இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, February 4, 2013

பெண்களுக்கெதிரான வன்கொடுமை:

         இன்று இந்திய மண்ணில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் 'பெண்களுக்கெதிரான வன்கொடுமை'. வெகு சாதாரணமாக நடந்தேறும் கொடுமைகளினால் பாதிக்கப்படும் பெண்கள், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைந்து கொள்வதால் இப்பொழுது 'பெரும்' கூட்டமாக சேர்ந்து போராடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். மாறி மாறி அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் செய்திதாள்களில் வெறும் செய்தியாக மட்டுமே வந்து போன 'டெல்லி' விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு. அரசு தரப்பு 'ஆழ்ந்த' அனுதாபங்களையும், 'அதிர்ச்சியையும்' வெளிப்படுத்தி தனது கடமையை முடித்துக்கொண்டது. பின்பு ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதாக சொல்லியதோடு சரி. தேர்தல் வருகிறதே. வேறென்ன செய்ய !!!
 
         ஒரு வார இதழில் ஒரு எழுத்தாளர் இப்படி பொருள்படும்படி எழுதியிருந்தார், 'நாமெல்லாம் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கயவர்கள்' என்று. படித்த கணத்தில் கோபமுற்றாலும், சிறிது அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து சிந்தித்து பார்த்ததில், அது 100% உண்மை என்ற விஷயம் மண்டையில் உரைத்தது. எத்தனைபேர் இக்கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
 
         காலை முதல் மாலை வரை மதுபானக்கடை திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் (18+) எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். அப்படியே பக்கத்தில் இருக்கும் திரையரங்கத்திற்கு சென்று அங்கு ஓடும் இரண்டாம்தர திரைப்படங்களை பார்க்கவேண்டியது. வெளியே வந்து குற்றத்தில் ஈடுபடுவது. இப்படித்தான் நமது நாட்டில் குற்றம் ஆரம்பமாகிறது. இதனை தடுக்கவேண்டிய அரசு 'உயர்ரக மதுபானக்கடை' திறக்க நினைக்கிறது. சமூக நலவிரும்பிகள் 'பெண்களின் கவர்ச்சியான ஆடை', 'ஆண்களின் வக்கிரபுத்தி', 'பெண்களின் இரவுப்பயணம்', அது இது என்று தங்களுடைய கருத்தை பதிவு செய்துவிட்டு கடமை முடிந்ததென்று அமர்ந்து விடுகின்றனர். இன்னும் சிலரோ நாம் நாட்டில் கல்விதிட்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டுமென்று போர்க்கொடி தூக்குகின்றனர்.
 
        அய்யா, உயர்ந்தோர்களே! எவ்வளவு படித்தாலும், எந்த நாட்டில் போய் படித்தாலும், ஒருவன் 'குடித்தால்' அவன் மூளை வேலை செய்யாது. மூளை இல்லாதவனிடம் 'மனிதனை' எதிர்பார்க்க முடியாது. அப்புறம் சட்டமென்ன! ஒழுங்கென்ன! படிப்பதால் மட்டுமே ஒருவன் ஒழுக்கமுடையவன் ஆவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தீவிர மதுவிலக்கு ஓரளவிற்கு, ஆம் மக்களே, ஓரளவிற்கு மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்கும். மீதி தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே விளையும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. நமது பண்பாடு என்பது பெண்களுக்கு விலங்கு பூட்ட அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால், நாட்டில் பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறைந்து விடும்.
 
      பெண்களே! வக்கிர எண்ணமுடையவர்கள் வாழும் இந்த மண்ணில் உங்களை காத்துக்கொள்வது உங்கள் கடமை. தயவு செய்து  தற்காப்பு கலை ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டுத்தள்ளுங்கள்!