இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, August 21, 2012

பெண்களும் ஆடை பிரச்சனையும்:

              சமீபத்தில் வடகிழக்கு மாநிலமொன்றில் நடந்த அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை உலகமறிய செய்தது. ஆண்கள் பெண்களைப்பார்த்து 'செக்ஸி' என்று சொல்வது பெண்களை ஊக்கப்படுத்தும் வார்த்தை, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார் ஒரு இந்திய பெண்மணி. அவரின் பேச்சு 'மட்டும்' விமர்சனதிற்குள்ளானது. மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வடகிழக்கு மாநில நிகழ்வுக்கு பிறகு 'பெண்களின்' ஆடைகள் தான் இவ்வாறு தவறு செய்ய 'ஆண்களை' தூண்டுகிறது என்றார் இன்னொருவர். அவரும் பெரியமனிதர் தான். அதனால் தான் என்னவோ அவரின் வார்த்தைகளுக்கு எதிர்ப்பாக வெறும் விமர்சனம் மட்டுமே எழுந்தது. இதனை பிரபல வாரப்பத்திரிக்கை ஒன்றில் விமர்சித்து எழுதிய ஒரு எழுத்தாளர் " கண்ணியமாக ஆடை அணிந்து வீட்டிற்குள்ளே இருக்கும் பெண்களுக்கு கொடுமைகளே நடக்கவில்லையா?" என்று வினா எழுப்பியுள்ளார். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, "பெண்களின் முன்னேற்றத்தை இந்த சமுதாயம் முடக்க நினைக்கிறது" என்று தன் உள்ளக் குமுறலை வெளியிடுகிறார் பெண் விடுதலை பற்றி மட்டும் 'பேசும்' ஒரு சமூக சேவகி. எல்லாம் சரிதான். ஆனால் தீர்வு என்ன?
 
               சுயமாக சம்பாதிக்கும் பெண் தான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் தனக்கென செலவு செய்கிறாள். நல்ல உடை, நான்கு பொது இடங்களுக்கு செல்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இரவில் பணிக்கு செல்வது என்று எல்லாமே செய்ய முடிகிறது. இது அவர்கள் சுதந்திரம். அவர்களின் சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் கூட்டம் 'சமூக விரோத' செயல்களில் ஈடுபட்டு அனைத்தையும் சீர்குலைக்க நினைக்கிறது. இது நான் சொலவது அல்ல. பெண்ணுரிமை பேசும் பலரின் வாதம். அவர்களிடம் நான் சில விஷயங்களை கேட்க நினைக்கிறேன்,
 
1. பெண்கள் அதிகம் படித்து வேலைக்கு சென்று சம்பாதிப்பது வெறும் 'ஆடம்பரத்திற்கு' தானா?
2. பெண்களுக்கு 'ஆடை' விஷயத்தில் கவனம் தேவை என்று சொல்வது 'அடக்குமுறையா' ?
3. நாகரீகமான பெண் சந்திக்கும் 'ஆண்கள்' அனைவரும் நாகரீகமானவர்கள்' என்று உத்திரவாதம் உள்ளதா?
4. உடலை ஒட்டிக்கொள்ளும் ஆடை நமது நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததா?
5. 'லெக்கிங்க்ஸ்' இந்த உடை (என்னது இது உடையா) பெண்களின் அழகை காட்டுகிறதா? இல்லை, உடல் வளர்ச்சியை காட்டுகிறதா?
 
             இன்னும் நிறைய கேள்விகள் உண்டு எனக்குள். ஒருவர் வெறுமனே சம்பாதிப்பதால் மட்டுமே அவருக்கு சுதந்திரம் வந்துவிடாது. பெண் சுதந்திரம் என்பது வேறு. கட்டுபாடு இல்லாமல் ஊர் சுற்றுவது என்பது வேறு. வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் வருவது பொருளாதார சுதந்திரம். அதனால் நான் கண்டபடி அலைவேன், இஷ்டப்படி ஆடை அணிவேன், நேரம் காலம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் போவேன் என்று சொல்வீர்களேயானால் மன்னிக்கவும், நீங்கள் நிச்சயம் தவறான பாதையில் 'அதிவேகத்தில்' பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம். நாம் என்ன 100% படித்தவர்கள் மத்தியிலா வாழ்கிறோம். ஆண்கள் என்கிற போர்வையில் 'காம' மிருகங்கள் அலையும் நாட்டில் தம்மை தற்காத்து கொள்வது பெண்களின் கடமையல்லவா?