இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, February 8, 2013

விஸ்வரூபம் - திரைவிமர்சனம் அல்ல

          ஒவ்வொரு முறையும் நான் எழுத அமரும்போது, இந்த தலைப்பில் இவ்வாறெல்லாம் எழுதவேண்டும் என்று நினைப்பதில்லை. அவ்வாறு நினைத்து அமர்ந்த நாட்களில் எழுத்துக்கள் கிடைக்கவில்லை. எழுத்தே இல்லையெனில் வார்த்தைக்கு எங்கு போவேன். ஆதலால் எழுதுவதை விடுத்து கிறுக்க ஆரம்பித்துவிடுவேன். பின்பு அதற்கு 'கவிதை' என்று தலைப்பிட்டு வெளியீட்டு விடுவேன். இப்படித்தான் எனது வலைபக்கத்தில் கவிதைகள் முளைத்தன. என் நண்பர்கள் அவற்றையெல்லாம் படித்துவிட்டு, உரைநடை வடிவில் ஏதோ சிறியதாக இருந்தது, என்ன அது? என்று கேட்டு என்னை வெறுப்பேற்றி விளையாடுவதுண்டு. அதற்கெல்லாம் கவலைப்படுவேனா! விடாமல் கிறுக்கிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
 
           இலக்கண பிழை இல்லாமல் எழுத முயன்றதுண்டு. ஆனால் நமது கல்விமுறை அவ்வாறு எனக்கு பயிற்றுவிக்கவில்லை. மதிப்பெண்கள் பெற மனனம் செய்யும் முறையே சரியென்று போதிக்கபட்டதால், அன்று மனப்பாடம் செய்த உரைநடை வாக்கியங்கள் இன்று எனக்கு கைகொடுக்கவில்லை. ஏனெனில், நான் என் எண்ணப்படியே எழுத நினைக்கிறேன். என் எழுத்துக்களை நான் ஆள நினைக்கிறேன். பலமுறை தோற்றுப்போய் அதன் வழியே போய் என் படைப்புகளை வடித்ததுண்டு. இந்த பதிவும் அப்படித்தான். இந்த எழுத்துக்கள் தானாக உருவானவை. என்னால் எழுதப்பட்டன. அவ்வளவே!
 
              ஒரு சிறந்த எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை. எனக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு எழுத்து-வடிவம் கொடுக்கவே இப்பணியை தொடங்கினேன். கொடுக்கப்படும் வடிவம் அனைவருக்கும் புரியவேண்டும் என்று எண்ணியதால் என் தமிழில் தொடர்ந்தேன். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழ், என்னையும் உள்வாங்கி, இப்பூவுலகெல்லாம் பரப்பியது. இன்று இந்த எழுத்தினை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்து, என்னை மகிழ்ச்சியுற செய்துள்ளனர். நான் கற்ற தமிழில் என் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். ஆகையால் இந்நாள் வரை, இப்பொழுது வரை எனது எழுத்துக்களை படித்த, படிக்கும் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நன்றிகள். உங்களின் வாசிப்பை நான் பணமாக்குவதில்லை. அதில் எனக்கு உடன்பாடுமில்லை.
 
            விஸ்வரூபம் என்கிற இந்த தலைப்பு கமலுக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருந்தும், இந்த பதிவிற்கும் பொருந்தும். இன்னொரு முறை படித்து பாருங்கள்.