இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, May 12, 2011

கனவு காண்கிறேன் – பலிக்குமா ?

    இந்தியா – வளம் கொழிக்கும் தேசம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் முன்னிலை வகிக்கும் நாடு நாம் இந்தியா. இப்படியெல்லாம் மார்தட்டிக்கொள்ள ஆசைதான். ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லையே (!). என்ன செய்ய ? ஊழல் பெருச்சாளிகள் இங்கிருந்த வளங்களை எல்லாம் சுரண்டி ஸ்விஸ் வங்கியில் அல்லவா சேர்த்திருக்கின்றன. அவற்றை மீட்க முடியுமா? நமது நாடு வளம் பொருந்திய நாடாக, பலம் பொருந்திய நாடாக மாறுமா ? இல்லை இவை அனைத்தும் வெறும் கனவாகவே போய்விடுமா? எல்லாம் 'ஆண்டவனுக்கு' தான் வெளிச்சம்.

 

       அன்று வெள்ளையனை வெளியேற்றி அனுப்பிவிட்டு சந்தோசமாய் கூத்தாடினோம் – இனிமேல் நம் வீட்டை நாமே சுரண்டலாம் என்று. சுரண்டியதை வீட்டு மூலையில் வைத்திருந்தாலும் பரவாயில்லை. யாரை வெளியேற்ற அன்று போராட்டம் நடத்தினோமோ அந்த அன்னியரிடமே கொடுத்து வைத்துள்ளோம். சுதந்திரத்தின் பயனை நன்றாக அனுபவிக்கிறோம்.

 

       வருமான வரி ஏய்ப்பு என்று ஒரு பூதம் இன்று நம் நாட்டில் உலா வந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.. ஊழல் பெருச்சாளிகள் ஒரு வகை என்றால், இவர்கள் இன்னொரு வகை. நேர்மையாக வாங்கும் சம்பளத்திற்க்கு வரி கட்ட என் தயங்குகிறோம். வரும் வருமானத்தை மறைத்து ஏன் நாட்டின் வளர்ச்சியை குலைக்கிறோம். இது நம் தேசமல்லவா. நாளை ஒரு பிரச்சனை என்றால் அது நமக்கும் சேர்த்துதானே வரும். பிரச்சினை என்று வந்தால் வெளிநாட்டில் வேலை செய்யும் தன் சொந்தங்களோடு சென்று தங்கிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு சந்தோசமாய் சுற்றி திரியும் இது போன்ற தேச துரோகிகளை என்னவென்று சொல்வது.

 

       உலக வங்கியில் கடன். சகோதர நாடுகளிடம் கடன். நட்புறவு நாடுகளிடம் கடன். இப்படி கடன் மேல் கடன் வாங்கி சுவிஸ் வங்கியை நிரப்புவது எதற்காக? நாடு கடனாளியாய் இருக்க நாம் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் ஏன்? கடனை அடைக்க தலையை கொடுக்க சொல்லவில்லை. இனியும் நம் நாடு கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் வேண்டுகிறோம்.

 

       போனது போகட்டும், இனிமேலாவது

 

1.   லஞ்சம் கொடுக்காதே / வாங்காதே.

2.   ஊழல் செய்யாதே / துணை போகாதே

3.   வரி ஏய்ப்பு பசெய்யாதே

4.   வளங்களை கருப்பு பணமாய் பதுக்காதே

5.   நாட்டை சுரண்ட நினைக்காதே

 

என்று உங்கள் பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுங்கள். தேசிய கீதமாய், தாய் மொழி வாழ்த்தாய், ஒரு நல்ல குடிமகனின் உறுதிமொழியாய் எண்ணி இதனை பின் வரும் சந்ததிகளாவது பின்பற்றட்டும். இன்று இல்லை என்றாலும் நாளை நம் இந்தியா வளம் பொருந்திய நாடாகவும், பலம் பொருந்திய நாடாகவும் திகழட்டும்.   

 

       கனவு காண்கிறேன் – பலிக்குமா ?