார் ராமு. என்ன மாமா வாக்கிங் போகாலயா? அன்புடன் கேட்ட மருமகளிடம் "இதோ கிளம்பிட்டேன்மா" என்றவாறு பக்கத்து பூங்கா நோக்கி நடக்க ஆரம்பித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் மாதவனின் தாத்தா ராமு.