இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, July 19, 2012

படிக்கும் பழக்கமும் புத்தகங்களும்:

         நண்பர் ஒருவர் ஒருநாள் ஒரு பழைய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். "என்ன நண்பரே! திடீர் பழக்கம்? என்று நான் வினவியதற்கு விளக்கமாக ஒரு கதா காலட்சேபமே நடத்திவிட்டார். அவர் சொன்னதிலிருந்து சில வரிகள் மட்டும் இதோ உங்களுக்காக.
 
*** போகின்ற போக்கை பார்த்தால் தினசரி செய்திதாள்களையோ, வார மற்றும் மாத இதழ்களையோ படிக்கும் முறை மாறிவிடும் போல் தெரிகிறது. உதாரணமாக இப்பொழுது தினசரிகளில் தலைப்பு செய்திகள், வர்த்தகம், மாநில மற்றும் மாவட்ட செய்திகள், சினிமா, விளையாட்டு, உலகம், இன்னும் பல என்று பற்பல தலைப்புகளில் செய்திகள் வெளியிடுகின்றனர். வார மற்றும் மாத இதழ்களில் கலை, கவிதை, கட்டுரை, அரசியல், கேள்வி பதில், சமையல், இளைஞர் சிறப்பிதழ், பெண்கள் சிறப்பிதழ், வேலைவாய்ப்பு என்று பலவகையுண்டு.
 
படிக்க படிக்க சுவாரசியம் குறையாத க்ரைம் நாவல்களும், சிறிய மற்றும் பெரிய குடும்ப நாவல்களும் நம்மை படிக்க தூண்டுபவை. அறிவியல் சம்பந்தமாக அறிந்து கொள்ள தனி புத்தகம், தொழில்நுட்பம் அறிந்து கொள்ள தனி புத்தகம் என்று புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. சரி, விஷயத்திற்கு வருகிறேன். எதிர்காலத்தில் இ-புத்தகங்களின் வரவைப்பற்றி நான் பேசப்போவதில்லை. இன்றைய நிலவரப்படி நாளைய இதழ்களில் தலைப்புகள் எப்படி வரும் என்று எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சொல்கிறேன்.கேள்.
 
கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, கள்ளக் காதல் தொடர்பான செய்திகளே அதிகம் வருவதனால் அவற்றுக்கு தனித்தனியே பக்கங்கள் ஒதுக்கப்படும். மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக நடக்கும் கெட்ட விஷயங்களுக்கு தனிப் பக்கம். இலவச இணைப்பாக கொலை, கொள்ளை மற்றும் இதர குற்றங்கள் நடந்த விதத்தை விவரிக்கும் சிறப்பிதழ்கள் வழங்கப்படும். கொலை வல்லுனர்கள், கொள்ளைக்காரர்கள் தங்களின் திறமைகள் பற்றிய பேட்டி நிச்சயம் உண்டு. வேண்டுமானால் பயிற்சியளிக்க இவ்வளவு ஆகும் என்று விளம்பரமும் கொடுக்கலாம்***
 
இப்படியே பேசிக்கொண்டிருந்தவரை இடை மறித்து, இன்னும் நீங்கள் சரியான விளக்கம் கூறவில்லையே என்றதற்கு, " இப்போ வர புத்தகங்களை படிக்க முடிவதில்லை. அதனால் தான் 'பழைய' புத்தகங்களுக்கு தாவிவிட்டேன்" என்றவர், "பழைய புத்தகங்கள் விலையும் குறைவுதான்" என்று முடித்தார்.
 
எனக்கென்னவோ அவர் சொன்னதில் 'உண்மை' இருப்பது போல் தோன்றுகிறது.
 
 

Thursday, June 28, 2012

நமக்கான 5 நிமிடங்கள் :

                 நாம் நமது தினசரி வாழ்க்கையில் 99% நேரத்தினை அடுத்தவர்களுக்காக செலவிடுகிறோம் ( அனைவருக்கும் பொருந்தாது ) அல்லது செலவிடுது போல் அலுத்துக்கொள்கிறோம். ஆனால் நமக்கான நேரத்தை பயன்படுத்தாமலேயே வீணடிக்கிறோம். கொஞ்சம் தலையை சுற்றி மூக்கை தொடுவதை போல் தோன்றுகிறதா? இதோ எளிமையாக எனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
                 எனது நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். அந்த நிறுவனம் 'காலம் தவறாமை'யை மிகவும் கடுமையாக பின்பற்றிவரும் ஒரு நிறுவனம். காலை பணிநேரத்திற்கு தாமதமாக வர 5 நிமிடம் மட்டுமே அனுமதி. அதற்கு ஒரு நிமிடம் கூடினாலும் 1 மணி நேரத்திற்கான சம்பளம் பிடித்துக்கொள்ளப்படும். அதுவே 15 நிமிடங்கள் என்றால் 2 மணி நேரங்கள், 30 நிமிடங்கள் என்றால் அரைநாள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஒருவர் விடுப்பு எடுத்தால் அன்றைய சம்பளம் அவ்வளவுதான். இவ்வளவும் மிகவும் கடினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 
                இவர் தினமும் தனது பைக்-ல் பணிக்கு செல்வது வழக்கம். வண்டியை சரிவர பழுது பார்க்காமல் விட்டதால் அதன் நிலைமை மிகவும் மோசமான நிலையில். ஆனாலும் நண்பர் அதை பற்றி கவலை கொள்ளவில்லை. காலையில் எழுவார், தயாராகி வெளியில் வந்து வண்டியை எடுத்து கிளம்பிவிடுவார். மாலை திரும்பியதும் அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு அப்படியே மறந்துவிடுவார். பெட்ரோல் போடுவதோடு சரி. ஒரு நாள் காலை வழக்கம் போல் வண்டியை எடுத்து 'ஸ்டார்ட்' செய்ய அது முரண்டு பிடித்தது. வண்டியை விட்டு பேருந்தில் ஏறி காலதாமதமாக பணிக்கு சென்றார். ஒரு நாள் இருநாள் அல்ல. இப்படி பலநாட்கள். தொடர்ந்து காலதாமதமாக வந்ததால் அவருக்கு வர வேண்டிய 'பதவி உயர்வு' மற்றும் சம்பள உயர்வும் மறுக்கப்பட்டது.
 
               தினமும் ஒரு '5' நிமிடங்கள் அந்த வண்டிக்காக இல்லையில்லை 'நமக்காக' செலவழித்திருந்தால்... இவ்வளவு அவஸ்த்தை இல்லை. காலையில் வண்டியை எடுத்து சரிபார்த்து வைத்தால் கடைசி நேர அவசரம் குறையும். வண்டி பழுது என்று முன்பே தெரிந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி பேருந்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் அலுவலகம் செல்லலாம். அந்த '5' நிமிடம் இன்று இவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
 
              இப்பொழுதெல்லாம் எனது நண்பர் கண் விழிப்பது தனது 'வண்டியின்' முகத்தில் தான். நன்றாக துடைத்து, எண்ணெய் எரிபொருள் சரிபார்த்து, ஒரு முறை 'ஸ்டார்ட்' செய்து பரிசோத்தித்த பின்னரே காலை கடன். வாரம் ஒருமுறை சக்கரத்தில் காற்றின் அழுத்தம் சரிபார்த்தல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வண்டியை பழுது பார்த்தல் என்று பொறுப்புடன் செய்கிறார். இப்பொழுது 'கால தாமதம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
            அதனால் தோழர்களே! நமக்கான அந்த '5' நிமிடங்களை நிச்சயம் வீணடிக்காமல் பயன்படுத்தி பயன் பெறுவோம். வெறும் பதவி உயர்வுக்காக மட்டுமென்று சொல்லவில்லை. நம் நண்பர்கள், சொந்தங்களை இழக்காமல் இருக்கவும் தான். நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு காலதாமதமாக சென்று 'வழியில் பைக் படுத்திவிட்டது' என்று கூறிப்பாருங்கள், நான் சொல்வது புரியும்.

Wednesday, June 20, 2012

நிஜ வாழ்க்கை அற்புதங்கள் :

           நேற்று எனது சக ஊழியருடன் உரையாடி கொண்டிருந்தபோது எனக்கும் அவருக்கும் 'கடவுள்' இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் கூறிய (அவருடைய) சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் கூறியதிலிருந்து சில...
 
            *** 1987 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 31ந்தேதி நானும் எனது மனைவியும் புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு, திருப்பதிக்கு செல்ல ஆயத்தமானோம். அன்று முற்பகல் அரசு பேருந்தில் ஏறி பயணித்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் சென்ற பேருந்து வழியிலேயே பழுதானது. இதனை 'அபசகுனம்' என்றெண்ணி திரும்பிவிட நினைத்தோம். ஆனால், மனதினை தேற்றிக்கொண்டு, அப்பொழுது ஏற்பாடு செய்யப்பெற்ற மாற்று பேருந்தில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
 
             திருப்பதி வந்தடைந்த உடன், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினோம். கோவிலுக்கு போகும் வழியில் மொட்டை போட்டு பின்பு அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு தரிசனம் பெற கோவில் நோக்கி நடை போட்டோம். அங்கு சென்றதும் நாங்கள் கண்ட காட்சி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது இன்னும் மூன்று நாட்களுக்கு 'முன்பதிவு' முடிந்துவிட்டது. இனி 03.01.1988 அன்று காலை தான் அனுமதி என்று ஒரு அறிவிப்பு பலகை அங்கே வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் என் மனைவி, " அதுதான் அப்பவே அபசகுனம் ஆச்சே" என்று வருத்தப்பட, அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன்.
 
             அப்பொழுது தரிசனம் வேண்டி வந்த பக்தர்கள் கூட்டம் எங்களோடு சேர்ந்துகொள்ள, ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அவ்வழியே வந்த காவலர் ஒருவர், "என்ன இங்கே கூட்டம், உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்" என்று சற்று கோபம் தோய்ந்த குரலில் வினவ, உடனே நான் " நானும் என் மனைவியும் கடவுள் தரிசனதிற்காக சென்னையிலிருந்து வருகிறோம்" என்று கூறி அறிவிப்பு பலகை விஷயத்தையும் கூறினேன். அதற்கு அவர் " தரிசனம் பார்க்க வேண்டுமென்றால் உள்ளே போக வேண்டியதுதானே, வெளியே ஏன் நிற்கிறீர்கள்" என்று சொன்னார். நானோ குழப்பத்தோடு என் பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்தபடியே, "இதோ இவர்களும் உள்ளனர்" என்க, அவர் உடனே "அவர்களுக்கும் தான்" என்றார். நான் உடனே பின்னால் திரும்பி இந்த செய்தியினை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கிறேன், அந்த காவலரை காணவில்லை.ஆச்சர்யம்! அங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் இல்லை, கதவிலிருந்த பூட்டும் இல்லை. அங்கே அனுமதி சீட்டு வழங்குபரை தவிர வேறு யாருமில்லை. அவரிடம் சீட்டு பெற்று  நாங்கள் அனைவரும் உள் சென்று 'புத்தாண்டு' அன்று கடவுள் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். ***
 
            பொறுமையாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தவர் என்னை நோக்கி " இப்பொழுது சொல்லுங்கள், கடவுள் இருக்கிறாரா? இல்லையா?. என்னிடம் எந்த பதிலும் இல்லை. உங்களுக்காவது பதில் தெரியுமா?
 

Saturday, June 2, 2012

கிராம திருவிழாக்கள்:

சமீபத்தில் கோடை விடுமுறைக்கு எங்களின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். விடுமுறையில் கிராம அழகை ரசித்தது மட்டுமின்றி கிராம மக்களிடம் இன்றும் காணப்படும் ஒற்றுமையை கண்டு ரசித்து திரும்பினோம். அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள இந்த பதிவு.
 
ஒரு வளர்பிறை தினத்தன்று ஊரிலுள்ள பெரியவர்கள் ஒன்று கூடி அம்மனுக்கு 'கூழ்' ஊற்றும் திருவிழா நடத்த திட்டமிட்டனர். அது ஊர்மக்களுக்கு தெரிவிக்கபெற்று மறுநாள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்பொழுது ஊர் பெரியவர் திருவிழாவுக்கு செய்யவேண்டிய வேலைகள் மற்றும் அவற்றுக்குண்டான செலவுகளை பட்டியலிட்டார் (Planning). பின்பு செலவுத்தொகையை பங்கிட்டு, வீட்டிற்கு இவ்வளவு என்று வசூல் செய்ய முடிவடுத்தனர் (Budgeting) (அனைவரும் சமமான தொகையை மட்டுமே செலுத்தவேண்டும், நன்கொடைக்கு தடை).
 
பண விஷயம் முடிந்து வேலையை பிரித்துக்கொடுக்க முனைந்து ஒரு பெரியவர் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக்கொடுத்தார் (Delegation  of Authority & Responsibility). அப்பொழுது இடைமறித்த பெரியவர் ஒருவர் சென்ற வருடம் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி, ஓரிரு இளைஞர்களின் பொறுப்புகளை மாற்றினார் (Appraisal, Feedback and Corrective Action). பின்பு விழாத் தேதி குறிக்கப்பெற்று அனைவரும் கலைந்துசென்றனர் (Goal Setting).
 
முதல் வேலையாக 'காப்பு' கட்டப்பட்டது (Health & Safety Environment) (மக்கள் பெரும்திரளாக கூடும் திருவிழா, அதனால் வெளியூரிலிந்து வருபவர்கள் மூலம்  நோய் பரவாமல் இருக்க இந்த காப்பு). திருவிழாவிற்கு முதல்நாள் கரகம் ஜோடித்து ஆரம்பகால பூஜைகள் நடந்தேறின. மறுநாள் (கூழ் ஊற்றும் அன்று) காலையிலேயே மக்கள் அனைவரும் வீடு வாசல் சுத்தம் செய்து வாசலில் தண்ணீர் தெளித்து ஊர்வலத்திற்கு தயாரானார்கள். நல்ல நேரம் பார்க்கபட்டு ஊர்வலம் துவங்கியது. வீட்டிற்கு வீடு பூஜை செய்யப்பெற்று, வீட்டிலிருந்து ஒருவர் கூழ் குடத்துடன் ஊர்வலத்தில் சேர்ந்து கோயில் நோக்கி செல்ல துவங்கினர்.
 
கோவிலை அடைந்ததும் கூழ் கூடங்கள் பூஜைக்காக 'அம்மனுக்கு' முன்பாக வைக்கப்பெற்று, பூஜை முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்பட்டன. ஏழைகளும், பக்தர்களும் வரிசையில் நின்று அம்மானை தரிசித்து 'கூழ்' பெற்று சென்ற காட்சி, அந்த அம்மானே நேரில் வந்து கூழ் குடித்ததை போல் இருந்தது. ஊரில் உள்ள அனைவரும் பசியாறி, குளிர்ச்சியுற்று வாழ்த்தி சென்றது மனதை நெகிழ்ச்சியுற செய்தது.
 
மாலை அம்மனுக்கு பூஜை முடிந்ததும், ஊர்த்தேர் உற்சவ மூர்த்தியுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் ஒருபுறம், வான வேடிக்கை ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்புகள் ஒருபுறம், அலங்காரப்பொருள் கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களின் கடைகள், துணிக்கடைகள் என்று ஊரே ஒரு 'நகர கடைவீதி' போல் காட்சியளித்தது. எங்கு நோக்கினும் மகிழ்ச்சி அலைகள். யாரை பார்த்தாலும் புன்னகை. அப்பப்பா! சொர்க்கத்திற்கு வந்துவிட்ட உணர்வு. ஒருபக்கம் அம்மனுக்கு 'அசைவ' படையல், இன்னொரு பக்கம் அன்னதானம், தெருக்கூத்து என்று எங்கு நோக்கினும் கூட்டம். சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வெளியூருக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடியது நிச்சயம் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
 
இந்தியாவின் உயிர் நிச்சயம் 'கிராமங்களில்' தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட நாள் என் வாழ்நாளில் பொன்னாள். இதில் ஒரு விஷயம் பார்த்தீர்களா. நாம் 'மேலாண்மை உத்திகள் ' (Management technique) என்று குறிப்பிடும் அனைத்தும் அங்கு அதிகம் படிக்காத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. படித்துவிட்டு ஆட்டம் போதும் பலர் நிச்சயம் கற்றுக்கொள்ள 'கிராமத்தில்' ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது. முடிந்தால் தோழர்களே உங்கள் சொந்த கிராமத்திற்கு இல்லையென்றால் நண்பர்கள் கிராமத்திற்கு செல்லுங்கள். இன்றும் உயிரோடிருக்கும் 'கிராம' கலாச்சாரத்தை அனுபவித்து மகிழுங்கள்.

Wednesday, May 30, 2012

தேவை ஒரு தமிழ் அகராதி:

             இன்று தினசரி வாசிக்கும்போது கண்ணில் பட்ட வாசகம் ' துளை அடைக்கும் பணி தொடங்கியது'. எனக்கு உடனே ஒரு ஐயம். பணி துவங்கியது என்றோ அல்லது பணி ஆரம்பமானது என்றோ எழுதலாம் அல்லவா. விடை சொல்ல பக்கத்தில் ஆளில்லை. அப்பொழுது தான் உணர்ந்தேன் தமிழுக்கு 'அகராதி' இல்லை என்று. அனைத்து மொழிகளுக்கும் தமிழில் அகராதி இருக்கும் போது தமிழுக்கு தனியே அகராதி இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
 
             அதே போல் இன்னொரு பக்கத்தில் ' எதிர்ப்பு தெரிவித்தனர் ', 'கோஷம் போட்டனர் ' என்றெல்லாம் போட்டிருந்தது. 'எதிர்த்தனர்', 'கோஷமிட்டனர்' என்று எழுதலாமே. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழ் தனது தன்மையை இழந்து விடுமோ என்ற பயம் வயிற்றில் புளியை கரைத்தது.

Tuesday, May 29, 2012

நகரமா? நரகமா?

              கோடை வெயில் கொளுத்தும் இவ்வேளையில் இந்த பதிவு அவசியம் என்றே நினைக்கிறேன். சென்னையில் வசிப்பவர்களுக்கும், இங்கு வந்து போவோர்களுக்கும் நான் சொல்லும் விஷயங்கள் பரிச்சயமானவை. அக்னி நட்சத்திரம் 'அக்னி சூரியனாய்' கொளுத்துகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகமென்றாலும் சென்னை ரொம்பவே அதிகம்.
 
                அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் 'கருட புராண' தண்டனைகள் நினைவிருக்கலாம். அதில் வருவதைபோல் சென்னையில் தினமும் 'கும்பிபாகம்' தான். வருத்தும் வெயிலில் தினமும் வறுபடும் மக்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை. இது பரவாயில்லை. இந்த வெயிலில் 'போக்குவரத்து நெரிசல்' இல் சிக்கிக்கொண்டால் 'அந்தகூபம்' தான். இன்ச் இஞ்ச்சாக நகரும் வாகனங்களுக்கு நடுவே சிக்கி தவிக்கும் 'பைக்' பயணியை பார்க்கவேண்டுமே.
 
                  போக்குவரத்து நெரிசலை தாண்டி அடுத்த சிக்னலில் மாட்டாமல் செல்ல கொஞ்சம் வேகமெடுத்தால் அடுத்தது 'கிருமிபோஜனம்' தான். நமது நண்பரான போக்குவரத்து 'அதிகாரி' அப்படியே அட்டை மாதிரி உறிஞ்சிவிடுவார். இன்னும் அசிபத்தரவம், வஜ்ரகண்டம், பாணரோதம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
 
                   அதனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், செய்த பாவங்களை தொலைக்க காசி, ராமேஸ்வரம் செல்லும் மக்களே, சென்னைக்கு வாருங்கள். செய்த பாவங்களுக்கும், செய்யாத பாவங்களுக்கும் 'நரக' வேதனை அனுபவித்துவிட்டு, இறப்பிற்கு பின்  'முக்தி' பெறுங்கள்.

Thursday, April 19, 2012

ஒழுக்கம் :

         இன்றைய தினசரியை படித்துக்கொண்டிருந்தேன். படித்து முடிப்பதற்குள் வியர்த்து கொட்டியது. 'மின்வெட்டு' என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் 'தவறு' என்னுடையது அல்ல. அதில் வந்த செய்திகளை படித்ததன் விளைவு. குறைந்தபட்சம் 5 கொலைகள் வெறும் கள்ளக்காதலினால் மட்டுமே. 'காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இளம்பெண் கைது'. 'கள்ள காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவன் கைது', 'கள்ள காதலை தடுத்ததால் கணவன் கொலை - மனைவிக்கு வலைவீச்சு'. 'கள்ள காதல் கொலை வழக்கில் திடுக் திருப்பம்'. இப்படி எத்தனையோ தலைப்புகளில் ஆங்காங்கே சிதறி கிடந்தது நமது ' கலாச்சாரம்'. தமிழகத்தில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகத்தினால் தான் வியர்த்து கொட்டியது.
 
            இவற்றுக்கு மூல காரணம் என்ன? ஏன் இவ்வாறு நடக்கிறது?
 
            முதல் காரணம் பெற்றோர்கள். தங்களின் பெண்ணோ/ பையானோ காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும், அவர்களை கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு மணம் முடிப்பது கண்டிக்கப்படவேண்டிய விஷயம். திருமணத்திற்கு பிறகு காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பலர் 'தற்கொலை' செய்துகொண்டது அந்தக்காலம். இப்பொழுது அப்படி அல்ல. திருமணத்திற்கு பிறகும் தங்களின் 'புனிதமான' காதலை தொடர்கின்றனர். கணவனோ / மனைவியோ எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதெப்படி?
 
             இரண்டாவது காரணம் அனைவரும் அறிந்ததே! பணம். தினமும் பணம், பணம் என்று அலையும் இன்றைய மக்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழையும் 'குள்ளநரிகள்' தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டு சுலபமாக அவர்களுடன் பழக ஆரம்பித்து, பின்பு முடிவு .....?. மறுநாள் செய்தி. கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பு செலுத்தாததினால் வரும் குழப்பம் இது. அவைகள் மனது வைத்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
 
              மூன்றாவது நமது மூடப்பழக்கவழக்கங்கள். விவாகரத்து என்பது தெய்வக்குற்றம் போல் பாவிக்கும் நிலை. கணவனுக்கோ / மனைவிக்கோ எவ்வளவு எடுத்துசொல்லி புரிய வைத்தும் ஒத்துவராத நிலையில் 'விவாகரத்து' தான் சரியான தீர்வு. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. அதுவும் இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடத்தைக்கு காரணம். இதனால், நான் 'விவாகரத்தை' ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. தேவைப்பட்டால் கொடுக்கலாம் என்றுதான் சொல்லவருகிறேன்.
                 
            இப்படி காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று சீரழிந்து கிடப்பது நமது 'கலாச்சாரம்' தான். மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டில் மிக முக்கியமானது இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி' விஷயம். ஆனால் நாம் அதனை மறந்து இன்று மிருகங்களாகி திரிகிறோம். தனி மனித ஒழுக்கமென்பது சொல்லிக்கொடுத்து வருவதன்று. உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது.
 
           பெற்றோர்களே! பிள்ளைகளின் காதலுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களின் சுயநலதிற்காக மற்றவரின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். கணவான்மார்களே, மனைவிமார்களே! பணத்தை நேசிப்பதை விட்டு வாழ்க்கையை நேசியுங்கள்! உங்களின் வாழ்க்கை துணையை நேசியுங்கள்! நிச்சயம் தனிமனித ஒழுக்கம் தழைக்கும்.

Friday, April 6, 2012

ஐ.பி.எல். விளையாட்டு:

             ஆதிகாலத்தில் விளையாட்டு போட்டிகள் மனிதனின் வீரத்தை வெளிப்படுத்துவதற்காக விளையாடப்பட்டன. உதாரணமாக சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றை சொல்லலாம். பின்பு திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளையின் வீரத்தை சோதித்துப்பார்க்கவும் விளையாடப்பட்டன. ஊர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகள் பின்பு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பெற்றன. பரிசுகளையும் பதக்கங்களையும் அள்ளிச்சென்று வீட்டில் வைத்து அழகு பார்த்தனர். நாளடைவில் ஆரோக்கியம் என்ற நிலை மாறி பணம் மட்டுமே பிரதானமாகி இன்று அனைத்து விளையாட்டுகளுமே சூதாட்ட களங்களாகிவிட்டன.
 
            விளையாட்டு வீரரை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலை மாறி ஏலத்தில் எடுத்து 'தனக்காக' ஆடச்சொல்லி பணம் பார்க்கும் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இன்று விளையாட்டுகள் மாறிவிட்டன. ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்ற நிலை மாறி தனியொரு மனிதனுக்காக 'நகரங்களின்' பெயர்களில் நடைபெறும் இன்றைய விளையாட்டு போட்டிகள் நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
 
             விளையாட்டு - ஆரோக்கியம், பொழுதுப்போக்கு, வீரம் என்ற நிலை மாறி வெறும் ' சூது ' மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

கள்ளத்தனம் (கவிதை):

உறவில் கள்ளஉறவு
காதலில் கள்ளக்காதல்
வியாபாரத்தில் கள்ளவியாபாரம்
இப்படி அனைத்திலும்
கள்ளத்தனம் !!!
நாடு கேட்டுவிட்டது!
புலம்பிக்கொண்டே
கோவிலுக்கு சென்றேன்
அங்கேயும்
கடவுளுக்கு பதில்
சிலை!

Wednesday, March 14, 2012

புனித நூல் :

கீதை இருந்தும்
குரான், பைபிள் இருந்தும்
நம்மை வழிநடத்துவது
இ.பி.கோ !
 
காலை எழுவது முதல்
இரவு படுக்கும் முன்பு வரை
இ.பி.கோ நமது பின்னால்!
 
மனிதா !
புனித நூல் வெறுமனே
பூஜைக்கு மட்டுமோ?
 
சந்தனம் தடவி
பன்னீர் தெளித்து
முப்பொழுது பூஜை
செய்தால் மட்டும் போதும் !
 
வாழ வழி வகுத்து
நல்ல நெறிகள் பலச்சொல்லி
நலவாழ்வுக்கு இட்டு செல்லும்
புனிதநூல்கள்
வெறும் பூஜை பொருளாய்!
 
கடவுளை கல்லாக்கி
கருவறையில் பூட்டுபவர்கள் நாம்!
இந்த புத்தகங்கள் எம்மாத்திரம் !

Tuesday, February 28, 2012

இப்படியும் சிலர் - வாழ்க வளமுடன் :

                இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் இருந்து எனது வீட்டிற்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய நேரிட்டது. பொதுவாகவே எனக்கு பயணங்களின்போது சிறிது இடைவெளி கிடைத்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கமுண்டு. அன்றும் அவ்வாறே படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷன்-ஐ வண்டி நெருங்கிக்கொண்டிருந்தது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் (இறங்குவதற்கு முன்) என்னிடம் 'நீங்கள் இந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டுமா?' என்று அந்த ஸ்டேஷன் பெயரை சொல்லிகேட்டார். நானும் 'இல்லை, என்னுடையது அடுத்தது' என்று சொல்லிவிட்டு புத்தகத்தில் மூழ்கினேன்.
 
                சிறிது யோசித்த பிறகு, எனக்கு ஏதோ வித்தியாசமாய் பட, அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் 'பலரும் பேருந்து அல்லது ரயில் பயணங்களின் போது புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சில சமயம் புத்தக ஸ்வாரசியத்தில் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டு அவதிக்குள்ளாகின்றனர். அதனால் நான் இறங்கும் முன் யாரேனும் புத்தகத்துடன் தென்பட்டால் அவர்களை இவ்வாறு கேட்டு செல்வது வழக்கம்' என்றார். நான் அப்படியே மலைத்து போனேன். தங்கள் நிறுத்தம் வரும்போது ஓடும் வண்டியிலிருந்து இறங்கியோடும் 'வேகமான' உலகத்தில், அடுத்தவர் இறங்கும் இடத்தை நினைவுபடுத்தி செல்லும் இவர் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்.
 
                நாமும் இவ்வாறு நடக்க முயற்சிசெய்வோம் (?)

Thursday, February 2, 2012

கவிதைகள் :

அவளின்
கவிதை பேசும் கண்கள்
எங்கு கற்றன
என்னை பார்க்கும் பொது மட்டும்
வசை பாடுவதற்கு !
----
அவள் விழிகள் பேசுமாம்
அப்புறமேன்
வாய்பேச முடியாத
அவளுக்கு ஊமையென்ற பட்டப்பெயர் ?

பேருந்துக்குள் விலங்கினம் :

என் பேருந்து பயணத்தில்
நான் அதிகம் சந்திப்பது
மிருகங்களை தான்
 
இடித்துக்கொண்டு போகும் எருமை
பாக்கை குதப்பும் பன்றி
நாக்கை தொங்கவிட்டு
வெறிக்கும் நாய்
 
ஏ! நிர்வாகமே
ஒருபுறம் 'பெண்கள்' என்று எழுதிவைத்து
மறுபுறம் 'ஆண்கள்' என்று எழுத மறந்தாய்
 
பார்!
விலங்கினங்கள்
பெருந்துக்குள்!

உறவுக்கு உறவுகள் இல்லை :

இது
என் தாத்தா தந்த காசு
என் பாட்டி சொன்ன கதை
என் பெரியப்பா கொடுத்த பொம்மை
என் அண்ணன் தந்த மிட்டாய்
 
இவையெல்லாம் இன்று
பட்டணத்து
அங்கிளுக்குள்ளும்
ஆண்டிக்குள்ளும்
அடங்கிப்போய்
வெறுமையாய்!
 
உலகம் சுருங்கிப்போனது
உள்ளங்கள் சுருங்கிப்போனது
இன்று
உறவுகளும் சுருங்கிப்போய்
குற்றுயிரும் குலையுயிறுமாய்
 
ஐ‌சி‌யுவில் வைத்து காக்க
பாவம் உறவுக்கு இன்று உறவுகள் இல்லை!

ஆசை :

அதிகாலை சூரியன்
இளங்காலை தென்றல்
மலரும் மொட்டுக்கள்
சிலிர்க்கும் பறவை கூட்டம்
புல்லின் பனி கிரீடம்
இவை அனைத்தையும்
தரிசிக்க நினைத்தேன்
 
நாடு இரவு தாண்டி தொடரும்
கணினி சாட்டிங்
என்னை தற்காலிக குருடனாக்கி
வேடிக்கை பார்க்கிறது.