இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, September 17, 2013

ரூபாய் மதிப்பு:

     ரூபாய் மதிப்பு ஏற்றம் இறக்கம் ஒருவகையில் மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. டீக்கடை, பேருந்து, மளிகை கடை என்று இடம் பேதமில்லாமல் அனைவரும் பேசிய ஒரு விஷயம் இதுதான் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. பணத்தின் மதிப்பை உயர்த்த அரசியல் வாதிகள் சொல்லும் யோசனைகள் ஒருவகையில் அபத்தமாக தோன்றினாலும், எனக்கு ஒருவகையில் சரியென்றே தோன்றியது. என்னுடைய எண்ண ஓட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். 

  தேவை அதிகரிக்கும் போதுதான் ஒருபொருளின் இறக்குமதி அதிகமாயிருக்கும். எனவே நமது தேவையை ஏன் நாம் குறைத்துக் கொள்ள கூடாது. எனக்கு தெரிந்த வகையில் என்னுடைய பதிவு ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டு எழுதியுள்ளேன். தனிநபர் ஒருவருக்கு பெரிய கார் எதற்கு? பக்கத்து தெருவிற்கு செல்ல கார் எதற்கு? பொது போக்குவரத்தை பயன்படுத்த ஏன் தயக்கம்?

         லிட்டருக்கு எவ்வளவு தரும் என்று விளம்பரங்களை பார்க்கும் போதே நமது நிலை புரிந்து விடுகிறது. முடிந்தவரை தனி வாகன பயன்பாட்டை குறைத்தாலே போதும்.

       அதேபோல் தங்கம். வாங்கி குவிக்கும் சிலரின் பேராசையினால் தங்கத்தின் தேவை அதிகரித்து இப்பொழுது தங்கத்தின் விலையும் எங்கோ சென்றுவிட்டது. 

        என்னுடைய கருத்து என்னவெனில் பெட்ரோல், டீசல், தங்கம் இவற்றை நாம் நமது கட்டுப்பட்டிற்குள் வைக்கலாம். அதற்கு நமது வறட்டு கௌரவத்தை விட்டொழித்தாலே போதும். முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்த முயற்சிப்போம்.


Monday, March 25, 2013

பொய்யும் இனிக்கும் ( குழந்தை கவிதை )

பொம்மைக்கு பசிக்கிறது
என்று ஊட்டும் பொழுதும்
பொம்மை அழுகிறது
என்று தாலாட்டும் பொழுதும்
பொம்மைக்கு குளிர்கிறது
என்று போர்த்தும் பொழுதும்
குழந்தைகள் சொல்லும்
பொய்கள் இனிக்கின்றன!

Friday, February 8, 2013

விஸ்வரூபம் - திரைவிமர்சனம் அல்ல

          ஒவ்வொரு முறையும் நான் எழுத அமரும்போது, இந்த தலைப்பில் இவ்வாறெல்லாம் எழுதவேண்டும் என்று நினைப்பதில்லை. அவ்வாறு நினைத்து அமர்ந்த நாட்களில் எழுத்துக்கள் கிடைக்கவில்லை. எழுத்தே இல்லையெனில் வார்த்தைக்கு எங்கு போவேன். ஆதலால் எழுதுவதை விடுத்து கிறுக்க ஆரம்பித்துவிடுவேன். பின்பு அதற்கு 'கவிதை' என்று தலைப்பிட்டு வெளியீட்டு விடுவேன். இப்படித்தான் எனது வலைபக்கத்தில் கவிதைகள் முளைத்தன. என் நண்பர்கள் அவற்றையெல்லாம் படித்துவிட்டு, உரைநடை வடிவில் ஏதோ சிறியதாக இருந்தது, என்ன அது? என்று கேட்டு என்னை வெறுப்பேற்றி விளையாடுவதுண்டு. அதற்கெல்லாம் கவலைப்படுவேனா! விடாமல் கிறுக்கிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
 
           இலக்கண பிழை இல்லாமல் எழுத முயன்றதுண்டு. ஆனால் நமது கல்விமுறை அவ்வாறு எனக்கு பயிற்றுவிக்கவில்லை. மதிப்பெண்கள் பெற மனனம் செய்யும் முறையே சரியென்று போதிக்கபட்டதால், அன்று மனப்பாடம் செய்த உரைநடை வாக்கியங்கள் இன்று எனக்கு கைகொடுக்கவில்லை. ஏனெனில், நான் என் எண்ணப்படியே எழுத நினைக்கிறேன். என் எழுத்துக்களை நான் ஆள நினைக்கிறேன். பலமுறை தோற்றுப்போய் அதன் வழியே போய் என் படைப்புகளை வடித்ததுண்டு. இந்த பதிவும் அப்படித்தான். இந்த எழுத்துக்கள் தானாக உருவானவை. என்னால் எழுதப்பட்டன. அவ்வளவே!
 
              ஒரு சிறந்த எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை. எனக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு எழுத்து-வடிவம் கொடுக்கவே இப்பணியை தொடங்கினேன். கொடுக்கப்படும் வடிவம் அனைவருக்கும் புரியவேண்டும் என்று எண்ணியதால் என் தமிழில் தொடர்ந்தேன். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழ், என்னையும் உள்வாங்கி, இப்பூவுலகெல்லாம் பரப்பியது. இன்று இந்த எழுத்தினை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்து, என்னை மகிழ்ச்சியுற செய்துள்ளனர். நான் கற்ற தமிழில் என் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். ஆகையால் இந்நாள் வரை, இப்பொழுது வரை எனது எழுத்துக்களை படித்த, படிக்கும் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நன்றிகள். உங்களின் வாசிப்பை நான் பணமாக்குவதில்லை. அதில் எனக்கு உடன்பாடுமில்லை.
 
            விஸ்வரூபம் என்கிற இந்த தலைப்பு கமலுக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருந்தும், இந்த பதிவிற்கும் பொருந்தும். இன்னொரு முறை படித்து பாருங்கள்.

Monday, February 4, 2013

பெண்களுக்கெதிரான வன்கொடுமை:

         இன்று இந்திய மண்ணில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் 'பெண்களுக்கெதிரான வன்கொடுமை'. வெகு சாதாரணமாக நடந்தேறும் கொடுமைகளினால் பாதிக்கப்படும் பெண்கள், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைந்து கொள்வதால் இப்பொழுது 'பெரும்' கூட்டமாக சேர்ந்து போராடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். மாறி மாறி அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் செய்திதாள்களில் வெறும் செய்தியாக மட்டுமே வந்து போன 'டெல்லி' விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு. அரசு தரப்பு 'ஆழ்ந்த' அனுதாபங்களையும், 'அதிர்ச்சியையும்' வெளிப்படுத்தி தனது கடமையை முடித்துக்கொண்டது. பின்பு ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதாக சொல்லியதோடு சரி. தேர்தல் வருகிறதே. வேறென்ன செய்ய !!!
 
         ஒரு வார இதழில் ஒரு எழுத்தாளர் இப்படி பொருள்படும்படி எழுதியிருந்தார், 'நாமெல்லாம் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கயவர்கள்' என்று. படித்த கணத்தில் கோபமுற்றாலும், சிறிது அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து சிந்தித்து பார்த்ததில், அது 100% உண்மை என்ற விஷயம் மண்டையில் உரைத்தது. எத்தனைபேர் இக்கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
 
         காலை முதல் மாலை வரை மதுபானக்கடை திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் (18+) எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். அப்படியே பக்கத்தில் இருக்கும் திரையரங்கத்திற்கு சென்று அங்கு ஓடும் இரண்டாம்தர திரைப்படங்களை பார்க்கவேண்டியது. வெளியே வந்து குற்றத்தில் ஈடுபடுவது. இப்படித்தான் நமது நாட்டில் குற்றம் ஆரம்பமாகிறது. இதனை தடுக்கவேண்டிய அரசு 'உயர்ரக மதுபானக்கடை' திறக்க நினைக்கிறது. சமூக நலவிரும்பிகள் 'பெண்களின் கவர்ச்சியான ஆடை', 'ஆண்களின் வக்கிரபுத்தி', 'பெண்களின் இரவுப்பயணம்', அது இது என்று தங்களுடைய கருத்தை பதிவு செய்துவிட்டு கடமை முடிந்ததென்று அமர்ந்து விடுகின்றனர். இன்னும் சிலரோ நாம் நாட்டில் கல்விதிட்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டுமென்று போர்க்கொடி தூக்குகின்றனர்.
 
        அய்யா, உயர்ந்தோர்களே! எவ்வளவு படித்தாலும், எந்த நாட்டில் போய் படித்தாலும், ஒருவன் 'குடித்தால்' அவன் மூளை வேலை செய்யாது. மூளை இல்லாதவனிடம் 'மனிதனை' எதிர்பார்க்க முடியாது. அப்புறம் சட்டமென்ன! ஒழுங்கென்ன! படிப்பதால் மட்டுமே ஒருவன் ஒழுக்கமுடையவன் ஆவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தீவிர மதுவிலக்கு ஓரளவிற்கு, ஆம் மக்களே, ஓரளவிற்கு மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்கும். மீதி தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே விளையும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. நமது பண்பாடு என்பது பெண்களுக்கு விலங்கு பூட்ட அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால், நாட்டில் பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறைந்து விடும்.
 
      பெண்களே! வக்கிர எண்ணமுடையவர்கள் வாழும் இந்த மண்ணில் உங்களை காத்துக்கொள்வது உங்கள் கடமை. தயவு செய்து  தற்காப்பு கலை ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டுத்தள்ளுங்கள்!

Tuesday, January 1, 2013

பெண்கள் பாதுகாப்புக்கு ஒரு அண்ட்ராய்டு பயன்பாடு:

டெக் மஹிந்த்ரா நிறுவனம் நீண்ட நாட்களுக்கு முன்பு மஹிந்திரா குழும ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த FightBack என்று ஒரு பயன்பாட்டை (application) உருவாக்கியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த வன்கொடுமைக்கு பின்பு அந்த பயன்பாடு இப்பொழுது அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
Fightback பயன்பாடு, ஒரு பயனர் இருக்கும் இடத்தை GPS மூலம் கண்காணித்து, பாதுகாப்பற்ற நேரங்களில் நாம் தேர்ந்தெடுத்த தொடர்புகளுக்கு அவசர செய்தி அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்ட்ராய்டு மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். ஆண் / பெண் பாதுகாப்பற்ற நிலையை உணரும் போது ஒரு panic பொத்தானை அழுத்த வேண்டும். அப்பொழுது இந்த application நாம் இருக்கும் இடத்தை GPS மூலம் கண்டறிந்து தேர்ந்தெடுத்த தொடர்புகளுக்கு அவசர செய்தி செய்தி அனுப்பி வைக்கும்.
 
இந்த பயன்பாடினை தரவிறக்கி பயன்படுத்த கீழ்கண்ட முகவரிக்கு செல்க. இந்த இலவச சேவை இப்பொழுது இந்திய பயனாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது.
 
www.fightbackmobile.com
 

Thursday, December 13, 2012

2012 இல் உலகம் அழியாது

'சூரியனை மறைத்த கரும்புள்ளி : உலகம் அழியப் போவதாக வதந்தி'
 
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் வதந்தியை மட்டுமே பரப்புவோம் அல்லது பரப்பிக்கொண்டிருப்போம் என்பது விளங்கவில்லை. உலகமே அழியப் போகிறது என்று ஒருசாரார் இங்கே புலம்பி கொண்டிருக்கிறார்களே தவிர எந்த நாட்டின் அரசாங்கமும் இதனை பற்றி கவலைப்படுவதே இல்லை. யாரும் இது தவறான வதந்தி என்று குரல் கொடுப்பதில்லை. குரல் கொடுத்தாலும் அது அந்த அளவு வலிமையாய் இருப்பதில்லை.
 
உலகில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பலர் இருந்தும் இது தீர்க்க  முடியாத புதிராகவே இருப்பது என்னமோ உண்மைதான். இருந்தாலும் மக்களை ஒருநிலைப் படுத்தவேண்டியது அவர்களின் கடமை அல்லவா? இங்கே திரியும் சில வேலை வெட்டி இல்லாத சில மூடர்களின் விஷமத்தால் இன்று நாட்டில் பல்வேறு வதந்திகள் பரவுகிறது.
 
12-12-12 நல்ல நாளா? இல்லை பாவ நாளா? உடன் பிறந்த பெண்களுக்கு புடவை எடுத்து தர வேண்டுமென்று ஒரு வதந்தி. எங்கோ ஒரு கோவிலில் தீபம் அணைந்துவிட்டது. அபசகுனம் என்று ஒரு வதந்தி. இப்போது சூரியனில் கரும் புள்ளி. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் படித்த முட்டாள்கள் தான் இத்தகைய வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு செல்போனின் வரவும் ஒரு காரணம்.
 
ஒரே நாளில் உருவானது அல்ல பூமி. அதே போல் ஒரே நாளில் அழிந்தும் போகாது. அதனால் மக்களே! 2012 உலகம் அழியாது.

கிறுக்கல் (எ) கவிதை :

என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
தினமும் பிறப்பதாய் எண்ணி
என்னை நானே ஏமாற்றுகிறேன்,
 
இன்றைக்கு மின்சாரம் வருமென்று
தினமும் நான் பிறக்கிறேன்!
 
வருமா வராதா என்று
கேளிக்கை பார்த்து சிரித்த நாட்கள்
 
இன்று என்னை பார்த்து
சிரிப்பதாய் தோன்றுகிறது.
 
என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
 

குழந்தை கவிதைகள்:

பொம்மைக்கு
உறக்கம் வரவில்லை,
தாலாட்டு பாடியபடி
உறங்கியது குழந்தை!
 
சோறூட்டும் குழந்தையை
பார்க்கும் போது
சந்தேகம் வலுக்கிறது.
ஒருவேளை,
பொம்மைக்கும் பசிக்குமோ?
 
கொசு கடித்து
அழுதது குழந்தை.
மின்சாரம் இல்லா இரவில்
பனை விசிறி தேடி
விசிறியது
பொம்மைக்கு!
கொசு கடிக்குதாம்!

Monday, November 12, 2012

இனியாவது திருந்துவோம்

             நமது நலனுக்காக ஆளும் அரசாங்கம் சில பல திட்டங்களை அறிவிப்பதுண்டு. அவற்றில் பல கிடப்பில் போடப்பட்டாலும், சில திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டி உடனுக்குடன் செயல்படுத்தப்படுவதுண்டு. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் 'ஊடகங்கள்' மூலம் அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஒருசில மட்டுமே வெற்றிப்பெறுகின்றன. உதாரணமாக விலையில்லா பொருட்களை சொல்லலாம்.
 
            இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து அமலாக்கம் வரை ஒவ்வொரு திட்டமும் போராடியே நம்மை வந்து அடைகின்றன என்பது உண்மையிலும் உண்மை. அப்படி நம்மை வந்து அடையும் திட்டங்கள் முழுமையாக நமக்கு பயனளிக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே. உதாரணமாக 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டங்களை சொல்லலாம். விவசாயத்தை விட்டு 'ஓசியில்' பணம் கிடைக்கும் இந்த தொழிலை மக்கள் வெகுவாக நேசிக்கின்றனர். இன்றும் கிராமங்களுக்கு சென்றால், ஒரு விவசாயி தனது தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்காமல் திணறுவதையும், 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் ஏதேனும் மரத்தடியில் படுத்து தூங்குவதையும் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
 
           நம்முடைய நலனுக்காக வகுக்கப்பட்ட திட்டம் தான் இது. உள்ளூர் அரசியல்வாதிகளும், சில குள்ளநரி அதிகாரிகளும்  மக்களுக்கு சேரவேண்டிய கூலியில் பெரும்பகுதியை 'அமுக்கி' விட்டு, தூங்கிவிட்டு செல்வதற்கு சன்மானமாய் கொஞ்சம் கூலியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். நாள் முழுதும் நிலத்தில் வியர்வை சிந்தி ரூ.100 கூலி பெறுவதைவிட, வெறுமனே மரத்தடியில் தூங்கிவிட்டு ரூ 30 அல்லது 40 பெறுவதை லாபம் என்று நினைப்பதால் தான் இவ்வாறு நடக்கிறது.
 
           இது ஒருபுறமிருக்க, ஒரு நலத்திட்ட பணிக்காக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று வந்தால் நடக்கும் அக்கப்போருக்கு யார் சாட்சி? கட்டடம் இருக்கும் ஆனால் இருக்காது என்ற நிலைமை தான். நமது கையாலாகாத தானம் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தட்டிக்கேட்க நினைத்தாலும் 'பண' மற்றும் 'படை' பலதிற்கு முன் எடுபடுவதில்லை.
 
        இப்பொழுது உள்ளூர் அரசியல்வாதிகள் கொஞ்சம் சாமர்த்தியமாய் செயல்படுகின்றனர். தமது தொகுதியில் ஏதேனும் நலதிட்டப்பணி வரப்போகிறது என்றால் முன்பு இருந்ததைப்போல் தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதில்லை. அதற்கு பதில் உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வருகின்ற ஒப்பந்ததாரரிடம் சற்று காட்டமாகவே வலியுறுத்துகின்றனர். வரப்போகும் தேர்தலுக்கு செலவும் மிச்சம். வேலை வாங்கி கொடுப்பதற்கு தலைக்கு இவ்வளவு என்று கணிசமாக வசூல் வேட்டையும் நடக்கிறது.
 
         உள்ளூர் வாசிகள் பெரும்பாலும் வேலை செய்வதைவிட தூங்குவதிலும், சீட்டாடுவதிலும் மிக்க அக்கறையுடன் செயல்பட்டு, வளர்ச்சிப்பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். மீறி ஒப்பந்ததாரர் வெளியூரிலிருந்து வேலையாட்களை அமர்த்தினால் அவர்களை அடிப்பது, மிரட்டுவது என்று சகட்டுமேனிக்கு அட்டகாசம் செய்வது என்று அவர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகும். சமரசம் செய்ய உள்ளே வரும் அரசியல்வாதிக்கு பணம் கொடுத்தால் தான் சமரசம். இல்லையேல் வேலைநிறுத்தம்.
 
            ஆக நமக்காக அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டப்பணிகள் நம்மை வந்து அடையாததற்கு, நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் தான்  காரணம் என்பது புலனாகிறது. சரியானவர்களை தேர்ந்தெடுக்காமல், பணத்திற்கு ஆசைப்பட்டு யாரையோ தேர்ந்தெடுத்து நமக்கு நாமே 'ஆப்பு' வைத்துக்கொள்கிறோம். இனியாவது திருந்துவோம்.

Saturday, November 10, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Friday, October 19, 2012

தமிழ்சினிமாவும் அரைத்தமாவும்:

நமது தமிழக திரைப்படங்களை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட சலிப்புணர்வை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்துகிறேன். எனக்கு தோன்றியதையும் காதால் கேட்ட சிலவற்றையும் தொகுத்துள்ளேன். அரைத்த மாவாக இருந்தாலும் ( அதாவது வேறு எங்காவது படித்த மாதிரி தோன்றினாலும்) மீண்டும் ஒருமுறை ருசித்துதான் பாருங்களேன்.
 
1. கதாநாயகன் / கதாநாயகியின் தோழர்கள்/தோழிகள் முழு ஒப்பனையிலும் சுமாராக தான் இருப்பார்கள்.
2. கதாநாயகி அறிமுக காட்சியில் ஒரு குழந்தையையோ அல்லது வயதானவர்களையோ நெரிசல் மிக்க சாலையை கடக்க உதவுவார். அதுவே கதாநாயகனுடன் செல்லும் பொது கடக்க பயப்படுவார். கதாநாயகன் அணைத்தபடி அழைத்து செல்வார்.
3.  கதாநாயகியின் தந்தை நிச்சயம் காமெடியன் அல்லது வில்லன்.
4. கதாநாயகனின் தந்தை நேர்மையான காவல்துறை அதிகாரி / ஆசிரியர் / நாட்டாமை.
5. எல்லா காமெடியன்களும் வேலை தேடுவார்கள் அல்லது வெட்டியாய் ஊர் சுற்றுவார்கள்.
6. கிராமத்தில் பிறந்து வளர்ந்த கதாநாயகி மாடர்ன் உடையணிந்து வெளிநாட்டில் பாட்டு பாடி ஆடுவாள்.
7. வெறுமனே சுற்றும் கதாநாயகன் துப்பாக்கி எடுத்து குறி தவறாமல் சுடுவார். ஆனால் நன்கு பயிற்சி பெற்ற போலீசோ / தீவிரவாதியோ குறி தவறியே சுடுவார்கள்.
8. 100 அடியாட்கள் வந்தாலும், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து தான் அடிவாங்குவார்கள்.
9. காக்கை குரல் கதாநாயகன் கூட குயில் குரலில் பாடுவான்.
10. கதாநாயகனின் காதலுக்கு உதவி செய்வது மட்டுமே நண்பர்களின் வேலையாக இருக்கும்.
11. நண்பர்கள் சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டு பில்லை செலுத்த கதாநாயகனிடம் கையேந்துவார்கள்.
12. காதலர்கள் ஓடிப்போகும் போது ஊரே திரண்டு துரத்திவரும். ஆனால் அவர்கள் காதலிக்கும் போது ஊருக்குள் தான் சந்தித்துக்கொள்வார்கள். யாருக்குமே தெரியாது.
 
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
 
இவற்றில் சில உலக சினிமாவுக்கும் பொருந்தும். ஆயினும் தமிழர்களாகிய நாம் இன்னும் இதில் கூட முன்னேறாமல் பழைய மாவையே மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தரம் என்று சொல்லிக்கொண்டு, உலக சினிமாக்களின் DVD யை வாங்கி அப்படியே தமிழ் திரைப்படமாக எடுத்து, தமிழ் சினிமாவை 'உலக தரத்திற்கு' உயர்த்தும் நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கும் வரை நாம் இந்த இந்த கொடுமையை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த லட்சணத்தில் தயாரிப்பு செலவை பார்க்கும் போது திரையரங்கு நுழைவு கட்டணம் 'குறைவுதான்' என்று அறிக்கை விடும் சிலரை என்னவென்று சொல்வது?

Thursday, September 27, 2012

சிந்திக்க ஒரு நொடி:

        வழக்கமான எனது பயணத்தின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டொரு நாட்களுக்கு முன்பு மழை பெய்யும் நேரத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டி வந்தது. மழையென்றால் வெறும் தூறல் அல்ல. பேரிடி மின்னலுடன் கூடிய பெருமழை. நான் பயணம் செய்த பெட்டியில் சில மாணவர்களும், மாணவ பருவ காதலர்கள் சிலரும், பொதுமக்கள் பலரும் இருந்தனர். அந்த மழையில் ஏற்படும் குளிரில் உடலில் சில மாற்றங்கள் வரும் என்பது இயற்கை தான். வயதானவர்களுக்கு நடுக்கமும், இளம் வயதினருக்கு ஒரு வித கிறக்கமும், குழந்தைகளுக்கு குதூகலமும் நிச்சயம் ஏற்பட வேண்டும். அதுதான் மழையின் சக்தி. சிறியவர் முதல் பெரியவர் வரை மழையில் நனைய உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அது நிறைவேறுவது சிலருக்குதான். ஜலதோஷம், ஜுரம் என்று பயந்துகொண்டு நானும் சற்று தள்ளியிருந்தேன்.
          நான் தள்ளித்தள்ளி சென்றாலும் மழை என்னை விடுவதாயில்லை. நான் நகர்ந்து அமர்வதும் அது என்னை நனைப்பதும் என்று ஒரு விளையாட்டு போலவே வெகு நேரம் சென்றது. சட்டென்று ஏதோ தோன்ற, வாயிலை நோக்கி பார்வையை திருப்பினேன். அப்பொழுதுதான் தெரிந்தது. அங்கே மாணவர்கள் சிலர் நின்று கொண்டு கதவை திறப்பதும், நனைவதும் பின்பு அடைப்பது போல் அடைத்து விளையாடுவதும் தான் நான் நனைய காரணம் என்று. அவர்களின் சேட்டை அருகிலிருக்கும் அனைவரையும் எரிச்சலூட்டும் வகையிலேயே இருந்தது. ஆனாலும் அவர்களை அதட்ட அங்கு யாருமில்லாதது கண்டு (என்னையும் சேர்த்துதான்) நிச்சயம் ஒரு கணம் திகைத்துதான் போனேன். காரணம் ஆக்கசக்தியாக உருவாக வேண்டிய மாணவ சக்தி இப்பொழுதெல்லாம் அழிவுசக்தியாகிப்போவது தான் காரணம் என்று என்னுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் புலம்பல் என்னுள் ஏதோ செய்தது.
 
          இங்கிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவன் தனது கைசெலவிற்கு பகுதிநேர பணிசெய்கிறான். அங்கிருக்கும் சட்டங்களை மதிக்கிறான். ஒழுக்கத்தை கடைபிடிக்கிறான். ஆனால், உள்நாட்டில் படிக்கும் மாணவனுக்கு இவை பொருந்தாமல் போவது வியப்பளிக்கிறது. பெற்றோர் பணத்தில் ஆட்டம் போடும் இவர்களைப்போன்ற இரண்டாம்தர மாணவர்களால், மாணவ சமூகதிற்கே இழுக்கு. மாணவ சமுதாயம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறை இந்தியாவிலேயே இல்லையா? தனக்கு பிரச்சினை என்றால் பேருந்தின் கண்ணாடி உடைக்கும் மாணவன், சக மாணவனுக்கு பிரச்சினை என்றால் ஒன்று கூடி போராடும் மாணவர்கள் ஒரு சுயநல கூட்டமாகதான் எனக்கு தெரிகிறது. இன, மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்கும் ஒரு சமூகம் 'மாணவர்கள்' தான். அவர்கள் படிக்கும் வயதில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அதற்கு மற்றவர்களின் உணர்வுகளை பலி கொள்வது எந்தவித்தில் நியாயம் என்றுதான் புரியவில்லை.
 
          சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்று நாடே கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இதில் 'பேருந்து நாள்' கொண்டாட்டம் தான் ரொம்ப முக்கியம். ஊழலும், வன்முறைகளும் மலிந்து கிடக்கும் மண்ணில் உங்களின் கேலிக்கூத்து நிச்சயம் ஒருநாள் அனைவரையும் பார்த்து கேலியாய் சிரிக்கத்தான் போகிறது. மாணவர்களே! அரட்டையும் வேண்டும், கேலி கிண்டலும் வேண்டும். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதோடு கொஞ்சம் பொறுப்பும் வேண்டும். நாடு உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்களோ 08:40 க்கு வரும் 'ஃபிகர்' க்காக காத்துக்கிடக்கிறீர்கள். காதல் வேண்டும். தப்பில்லை. அது பொது இடத்தில் வேண்டாம். சிந்தியுங்கள்.
 
        (பொது இடத்தில் அட்டூழியம் செய்யும் மாக்களை, மக்கள் நிச்சயம் தட்டிக்கேட்க வேண்டும்)

பள்ளிக்குழந்தைகளும் பாதுகாப்பும்:

        " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி " என்று ஒரு திரைப்பாடல் உண்டு. இன்றைய நாளிதழ்களில் கண்ணில் அடிபடும் முக்கியமான செய்தி 'குழந்தைகளுக்கு' ஏற்படும் விபத்துதான். நாளை சரித்திரம் படைக்கும் என்று எண்ணிய குழந்தை விபத்தில் மாள்வது பெருந்துயரம். எப்பொழுதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு இப்பொழுதான் வெளிச்சத்திற்கு வருகிறதா? அல்லது இப்பொழுது விபத்துகள் அதிகமாகிவிட்டதா? என்ற விவாதத்தை விடுத்து கொஞ்சம் சிந்திப்போம்.
 
         குழந்தைகளுக்கு இப்பொழுது பாதுகாப்பே இல்லையோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்துகள். பள்ளியின் உள்ளே பாதுகாப்பது பள்ளியின் கடமை. அதுபோல், பள்ளியை விட்டு வெளியே வரும் குழந்தை வீடு சேரும்வரை பாதுகாக்கவேண்டியதும் பள்ளிதான். பள்ளியின் வளாகத்தை தாண்டிவிட்டால் எங்களின் பொறுப்பல்ல என்று கூறும் நிர்வாகம் நிச்சயம் தம் கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எங்கோ ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நடந்த போட்டியில் வெற்றிப்பேற்ற மாணவன் 'எங்கள் பள்ளியில்' தான் படிக்கிறான் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் தேடும் பள்ளி நிர்வாகம் நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கவேண்டும். எங்கள் பள்ளி பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 
            பள்ளி வாகனம் வந்தது. குழந்தையை அனுப்பிவிட்டேன். என் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோரே! கொஞ்சம் சிந்தியுங்கள். வண்டியின் தரம், ஓட்டுனரின் நிலைமை, வண்டியில் அவசர உதவிக்கு ஆள், அவசர அழைப்பு எண்கள் இவை அனைத்தையும் சரிபார்க்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா. 100 ரூபாய் புடவையை 1000 முறை பிரித்து பார்க்கும் பெண்கள் ஏனோ இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. ஒரு ரூபாய் செலவு செய்வதற்கு ஓராயிரம் முறை யோசிக்கும் பெற்றோர்கள் கூட தான் கட்டும் கட்டணத்திற்கு இந்த பள்ளி உகந்தது தானா? பாதுகாப்பு எப்படி? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அதேபோல் வெறுமனே சமூகத்தில் ஒரு 'STATUS' க்காக ஒரு பள்ளியில் சேர்ப்பதும் கூடாது.
 
           சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் தான் காரணமென்றாலும், நமது கையாலாகாதத்தனமும் ஒரு காரணம். சாலையில் பாதுகாப்பாக வர வேண்டும் என்று நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதே இல்லை. சொன்னால் மட்டும் கேட்டு விடப்போகிறானா? என்கிற அலட்சியம். 'எறும்பூற கல்லும் தேயும்' இது பழமொழி. சாலை பாதுகாப்பு விதிகளை குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது பள்ளி மற்றும் பெற்றோரின் கடமை. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மட்டுமே இத்தகைய சாலை விபத்துகளை தடுக்க ஒரே வழி. அதே போல் பெற்றோர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வே குழந்தைகளை பாதுகாக்கும்.
 
          வெறும் முதல் மதிப்பெண் மட்டும் போதும். மற்றதெல்லாம் எனக்கும் தேவையில்லை என்றிருக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும் ச்சயம் நான் சொல்வது ஏதோ புரியாத புதிர் போலதான் தெரியும்.

Thursday, September 6, 2012

வளர்ப்பு பிராணிகள்:

             உங்களில் பலரின் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கும். அப்படி இல்லாயென்றால் உடனே ஒன்றினை உடனே வளர்க்க ஆரம்பியுங்கள். இதை நான் சொல்லவில்லை. மேற்கத்திய நாடுகளில் 'மனோதத்துவ' நிபுணர்களின் பரிந்துரை. எந்திர மயமாகிப்போன யுகத்தில் யாரிடம் எப்பொழுது கேட்டாலும் 'மன உளைச்சல்'. பணிச்சுமை காரணமாக நம்மில் பலருக்கும் 'மன அழுத்தம்' அதிகமாகி, மற்றவர்கள் மேல் எரிச்சலை கொட்டுகிறோம். இதனால் மனித உறவுகளில் விரிசல். நிம்மதி இல்லாத வாழ்க்கை. ஆனால் இதற்கெல்லாம் மருந்து 'வளர்ப்பு பிராணிகள்'.
 
               கிளி, புறா,பூனை, மீன், லவ் பேர்ட்ஸ், தவளை, ஆமை, பச்சோந்தி என்று எவ்வளவோ 'pets' இருந்தாலும் இவற்றில் முதலிடம் 'நாய்' க்கு தான். எஜமானர் எந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலும் அதனை மோப்பம் பிடித்து வாலாட்டிக்கொண்டே குழைந்துவரும் நாயை அவ்வளவு சீக்கிரம் யாரும் வெறுத்துவிட முடியாது. அப்படியே நீங்கள் உங்களின் கோபம் முழுவதையும் கொட்டினாலும் தன் முகத்தில் ஒரு விதமான ஏக்கத்தை புதைத்துக்கொண்டு தான் முன்னங்காலினால் உங்களுக்கு  'கைக்கொடுக்க' முயற்சிக்கும். இன்னமும் நீங்கள் உங்கள் மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பொருளை உங்கள் முன் கொண்டுவந்து போட்டு உங்களை சாந்த படுத்த முயற்சிக்கும். நமது குடும்ப அங்கத்தினர்களையும் தாண்டி நம் மீது அக்கறை கொள்ளும் ஒரு ஜீவன் எப்படி வெறும் 'விலங்கினமாக' இருக்க முடியும்.
 
                கலப்பின, உயர்ந்த ரக நாய்கள் தான் நகர சூழலுக்கு ஏற்றது என்று நம்மில் பலர் தவறாக கணக்கு போடுகிறோம். நமது தெருவில் விளையாடும் நாய்கள் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. கொஞ்சம் அக்கறை கொண்டால் அழுக்கான தெருநாயும் சுத்தமாகும். கொஞ்சம் பாசம் வைத்தால் தெரு நாய்க்கும் ஒரு உறவு கிடைக்கும். பிரபல நடிகையை பார்த்து சொல்லவில்லை. நானும் ஒரு நாய் வளர்த்தேன். அது சாதாரண ரக நாய்தான். ஆயினும் அது அன்பில், அக்கறையில், விசுவாசத்தில் உயர்ந்த ரகம். நள்ளிரவில் வீடு திரும்பினாலும் எனக்காக காத்திருந்து, நான் வந்த பின்பு என்னுடன் 5-10 நிமிடங்கள் செலவழித்த பின்பு தான் உறங்க செல்லும். பலமுறை நான் வரும் வரை சாப்பிடாமல் கூட காத்திருந்த நாட்கள் உண்டு. வயோதிகம் அதனால் மரணம். இருப்பினும் எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் வாழ்கிறது.
 
               ஒரு விஷயம் தான் புரியவில்லை. எனது செல்ல பிராணி இறந்த பின்பு எனக்கு வேறு ஒரு 'pet' வைத்துக்கொள்ள தோன்றவில்லை. குடும்பத்தினர் வற்புறுத்தலால் ஒரு நாயை வளர்க்க நினைத்தாலும் மனம் பழைய நாயையே இந்த புதிய உறவிலும் தேடுகிறது. அது கிடைக்காத பட்சத்தில் மனம் மற்றொரு செல்ல பிராணியை ஏற்றுக்கொள்வதில்லை. அதே போல் வளர்ப்பு பிராணிகளும் 'ஒரே ஒரு' எஜமானரை தான் ஏற்றுக்கொள்ளும். மற்றவர்கள் மேல் பாசம் காட்டினாலும் 'எஜமானர்' ஒருவரே. இந்த ஒரு வினோதமான பாசப்பிணைப்பு நிச்சயம் உன்னதமானது தான். ஆதலினால் செல்ல பிராணிகளை  வளருங்கள். அது எந்த உயிரினமாகவும் இருக்கலாம். சமீபத்தில் ஒருவர் 'மலை பாம்பை' செல்ல பிராணியாக வளர்ப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

Thursday, August 30, 2012

முன்னிரவு பயணம் :

மெல்லியதாய் தூறல் போடும் வானம்
கையில் படபடக்கும் கவிதை புத்தகம்
காதில் பண்பலை வழியே இளையராஜா!
 
அருகில் அரட்டை நண்பர்கள் இல்லை!
வீண் கதை பேசும் மனிதர் கூட்டம் இல்லை !
 
யாருமில்லா ரயில்பெட்டியில்
தன்னந்தனியே நான் மட்டும்
இருளின் துணையோடு !
 
சிலசமயம் எனது முன்னிரவு
பயணங்கள் இப்படித்தான்
அமைந்து விடுகிறது
நான் படிக்கும் கவிதை போலே
தித்திப்பாய்!